Tamiloviam
ஜூன் 11 2009
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
சிறுகதை : கனவுகள் மெய்ப்படும்
- "வினையூக்கி" செல்வா
  Printable version | URL |

 

பொய்யாக நான் உருவாக்கிய கதைகளை நம்பி என்னைத் திருமணம் செய்து கொண்ட கீர்த்தனாவிற்கு இன்று பிறந்த நாள். இதே செப்டம்பர் 4 ஆம் தேதி அன்றுதான் கீர்த்தனாவிடம் 7 வருடங்களுக்கு முன்னர் என் விருப்பத்தை முதன்முறையாகச் சொல்லி நிராகரிக்கப்பட்டேன். என் காதலை மட்டும் நிராகரித்து, என்னை நல்ல நண்பனாக அங்கீகரித்த அவளை எப்படி கல்யாணம் வரை சம்மதிக்கவைத்தேன் என்பதன் பின்னணியை இதுவரை நான் கீர்த்தனாவிடம் சொன்னதில்லை.

கனவுகள் மெய்ப்படும் என்பர், ஆனால் என் கனவுகளால் என் காதல் எப்படி மெய்ப்பட்டது என்பதை அவளிடம் எப்படியாவது சொல்லிவிடவேண்டும்.

"அம்மு, போன் ஆன்னிவர்ஸெர்" அஞ்சலிப்பாப்பாவை அரவணைத்து படுத்து இருந்த கீர்த்தனாவை நெற்றியில் முத்தமிட்டு எழுப்பினேன்..

"கார்த்தி, சூப்பர் கனவு போச்சு, இன்னக்கி லீவுதானே, தூங்கவிடு பிளீஸ்" கீர்த்தனாவை தூக்கத்தில் எழுப்பினால் எரிச்சல்படுவாள். சிலசமயங்களில் எரிச்சலை மாலை அலுவலகம் முடிந்து வந்ததும் கொட்டித்தீர்ப்பாள்.

"இன்னக்கி மதமசலுக்குப் பிறந்தநாளாம்!!! சீக்கிரம் எழுந்து நாமெல்லாம் அஞ்சலி பாப்பாவோட வெளியிலே ரவுண்டு போறோமாம்"

"இந்த மத்மஸல், மேடம் ஆகி 4 வருஷம் ஆகுது மொன்சியர் கார்த்தி" என சிணுங்கிக்கொண்டே எழுந்து "தக் சே மிக்கெத்" என சொல்லிவிட்டு நான் கையோடு கொண்டு வந்திருந்த காப்பியைக் குடிக்க ஆரம்பித்தாள்.

சுவீடன் வந்து இரண்டு வருடம் ஆகியும் கீர்த்தனாவிற்கு தெரிந்த ஒரே ஸ்வீடீஷ் மொழிவாக்கியம் "தக் செ மிக்கெத்" என்பது தான். அவள் பிரெஞ்சு வார்த்தைகளைத் தெரிந்து கொள்ள காட்டிய ஆர்வம் ஸ்விடீஷிற்கு காட்டவில்லை.

"அம்மு, மியால்பி போறோம்.. இன்னக்கி ஒரு ஃபுட்பால் மேட்ச் இருக்கு... நீதான் கார் ஓட்டுற!!"

கீர்த்தனாவிற்கு வண்டி ஓட்டுவது என்றால் கொள்ளைப்பிரியம். அதுவும் கண்ணுக்கெட்டிய தூரம் வாகனங்கள் ஏதுமில்லா சுவீடன் நெடுஞ்சாலையில் 120 கிமீ வேகத்தில் செல்வதென்றால் கேட்கவா வேண்டும். இன்றைக்கு மியால்பி போகும் வழியில் அவளிடம் சில உண்மைகளைச் சொல்லிவிட வேண்டும் என நினைத்துக்கொண்டேன்.

கோடைகாலம் முடியப்போகிறதென்றாலும் நல்ல சுளீரென வெயில் அடித்தது. அஞ்சலிப்பாப்பாவை பின் இருக்கையில் அமரவைத்துவிட்டு நான் முன்புறம் வந்தமர்ந்து கொண்டேன். கார்ல்ஸ்க்ரோனாவில் இருந்து கிட்டத்தட்ட 100 கிமீ. 10 ஸ்வீடீஷ் மைல்கள். ரோன்னிபே தாண்டியபொழுது மெல்ல பேச்சை ஆரம்பித்தேன்.

"அம்மு, நாம லவ் பண்ண காலமெல்லாம் உனக்கு ஞாபகம் இருக்கா!!!"

"எப்படிடா மறக்க முடியும்... பொறுக்கி பொறுக்கி" கீர்த்தனா மகிழ்ச்சியான மனநிலையில் இருந்தால் இப்படிதான் பேசுவாள்.

சொல்லாமல் விட்டுவிடலாம். ஆனால் பொய்யான அடித்தளத்தை உருவாக்கி அதன்மூலம் தோழமையைப் பலப்படுத்தி, என்னை நம்பி திருமணம் செய்து கொண்ட கீர்த்தனாவை இத்தனை காலம் ஏமாற்றிக்கொண்டு இருக்கிறேனே என்பது வலிக்கிறது. அவள் என்னைவிட்டுபோனாலும் சரி , சொல்லிவிட வேண்டியதுதான்.

"அம்மு, நான் சொன்ன கனவு எல்லாம் ஞாபகம் வச்சிருக்கியா!!!"

"எப்படி கார்த்தி மறக்கமுடியும்.... நீ கண்ட கனவுகள் தாண்டா நம்மளைச் சேர்த்து வச்சது"

ஆமாம். கீர்த்தனா சொல்வது உண்மைதான். எங்களின் நட்புக்காலத்தில் அடிக்கடி நான் கண்ட கனவுகளைப்பற்றி விலாவாரியாகச் சொல்வேன். பெரும்பாலான கனவுகள் அவளும் நானும் சம்பந்தப்பட்டதாக இருக்கும்.. இப்பொழுது கீர்த்தனாவிடம் நான் சொல்லப்போகும் உண்மை என்னவெனில் அந்தக்கனவுகள் எதுவுமே நிஜம் கிடையாது. நான் அவளை என் பக்கம் திருப்ப சொன்ன கற்பனைகள் மட்டுமே என்பதுதான். நான் சொன்ன பெரும்பாலான கற்பனைக் கனவுகள் நடந்துவிட்டதாலும், அப்படி நடக்காவிட்டால் என்னுடைய முயற்சிகளினால் நான் அதை நடத்திக்காட்டியதாலும் என் மீதான ஈர்ப்பு காலஓட்டத்தில் எதிர்பார்த்ததைவிட அதிகமாகி கடைசியில் என்னிடம் சரணடையச் செய்தது.

"அம்மு, நான் கனவு கண்டேன்னு சொன்னதெல்லாம் பொய்டா ... நான் உனக்கு சொன்ன கனவெல்லாம் நான் இமேஜின் பண்ணி சொன்னதுடா அம்மாடி!! அந்த சிச்சுவேஷன்ல நீ என்கிட்ட வரனும்னு நானே பில்டப் பன்ணது"

கீர்த்தனாவிடம் இருந்து பதில்வரவில்லை. சலனமே இல்லாமல் வண்டியைச் செலுத்திக்கொண்டிருந்தாள்.

"சாரிடா... நீ வேணும்னுதான் அப்படி செஞ்சேன்!!! எத்தனை தடவை நான் மனசுக்குள்ளே அழுது இருக்கேன் தெரியுமா!! நீ என்ன தண்டனைக் கொடுத்தாலும் நான் அக்செப்ட் பண்ணிக்கிறேன்"

கார்ல்ஷாம்ன் நகரத்தின் வாசலில் இருந்த மெக்டோனால்ட்ஸ் உணவகத்தின் வண்டியை நிறுத்திவிட்டு அஞ்சலிபாப்பாவை கையில பிடித்துக்கொண்டு விடுவிடுவென உள்ளே நடந்து போனவளை லேசான பயத்துடன் பின் தொடர்ந்தேன்.

எனக்கும் சேர்த்து தேவையானவற்றை சொல்லிவிட்டு உட்கார்ந்திருந்தவளுக்கு எதிராக அமர்ந்தேன். அஞ்சலிபாப்பா கீர்த்தனாவின் கன்னத்தை வருடிக்கொண்டிருந்தது. அஞ்சலிப்பாப்பா, கீர்த்தனா கோபமாய் இருக்கிறாள் என்று புரிந்துகொண்டால் கன்னத்தை வருடிக்கொடுக்கும். அப்படியே அம்மா மாதிரி... நான் ஏதேனும் கோபமாய் இருந்தால் கீர்த்தனாவும் இப்படித்தான் கன்னத்தை வருடிக்கொடுப்பாள்.

"அம்மு... சாரிடா!!!"

மெலிதான புன்னகை வரவழைத்துக்கொண்டு "இட்ஸ் ஓகே கார்த்தி" என்று அஞ்சலிப்பாப்பாவிற்கு பிரெஞ்ச்பிரைஸ் ஊட்டிவிட்டுக்கொண்டே சொன்னாள்.

எனக்கு வியப்பு மேலிட " எப்படிடா மா... கோவமில்லையா!! "


"கார்த்தி, ஆக்சுவலி உனக்கு வந்ததா நீ சொன்ன கனவுகள் எல்லாமே எனக்கு ப்ரீவியஸ் டேஸ் ஏ வந்த கனவுகள்.. என் ஆழ்மனசு விசயங்கள் அப்படியே உனக்கும் கனவுகளா வந்துச்சுன்னு சொன்னதுனாலதான் உன்னை எனக்கு ரொம்பப்பிடிச்சது.. நீ
கில்டியா எல்லாம் ஃபீல் பண்ண வேண்டாம்... உனக்கு கனவா வரலாட்டியும் எனக்கு ஏற்கனவே வந்த கனவுகளை உன்னாலே அப்படியே சொல்ல முடிஞ்சதுதானே... ஸோ வீ ஆர் மேட் ஃபார் ஈச் அதர்... டோண்ட் வொரிடா பொறுக்கி!!! என ஒரு பிரெஞ்ச்பிரைஸ் எடுத்து எனக்கும் ஊட்டிவிட்டாள்.

oooOooo
                         
 
"வினையூக்கி" செல்வா அவர்களின் இதர படைப்புகள்.   சிறுகதை பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2008 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |