ஜூன் 30 2005
தராசு
வ..வ..வம்பு
டெலிவுட்
முச்சந்தி
கட்டுரை
அமெரிக்க மேட்டர்ஸ்
அறிவிப்பு
மனம் போன போக்கில் மனிதன் போகலாமா?
உள்ளங்கையில் உலகம்
ஹாலிவுட் படங்கள்
கவிதை
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
திரைவிமர்சனம்
கவிதை
துணுக்கு
அடடே !!
 
  முதல் பக்கம்
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
கட்டுரை : இந்தியாவும் வான்புலிகளும்
- பாஸ்டன் பாலாஜி
| Printable version | URL |

ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவால் வளர்த்து விடப்பட்ட இயக்கம் அல்-கெய்தா. அதே போல், இந்தியாவால் ஆதரிக்கப்பட்டு வளர்க்கப்பட்ட இயக்கம் எல்.டி.டி.ஈ. உலக வர்த்தக மையத்தை ஒஸாமா பின் லாடன் தாக்கியது போல், மிகப் பெரிய பேரழிவு எதையும் விடுதலைப் புலிகள் இந்தியாவுக்கு நிகழ்த்தவில்லை.

ஆனால், அவ்வாறான தாக்குதலை செய்யக்கூடிய வாய்ப்புகளை விடுதலலப் புலிகள் மேம்படுத்திக் கொண்டேதான் இருக்கின்றார்கள். விடுதலைப் புலிகள் துவக்கியிருக்கும் விமானப் படை, செப். 11 போன்ற தாக்குதல்களைத் தொடுக்கும் வலிமையை அவர்களுக்குத் தந்துள்ளதாக இந்தியா டுடே (தமிழ்) ஜூன் 8 கட்டுரை விவரிக்கிறது.

ரஷியா அடக்கி வாசிக்கும் இன்றைய பூகோள அரசியலில் சீனாதான் அமெரிக்காவுடன் மல்லுக்கு நிற்கிறது. அமெரிக்க-ரஷிய பனிப் போர் முடிந்தவுடன் ஆயுதங்களின் அணிவகுப்பும் அணு ஆயுதங்களும் குறையும் என்று பலரும் எதிர்பார்த்தார்கள். பணவீக்கம் ஏற்படும்போதெல்லாம் யுத்தங்களின் மூலம் பொருளாதாரத்தை நிலை நிறுத்தும் அமெரிக்கா, ஆப்கானிஸ்தான், ஈராக் என்று சண்டைக்குப் போனது.

இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல் போன்ற புதியவர்களும் அணு ஆயுத சக்தியுள்ள நாடுகளாக மாறினார்கள். பாதுகாப்புத் துறைக்காக உலக நாடுகள் வருடத்திற்கு நூறாயிரம் கோடி (1 ட்ரில்லியன்) டாலர்களை செலவழிக்கிறார்கள். இதில் வளரும் நாடுகள் மூன்றில் இரண்டு பங்கை வாங்குகிறார்கள்.

உதாரணமாக, தாய்வான் பதினெட்டு பில்லியன் டாலர்களுக்கு அமெரிக்காவிடமிருந்து ஆயுதங்களை இறக்குமதி செய்கிறது. தாய்வானை நோக்கி சீனா 610 ஏவுகணைகளை குறி வைத்திருப்பதினாலேயே, தாய்வானின் இராணுவ பட்ஜெட் ஏறுகிறது. அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரையும் சிறையில் வைத்து வாட்டும் மியான்மருக்கு இங்கிலாந்து தளவாடங்களை ஏற்றுமதி செய்து வருகிறது. இதே போல், விடுதலைப் புலிகளை பலப்படுத்துவதன் மூலம், இலங்கையும் இந்தியாவும், அமெரிக்காவிடமிருந்தும் இங்கிலாந்திடமிருந்தும் அதிநவீன தற்காப்பு தொழில்நுட்பத்திற்காக செலவிட ஆரம்பிக்கும்.

