தன் படத்தில் எப்போதும் புதுமைகளை புகுத்தும் மணி, இந்தப் படத்தில் ஆரம்பத்திலேயே வியக்க வைக்கிறார். முதல் காட்சியே ஆட்டோ வில் ஏறிப் போகும் த்ரிஷாவைப் பின்தொடர - சித்தார்த் சூர்யாவிடம் லிப்ட் கேட்கிறார். த்ரிஷா ஆட்டோ வை மடக்கி அவரிடம் சித்தார்த் ஏதோ கெஞ்சிக் கொண்டிருக்கும் வேளையில் அங்கே வரும் மாதவனால் சூர்யா சுடப் படுகிறார். இதைப் பார்த்து அதிர்ச்சியடையும் சித்தார்த் சூர்யாவை ஆஸ்பத்தரியில் சேர்த்து காப்பாற்றுகிறார். யார் இவர்கள் மூவரும் ? மாதவன் ஏன் சூர்யாவைச் சுட்டார் ? என்பதைப் போன்ற பல கேள்விகளுடன் படம் ஆரம்பமாகிறது.
ஒரு வேலை செய்வதால் தனக்கு லாபம் கிடைக்கும் என்றால் அது எத்தகையதாக இருந்தாலும் செய்யும் ஆள் அடியாள் மாதவன். இவர் மனைவி மீரா ஜாஸ்மின். முரட்டுக் கணவன் என்றாலும் பாசம் மிகுந்தவராய் இருப்பதால் மாதவனுடன் அட்ஜஸ்ட் பண்ணிக்கொண்டு குடும்பம் நடத்தும் அருமையான மனைவி. அடிக்கடி தான் செய்யும் அடிதடிகளுக்காக சிறை செல்லும் மாதவன் ஒரு கட்டத்தில் அமைச்சரான பாரதிராஜாவைச் சந்திக்கிறார். கொஞ்ச நாளிலேயே தன்னுடன் மிகவும் நெருக்கமாகிவிட்ட மாதவனிடம், தனக்குத் தலைவலியாக இருக்கும் ஒரு மாணவர் தலைவரைப் போட்டுத் தள்ளும்படி கூறுகிறார் பாரதிராஜா. அந்த மாணவர் தலைவன் தான் சூர்யா. கல்லூரியில் படிக்கும் சூர்யா ஊழல் அரசியல்வாதியான பாரதிராஜாவை எதிர்த்துப் போராடுகிறார். மாணவர்கள் அரசியலுக்கு வந்தால் தான் நாடு உருப்படும் என்ற கருத்தை மிக ஆழமாக நம்புகிறவர். இதற்கிடையே அமெரிக்க கனவோடு வாழ்ந்துகொண்டிருக்கும் சித்தார்த் த்ரிஷாவைப் பார்த்ததும் அவர் மேல் காதல் கொள்கிறார். ஏற்கனவே திருமணம் நிச்சயமான நிலையில் சித்தார்த்தின் காதலை மறுக்கிறார் த்ரிஷா. இதுவே ஹீரோக்கள் மூவரின் பிளாஷ்பேக்.
உயிர் பிழைத்து வரும் சூர்யா முன்பை விடத் தீவிரமாக அரசியலில் ஈடுபடத் துடிக்கிறார். இவருடன் கல்லூரித் தோழர்கள் இருவரும் சேர்ந்துகொள்கிறார்கள். போதாத குறைக்கு தனது அமெரிக்கா போகும் ஆசையை மூட்டை கட்டி வைத்துவிட்டு சித்தார்த்தும் சூர்யாவுடன் சேர்ந்துகொள்கிறார். இவர்கள் நால்வரும் அரசியலில் புகுந்து ஜெயித்தார்களா? மாதவன் என்ன ஆனார்? சித்தார்த் த்ரிஷா ஒன்று சேர்ந்தார்களா? இதற்கெல்லாம் ஓரளவுக்கு படத்தில் பதில் சொல்லியிருக்கிறார் மணிரத்னம்.
மொட்டைத் தலையும் - தாடி மீசையுமாய் அசல் ரவுடி கணக்கில் அசத்தலாய் நடித்திருக்கிறார் மாதவன். தான் ஒரு ஹீரோ என்ற நினைப்பு இல்லாமல் நிஜ வில்லன் ரேஞ்சிற்கு அவர் செய்யும் வேலைகளே படத்தில் பெரிய விஷயமாய் பேசப்படுகிறது. மனைவியை கண்மண் தெரியாமல் அடிப்பதாகட்டும், அடுத்த நொடியே வாரி எடுத்து கொஞ்சுவதாகட்டும் அசத்தியிருக்கிறார்!! இவரது மனைவியாக மீரா - அருமையான நடிப்பு. கணவன் செய்யும் அடிதடிகளை வெறுக்கும் மீரா ஒரு கட்டத்தில் சூர்யாவை மாதவன் சுட்டார் என்ற காரணத்திற்காக கரு கலைப்பு செய்து கொள்கிறார். ஏன் இப்படிச் செய்தாய் என்று கணவன் கேட்கும் போது, "இப்போ தெரியுதா ஒரு உயிரைக் கொல்லற வலி? " என்று மாதவனை எதிர் கேள்வி கேட்கும் காட்சியில் அற்புதமாக நடித்திருக்கிறார் மீரா.
படத்தில் அட்டகாசம் செய்திருக்கும் மற்றொரு நபர் சூர்யா. மாணவர் தலைவனாக வந்தாலும் பக்கம் பக்கமாக வசனம் பேசாமல் அழுத்தமாய் இருக்கிறார். இவருக்கு ஜோடியாக இஷாதியோல். நடிக்க பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லை. பொம்மை மாதிரி வந்து போகிறார். கல்யாணத்திற்கு முன்பே சூர்யா வீட்டில் வந்து தங்கும் அளவிற்கு இவருக்கு என்ன பிரச்சனை வந்தது என்பதை சொல்ல மறந்துவிட்டார் மணி.
சித்தார்த் - அமெரிக்க கனவுகளோடு அலையும் சராசரி இளைஞன். கொஞ்சம் சுயநலவாதி. ஆனால் திடீரென்று காரணமே இல்லாமல் சூர்யாவுடன் சேர்ந்துகொண்டு தேர்தலில் போட்டியிடுகிறார். இவரது ஜோடி த்ரிஷா. இஷாவாவது 2 வார்த்தை பேசுகிறார் என்றால் த்ரிஷாவிற்கு அதுவும் கிடையாது. வழக்கமான தமிழ் சினிமா பாணியில் ஏற்கனவே கல்யாணம் நிச்சயிக்கப்பட்டிருந்தாலும் சித்தார்த்தோடு சேர்ந்துகொண்டு ஊரைச் சுற்றுகிறார். " எங்க அப்பா அம்மா பார்த்த பையனைத் தான் நான் கல்யாணம் பண்ணிக்கப்போறேன் " என்று சொல்லிவிட்டுப் போனவர் திடீரென்று திரும்பி வந்து சித்தார்த்துக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கிறார். மொத்தத்தில் இந்த ஜோடி எதற்காக இந்தப் படத்தில்? என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.
வில்லனாக பாரதிராஜா. ஓக்கே தான். பாரதிராஜா ரேஞ்சிற்கு அவருக்கு ஒரு பெரிய கேரக்டரைக் கொடுக்காமல் கொஞ்சம் சப்பையான அரசியல்வாதி பாத்திரம்.
ரவியின் கேமரா அருமை. வழக்கமான மணிரத்னம் படங்களைப் போலவே இதிலும் ரஹ்மான் - வைரமுத்து காம்பினேஷனில் பாடல்கள் ஓக்கே!! மூவரின் கதையையும் பிளாஷ்பேக் மூலம் சொல்லும் நுட்பம் மணிரத்னம் போன்ற அறிவு ஜீவிகளுக்கு ஒன்றுமே இல்லை என்றாலும் படம் பார்ப்பவர்களை வியக்க வைக்கிறது. லைவ் ரெக்கார்டிங் டெக்னிக்கும் ஒக்கே!!
மூவரின் பிளாஷ்பேக் முடியவே முக்கால் படம் ஓடிவிடுகிறது. இடைப்பட்ட மிச்ச நேரத்தில் கதையை அவசர அவசரமாக முடித்தது போலத் தோன்றுகிறது. மணிசார் உங்களிடமிருந்து நிறைய எதிர்பார்க்கிறோம்.
|