சினேகா சொன்னா கேப்பிங்க! நான் சொன்ன அதிர்ச்சி காட்டறீங்க?
வயசு 32 ஆகுது. பொறந்தது திருவண்ணாமலை மாவட்டம் சங்கத்துல! ஒன்னப்புல இருந்து அஞ்சாப்பு வரைக்கும் நாமக்கல்ல. ஆறாப்பு கோவைல. ஏழாப்பு ஈரோட்டுல. எட்டாப்பு திருப்பூர்ல. ஒம்பதாப்பு... சரி விடுங்க வேணாம்! எங்கப்பாரு காவல்துறைல இருந்ததால வருசம் ஒருக்கா ஸ்டேசன் மாறப்ப எல்லாம் எங்களையும் கொண்டுபோய் அந்தந்த ஊரு கவருமெண்டு ஸ்கூல்ல போட்டுட்டு ஸ்டேசனுக்கு போயிருவாரு! நான் வாங்கிக்காட்டுன மார்க்குகளைப் பார்த்து இதை இப்படியே விட்டுட்டா ஆகாதுன்னு கடைசியா கோவைக்கு வந்து ஒம்பதாப்பு சேர்த்ததுல இருந்து நம்ப ஊரு கோவை ஆகிடிச்சி. கண்ணாலம் கட்டி 3 வருசம் ஆகப்போகுது. ஒரே ஒரு குட்டிப்பொண்ணு ரெண்டு வயசுல. பெரும்பாலான வலைப்பதிவர்கள் போல நானும் IT பீல்டுலதான் வேலை பாக்கறேன். இருப்பது பெங்களூர். கையில கணினி கொடுத்திருக்கற ஒரே காரணத்திற்காகவும், கூகுளார் கொடுத்த ப்ளாக் அக்கவுண்ட்டுக்காகவும் மட்டுமே தோணின போது கைக்கு வர்றதை.. அதாங்க தான்தோன்றித்தனமா எழுதறவன்.
இதுதான்னு இல்லாம பரவலா படிக்கற வழக்கம் உண்டு(இங்கிலீசு தவிர!). தமிழோவியத்துக்கு என்னைப்பற்றி ஒரு முன்னுரை எழுதனும்னு கேட்டுக்கிட்டதால, வராம வந்த மாமணியாக இந்த வாய்ப்பை உபயோகப்படுத்திக்கிட்டு என்னை பேட்டி எடுத்து போடலாம்னு இருக்கேன்! இதெல்லாம் அழுகுணி ஆட்டம் அப்படின்னு கோச்சுக்கிட்டீங்கன்னா, உங்களுக்கும் ஒரு வாய்ப்புத்தாரேன். கேள்விகளை பின்னூட்டத்துல போடுங்கப்பு! (மனசுல என் ரேஞ்சை ஞாபகம் வைச்சுக்கிட்டு கேளுங்க! கண்டதையும் கேட்டு என்ன பேமுழி முழிக்க விட்டுறாதீக! )
நிருபர்: வணக்கம்! உங்க பேரு...?
இள: என் பேரு இளவஞ்சி. எனக்கு இன்னொரு பேரும் இருக்கு..!
நிரு: (பதறி எழுகிறார்..) அய்யா, அப்ப நீங்க..?
இள: சும்மா ஒக்காருங்க. இன்னொரு பேரு வாத்தியார். வலை நண்பருங்க வைச்சது!
நிரு: (மனசுக்குள்... த்தூ! ஒரு நிமிசம் ஒதறிடுச்சி!பண்ணாட.. ) அதுசரி! நீங்க ஏன் வலைல எழுத வந்தீங்க?
இள: அது ஒரு விபத்து!
நிரு: ( யாருக்குடா விபத்து எரும...) என்னது விபத்தா?
இள: ஆமாம்! ஒரு நாளு இலக்கிய ஆர்வம் தாங்காம, ஒரு கெட்ட வார்த்தைய தமிழ்ல தேடப்போக அது நேரா பத்ரிசார் பதிவுல போய் நின்றது! அங்கதான் எனக்கு ஃப்ளாக்குன்னா என்னன்னே தெரிய வந்தது! அவர் பதிவுல நிறயபேர் சுட்டிகள் இருந்தது. அதையெல்லாம் படிக்கப்படிக்க எனக்கும் எழுதனும்னு ஆசை வந்தது. நீங்க கேக்கற வரைக்கும் விட்டுவைப்பனா என்ன? இதுக்கு முன்னாடியே நான் எப்படி எழுத வந்தேன்னு ஒரு சுயபீத்தல் பதிவு போட்டுட்டேன்!
நிரு: (இவன் செய்யற பாவத்துக்கு அநியாயமா பத்ரிசார் மண்டைய உருட்டறானே! ) சரி! எழுத வராம இருந்திருந்தா என்ன செய்துக்கிட்டு இருப்பீங்க?
இள: டாக்டராயிருப்பேன்!
நிரு: என்னது? டாக்டரா?
இள: ஆமா! சினேகா சொன்னா கேப்பிங்க! நான் சொன்ன அதிர்ச்சி காட்டறீங்க? இதெல்லாம் தேவையில்லாத அதிர்ச்சி ஆமா!