இலங்கையின் பாதுகாப்புச் செலவீனம் 1990-ஆம் ஆண்டு 550 மில்லியன் இலங்கை ரூபாவாக (ஒரு இந்திய ரூபாய் = 2.3 இலங்கை ரூபாய்) இருந்திருக்கிறது. 1992-ஆம் ஆண்டு 2000 மில்லியனாக உயர்ந்தது என ரோஹான் குணரத்தினாவின் குறிப்பு கூறுவதாக 'ஈழப் போரட்டத்தில் எனது சாட்சிய'த்தில் சி. புஸ்பராஜா எழுதுகிறார். அவரே தொடர்ந்து, 'வேறொரு குறிப்பு 1981-ஆம் ஆண்டு 661 மில்லியனாக இருந்த செலவீனம் 1992-ஆம் ஆண்டு 18,058 மில்லியனாக உயர்ந்தது' எனக் கூறுவதாகவும் சொல்கிறார்.

தரைப்படையும் கப்பல் படையும் ஏற்கனவே கொண்டிருந்த புலிகள், இப்பொழுது விமானப்படையையும் சேர்த்துக் கொண்டதால், முப்படைகளும் கொண்ட ஒரே கெரில்லா அமைப்பாக இருக்கிறார்கள். ஸெக்கில் தயாரான ஸிலின் ஜீ-143 (ZLIN Z 143) விமானங்கள் பல உபயோகங்கள் கொண்டது. விமான ஓட்டுனர் பயிற்சிக்கும் பயன்படும். அதிரடியாக சென்னை வரை பறந்து சென்று, காரியங்களை முடித்துவரவும் உபயோகமாகும். இந்த விமானத்தில் நான்கு பேர் அமர்ந்து பயணம் செய்யலாம். தானியங்கியாக ஆட்டோ-பைலட் முறையில் இயங்கக் கூடியது. 2759 கிலோ மீட்டர் வரை பறக்கலாம். கரடுமுரடான இடங்களிலும் எளிதில் இறக்கமுடியும். பத்து மில்லியன் ரூபாய்க்கு யார் வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம்.

இது தவிர ஆயிரம் கி.மீ.,  600 கி.மீ., 200 கி.மீ. என்று வெவ்வேறு தூரங்கள் சென்றுவரக்கூடிய விமானங்களையும் சமாதான காலத்தின் போருக்கான ஆயத்தங்களாக செய்கிறார்கள் என்று இலங்கைக்கான இந்திய ஹைகமிஷனர் நிருபமா ராவ் விவரிக்கிறார். இந்த விமான பலத்தின் மூலம் ஒற்று அறிவது, வேவு பார்ப்பது போன்றவை புலிகளுக்கு எளிதாகும். போராளிகளை, இலங்கை, தென்னிந்தியா மற்றும் தென் கிழக்காசியா போன்ற அக்கம்பக்கத்து நாடுகளுக்குக் கொண்டு விடுவது இயலும். போர் காலகட்டங்களில் வெளியிடங்களில் இருந்து அவசர உதவிகள் தருவிக்கவும்; சிகிச்சைகளுக்கு கொண்டு செல்லவும்; புதிய ராணுவ உதிரி பாகங்களை வெகுவிரைவில் கொண்டு வரவும் உதவலாம்.

ராஜீவ் காந்தி கொலையில் தேடப்பட்டு வருபவரும் தென்கிழக்கு ஆசியாவில் வசிப்பவருமான சண்முக குமரன் தர்மலிங்கம் விமான பாகங்களை உதிரியாகக் கொண்டு வந்து விமானம் கட்டமைப்பதில்  சம்பந்தப் பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. மாதந்தோறும் அயல்நாடுகளில் வசிக்கும் தமிழர்களிடமிருந்து 8.6 கோடி ரூபாய் வருவதாக இந்திய உளவுத்துறை மதிப்பிட்டுள்ளது. இது விமான எரிபொருள், விமானிப் பயிற்சி போன்றவற்றுக்கும் உபயோகப்படும்.

காங்கிரஸ்-திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள வைகோ ஆரம்பம் முதலே இந்திய - இலங்கை ராணுவ ஒப்பந்தத்தை எதிர்த்து வருகிறார். பா.ம.க. ராமதாஸ¤ம் ஒப்பந்தத்தை எதிர்க்கிறார். கம்யூனிஸ்ட்களும் இந்த ஒப்பந்தத்துக்கு எதிராகவே இருக்கிறார்கள். இலங்கை விவகாரங்களில் கடந்த சில வருடங்களாகவே பட்டும்படாமலும் தி.மு.க. இருந்து வந்திருக்கிறது. கூட்டணியின் மற்ற கட்சிகள் சொல்வதைக் கேட்டு, ராணுவ ஒப்பந்தத்துக்கு எதிராகக் கருத்து சொன்னால், அது மத்தியில் ஆளும் காங்கிரஸை எதிர்ப்பது போல் ஆகிவிடுமே என்று தி.மு.க. தலைமை யோசிக்கிறதாக ஜூனியர் விகடன் கழுகு எழுதுகிறது.

