மக்கள் அனைவரும் கடவுளுக்கு அடுத்தபடியாக நம்புவது மருத்துவர்களைத்தான். செய்யும் தொழிலே தெய்வம் என்று எண்ணி தங்கள் பணியை சேவையாகச் செய்யும் சில மருத்துவர்கள் நாட்டில் இருந்தாலும் சில மருத்துவர்கள் பணம் தான் குறி என்ற நோக்கத்தில் செயல்படுவதை யாருமே மறுக்க மாட்டார்கள். தங்களுடைய அஜாக்கிரதையாலும் - பொறுப்பற்ற தன்மையாலும் மனித உயிர்களுடன் விளையாடும் மருத்துவர்களின் செயல்கள் பல சமயங்களில் மக்களின் கண்டனத்திற்கும் விமர்சனத்திற்கும் ஆளாகின்றன.
தற்போது பொதுமக்களின் கண்டனத்திற்கும் ஆவேசத்திற்கும் உள்ளாகியிருக்கும் 16 வயதுச் சிறுவன் ஒருவன் செய்த மகப்பேறு அறுவைச் சிகிச்சை அவனது பெற்றோர்களான டாக்டர்.முருகேசன் டாக்டர் காந்திமதி இருவரின் பொறுப்பற்ற தன்மையை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. தங்கள் மகன் பெயர் கின்னஸ் ரெக்கார்டில் வரவேண்டும் என்ற எண்ணத்தினாலேயே தாங்கள் தங்கள் உறவினரான ஒரு கர்பிணிப் பெண்ணிற்கு அவனை அறுவை சிகிச்சை அளிக்க அனுமதித்ததாக முதலில் கூறிய முருகேசன் பிறகு தான் அவ்வாறு சொல்லவே இல்லை என்றும் தன் மகன் எட்ட நின்று தான் செய்த அறுவைச் சிகிச்சையைப் பார்த்ததாகவும் கூறியுள்ளார். யார் செய்த புண்ணியமோ மகன் செய்த அறுவை சிகிச்சையை சாதனையாக நினைத்து அவர் எடுத்த வீடியோவே அவருக்கு வேதனையாகப் போனது. வெளியே தெரிந்த இந்த அறுவை சிகிச்சையைப் போல இன்னும் எத்தனை அறுவை சிகிச்சைகளைச் செய்தானோ அந்தச் சிறுவன்...
தனக்கு அறுவை சிகிச்சை செய்தது மருத்துவம் படித்து தேர்ந்த டாக்டர் அல்ல.. அவரது 16 வயது பையன் என்பதை நினைக்கும் போது அறுவை சிகிச்சை செய்து கொண்ட அப்பெண்ணின் மனம் என்ன பாடுபட்டிருக்கும்? தாய் சேய் இருவரது உயிருடனும் விளையாடும் அதிகாரம் டாக்டர் முருகேசனுக்கு நிச்சயம் கிடையாது. மேலும் அவரது மனைவி பொது மருத்துவம் மட்டுமே படித்துவிட்டு தன்னை ஒரு மகப்பேறு நிபுணர் என்று கூறிக்கொண்டிருப்பது தனிக்கதை.
கின்னஸ் சாதனை செய்ய நினைத்த அந்த சிறுவனது வாழ்க்கையே தற்போது கேள்விக்குறியாகியுள்ளது. இதற்குக் காரணம் அவனது பெற்றோர் தான். மகன் சாதனை செய்ய வேண்டும் என்று நினைத்திருந்தால் அவனை மருத்துவம் படிக்கவைத்து சிறந்த மருத்துவ மேதையாக்கி இருக்கவேண்டும் அவனது பெற்றோர். ஆனால் அவர்கள் தேர்ந்தெடுத்த இந்த குறுக்கு வழியோ இன்று அவர்களது வேலைக்கு உலை வைத்து - அவர்களை சிறையில் தள்ளி - மகனின் எதிர்காலத்தையும் பாழாக்கியுள்ளது.
மக்கள் உயிருடன் விளையாடும் இவர்களை கைது செய்தது மட்டும் போதாது.. தகுந்த தண்டனை பெற்றுத் தரவேண்டும். இவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை புனிதமான மருத்துவ தொழிலை வியாபாரமாக்க நினைப்பவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக விளங்கவேண்டும்... மருத்துவத் தொழிலின் மாண்பை நம் மருத்துவர்கள் என்று உணரப்போகிறார்களோ தெரியவில்லை...
|