நிரு: இவ்வளவு நாள் எழுதி என்ன சாதிச்சீங்க?
இள: கூகுள்ல என் பேரு போட்டு தேடுனா 582 சுட்டிங்க வருது! போதாதா?
நிரு: (அட தேவுடா! "முட்டாள்"னு போட்டு தேடுனா 624 வருது! அது தெரியுமா? )அதுசரி. இதனால் தாங்கள் சொல்ல விரும்புவது?
இள: எங்கப்பாரு ஆசைய நிறைவேத்திட்டேன்! நாலு எடத்துல நம்ப பேரு சொல்லறமாதிரி வாழ்க்கைல முன்னேறனும்பாரு! இப்ப பாருங்க 582 எடத்துல சொல்லறாங்க!
நிரு: ( ம்ஹீம்! இதெல்லாம் ஆவறதில்லை! ) உங்கள் வாசகர் கடிதங்களுக்கு நீங்க பதில் போடுவதுண்டா?
இள: அப்பப்ப வரும்! ஒரு முறை படிச்சிட்டு சத்தம் போடாம டெலிட் செஞ்சிருவேன்! பதில் கேட்டு ரொம்ப தொல்லை பண்ணதுநாள கமெண்ட் மாடரேசன் போட்டுட்டேன்! ஹிஹி..
நிரு: ( புரியுதுடா சும்பை..! ) வலைப்பதிவின் வருங்காலம் பற்றி என்ன நினைக்கறீங்க?
இள: நான் என்ன நினைக்கறது? Google புது கட்டடம் வாஸ்துபடி சரியில்லாம, கார்பார்க்கிங் ஈசானி மூலையில கட்டியிருக்காங்க! அதனால அடிக்கடி "Scheduled Downtime! We are upgrading our server"னு மெசேஜ் வருது. இத சரிசெய்ய சர்வர் ரூமை கார்பார்க்கிங்கா மாத்திட்டு, இன்னும் ரெண்டு O சேர்த்து Goooogle னு பேரு மாத்திட்டாங்கன்னா யாரும் அடிச்சுக்க முடியாது!
நிரு: (தலையில் அடித்துக்கொள்கிறார்! எல்லாம் என் நேரம்.. இவங்கிட்ட மாட்டிக்கிட்டு..) சரி தொலையுது! இக்கால கவிதைகள் பற்றி உங்க கருத்து என்ன?
இள: எங்க அன்பு ஆசான் சாத்தான்குளம் அண்ணாச்சி ஊருக்கு போயிருக்கற ஒரே காரணத்துக்காக இந்த கேள்விக்கு நான் பதில் சொல்லறேன்! கவிதைங்கறது 10 வரில எதையாவது எழுதிட்டு, அதுக்கு நாமளே 1000 வரில வெளக்கம் சொல்லறது.
நிரு: (இப்படி நீ மட்டும்தான் செய்யற...) வலைப்பதிவுகளில் உங்களுக்கு பிடித்தது பிடிக்காதது?
இள: பிடித்தது ஹிட் கவுண்டடு ஏறுவது! பிடிக்காதது, காலியா இருக்கற Comment Moderation Page!
நிரு: (இல்லன்னா உனக்கு ஹிட் கவுண்டரு, பின்னூட்டம் ஏத்த தெரியாதாக்கும்? )வலைப்பதிவுல உங்க வருங்கால திட்டம் என்ன?
இள: (இருந்தா சொல்ல மாட்டமா... ) எப்படியாவது Flimfare அவார்டு வாங்கறது! அதுக்கும் எதானா போட்டி நடத்துனா கலந்துக்கலாம்!
நிரு: (அடப்பாவி! Blogக்கும் அதுக்கும் என்னடா சம்பந்தம்? ஆளு தெளிவாத்தான் இருக்கானா?! ) ஏங்க நீங்க பதிவு எழுதறதுக்கும் அந்த அவார்டுக்கும் என்னங்க சம்பந்தம்?
இள: கெடைக்குமே! இப்பக்கூட என் கட்டுரைக்கு முதல் சிறுகதை பரிசு கெடைச்சிருக்கே!
நிரு: (அது உன் தப்பு இல்லடா! ஓட்டு போட்டவங்க தப்பு!! ) இன்னும் எவ்வளவு காலத்துக்கு எழுதலாம்னு இருக்கீங்க?
இள: அது எங்க Officeல என் "தமிழார்வத்தை" கண்டுபிடுச்சி Lay-off செய்யற வரைக்கும்! அதுக்கப்பறம் இதே அனுபவங்களை வைச்சு பெரிய பத்திரிக்கையாளரா ஆகிடுவேன்!
நிரு: (ஏண்டா! எங்களையெல்லாம் பார்த்தா அப்படி சல்லீசா இருக்கா உனக்கு? ) போகட்டும்! பேட்டி நல்லா வர மாதிரி போடறேன்! ஏதாச்சும் போட்டுக்குடுங்க...
இள: போட்டுக்குடுத்துட்டாப் போச்சு! எத்தன பின்னூட்டம் வேணும்?
நிரு: போடாங்...
|