படித்தது போதும், ஏதாவது ஒரு வேலைக்கு போ என்று எனது அம்மா சொன்ன பொழுது அதன் வலி தெரியவில்லை. வேலைக்கு சேர்ந்த பின்பு தான் அதன் வலி, கஷ்டம் தெரியுது என்கிறார் சரவணண். இவர் வேலை செய்யும் இடம் ஒரு ரோட்டின் ஓரத்தில் இருக்கக் கூடிய ஒரு சிறிய மரக் கூண்டினால் மட்டுமே ஆன சைக்கிள் கடை. இதனை கடை என்று சொல்வது கூட அபத்தம். தெருவோர நடைபாதைக் கடை என்று சொல்லலாம்.
அப்பா, அம்மா கூலி வேலைக்காரர்கள். சொந்தமாக நிலம் எதுவும் கிடையாது. குடியிருக்க சின்ன வீடு இருந்தது. அதிகாலையில் வேலைக்கு சென்ற அப்பா, ஒரு நாள் மாலை நேரத்தில் பிணமாக வீடு வந்து சேர்ந்தார். கை, கால்களில் இரத்தங்கள், அணிந்திருந்த ஆடைகளில் ரத்த கரைகள். அம்மா அழுத, ஓ வென்ற அழுகையோடு சேர்ந்து அழுதேன். 11ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த காலம் அது. அப்பா செத்த 15 நாள் இருக்கும். கடன் கொடுத்த ஒருவர் பணத்தைக் கொடு, இல்லை என்றால் வீட்டை எழுதிக் கொடு, என்று மிரட்ட குடியிருந்த கூரை வீடும் போய் விட்டது. அப்பா எப்படி செத்தார் என்பது எனக்கு தெரியவில்லை. கிணறு வெட்டும் பொழுது மண் சரிந்து விழுந்து இறந்ததாக சொன்னார்கள். அப்பா இருக்கும் பொழுது எங்கள் வீடு நன்றாக இருந்தது. அம்மா, அப்பா, தங்கை, தம்பி சேர்ந்தது தான் எங்கள் குடும்பம். அம்மா ஒரு வாடகை கூரை வீடு பார்த்து அழைத்துச் சென்றாள். எல்லோரும் மழை வர வேண்டும் என சாமி கும்பிடுவார்கள். நான் மழை வர வேண்டாம் என சாமி கும்பிடுவேன். காரணம் எங்கள் வீடு மழைக்கு ஒழுகும். வீட்டினுள் உட்கார, படுக்க முடியாது. அம்மாவின் வருமானம் போதுமானதாக இல்லை. நானும் வேலைக்கு போக வேண்டிய நிலை. சைக்கிள் கடைக்கு போனேன். அதிகாலை 6 மணிக்கு போக வேண்டும். இரவு 10 மணிக்கு வீட்டுக்கு வர வேண்டும். அது ஒரு தெருக் கடை. ஒதுங்க இடம் கிடையாது. வெயிலில் தான் கிடக்க வேண்டும். சைக்கிளுக்கு பஞ்சர் ஒட்டுவது தான் எனது வேலை. ஒரு பஞ்சர் ஒட்ட 4 ரூபாய். ஒரு நாளைக்கு 10 சைக்கிளுக்கு மேல் பஞ்சர் ஒட்டுவேன். மற்றபடி சைக்கிளில் ஏதாவது பிரச்சினை என்று வருபவர்களின் சைக்கிள்களை சரி செய்து கொடுக்க வேண்டும். அதில் கிடைத்த பணத்தை சைக்கிள் கடை ஓனர் வீட்டில் கொடுத்து விட வேண்டும். அவர்கள் எனக்கு ஒரு நாளைக்கு 5 ரூபாய் பேட்டா காசு கொடுப்பார்கள். மாதச் சம்பளம் 600 ரூபாய். இந்த பணத்தை அம்மாவிடம் கொடுத்து விடுவேன். எனது சம்பளம், எனது அம்மா ஒரு நாள் கொண்டு வருகிற கூலி 40 ரூபாய் இதனை சேர்த்து வைத்துத் தான் எங்கள் குடும்பம் ஓடுகிறது. எனது தங்கை, தம்பி படிக்கிறார்கள். படிப்பதற்கு மட்டும் பள்ளி செல்லவில்லை. மதிய சாப்பாட்டிற்காக செல்கிறார்கள். எனக்கும் மதியம் அவர்கள் சாப்பாட்டில் கொஞ்சம் கொடுத்து விட்டுத்தான் போவார்கள்.
நான் சைக்கிள் கடையில் வேலை பார்க்கும் பொழுது படிக்கச் செல்லும் பையன்களின் சைக்கிள்களை சரி செய்து கொடுக்கும் பொழுது அழுகை வரும். அழுதால் ஓனர் கையில் எந்த இரும்பு பொருள் இருந்தாலும் எறிந்து விடுவார். அந்த வலிக்கு செத்தே போயிடுவோம். படிக்க நினைப்பது தப்பா? என்பேன் எனது அம்மாவிடம். நாம் இந்த உலகத்தில் பிறந்ததே தப்புடா என்பாள். ஏன் என்பேன், செத்துப் போன உனது அப்பாவிடம் போய் கேள் என்பாள். நாமும் செத்துப் போவோமா என்பான் எனது தம்பி. எங்களை கட்டிப் பிடித்துக் கொண்டு அம்மா அழுவாள். அவள் கண்ணில் வழியும் கண்ணீர் எப்பொழுதாவது எனது உதட்டில் படும் பொழுது அது கசக்கும். நமக்கு ஆறுதல் சொல்ல, அரவணைக்க யாரும் இல்லை. நாம் தான் நமக்கு என்பாள். மனுஷங்களா பிறந்துட்ட கடைசி வரைக்கும் வாழணும் அவன் தான் ஆம்பளை, பொம்பளை என்பாள் எங்க அம்மா.
நாங்கள் கடைசி வரைக்கும் வாழ்வோம். நான் தனியாக ஒரு சைக்கிள் கடை போட வேண்டும். அதற்கு பணம் சேகரிக்க வேண்டும். எனது அம்மா, தம்பி, தங்கைகளை பார்த்துக் கொள்ள வேண்டும். யாரிடமும் பிச்சை எடுத்துத் தான் வாழக் கூடாது. உழைத்துத் தான் வாழணும். அது தான் மானம், மரியாதையான வாழ்க்கை என்பாள் எங்க அம்மா. நாங்கள் அப்படித் தான் வாழ்வோம் என்கிறார் சரவணண்.
தம்பி, இந்த சைக்கிள்ல பெடல் கழன்டுக்கிட்டே இருக்குப்பா என்னனு பாரு என்கிறார் வாடிக்கையாளர். பார்க்கிறேன் ஸார் என்று சொல்லி, வாடிக்கையாளரின் செருப்பில் இருந்த அழுக்கு, காய்ந்த மாட்டுச்சானி போன்றவை ஒட்டி இருக்கும் பெடலை தனது கையால் தயவு, தயக்கம் இன்றி பிடித்துப் பார்த்து சரி செய்கிறார் சரவணண். இப்படியும் ஒரு வாழ்க்கை.
|