விடுதலைப்புலிகளாகட்டும் அல் கெய்தாவாகட்டும். அவர்களின் மிகப் பெரிய பயமுறுத்தும் பலம் அவர்களின் தற்கொலைப் படைகள்தான். எல்.டி.டி.ஈ.இன் தற்கொலைப் படையின் பெயர் கரும்புலிகள். தற்கொலைத் தாக்குதல் என்றாலே உலகின் எல்லா நாடுகளும் முப்படைகளும் நடுங்குகிறார்கள்.

1982-ஆம் ஆண்டில் இருந்து 2002-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முடிய மரணத்தை சந்தித்த புலிகளின் விபரம்:

ஆண்கள்  பெண்கள்
போராளிகள் 13,612   3,767
தரைக்கரும்புலிகள்  59  18
கடற்கரும்புலிகள் 117  46
 இலங்கையின் வடக்குப் பகுதியில் விடுதலைப் புலிகள் நிர்வாகத்தில் உள்ள இரணமடு கிராமத்தில் வான்புலிகளின் விமானப்படைத்தளம் அமைந்திருக்கிறது. ஏற்கனவே சோதனையில் இருந்து இந்திய ராணுவத்திற்கு பயிற்சியளிக்கப்பட்ட ஏவுகணைகளில், பிருத்வி மட்டுமே தற்போது இரணமடுவின் தாக்குதல்களில் இருந்து தற்காத்துக் கொள்ள உதவும். திருச்சியில் இருந்து இருபது நிமிட தூரத்தில் இரணமடு அமைந்திருக்கிறது. இதனால் 'சூர்யா' ஏவுகணைகளையும் இராணுவம் பயன்படுத்த ஆரம்பிப்பது பாதுகாப்பிற்கு வலு சேர்க்கலாம்.

நேபாளத்தில் நீடிக்கும் குழப்பம், பாகிஸ்தானுடன் சேற்றிலொரு கால் பேச்சுவார்த்தைகள், சீனாவுடன் நேசக்கரம், மியான்மரை கண்டும் காணாமல் விட்டிருத்தல், பங்களாதேஷ் ஊடுருவல் போன்ற இன்றைய புவியியல் அரசியலில் இலங்கையையும் பாதுகாப்பாக வைத்துக் கொள்வது இந்தியாவுக்கு மிகவும் அத்தியாவசியமான நிலை. கல்பாக்கம் போன்ற அணு நிலையங்களிலோ அல்லது கேரளா/தமிழ்நாட்டின் முக்கிய இடங்களையோ விடுதலைப் புலிகளிடம் பிணையாகக் கொடுத்து விட்டு பின்னர் வருந்தக் கூடாது.

விடுதலைப் புலிகளின் திறனையும் நடவடிக்கைகளையும் குறைத்து மதிப்பிட்டு மீண்டும் ஏமாறக் கூடாது என்பதற்கு புஸ்பராஜாவின் கருத்து: "இந்திய இராணுவம் இன்னோர் நாடான பாகிஸ்தானுடன் மோதிக் கிழக்குப் பாகிஸ்தானாக இருந்த பிரதேசத்தை பங்களாதேஷாக உருவாக்கியபோது, அதாவது 1974-ம் ஆண்டு நடந்த இந்த யுத்தத்தில் இறந்த இந்திய இராணுவத்தின் தொகை 1047-தான். அதாவது ஒரு நாட்டுடன் மோதி இருக்கிறது. இன்னோர் நாட்டை உருவாக்கி இருக்கிறது. ஆனால், இலங்கையில் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் என்ற இயக்கத்துடன் மோதி இறந்த இந்திய இராணுவத்தின் தொகை 1115".

PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
-- பின்னூட்டம் மூடப்பட்டது. --
Copyright © 2005 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |