நடக்கறது நடந்தே தீரும்! நடக்காதது நடக்கவே நடக்காது!!
"ஆமாண்டா... நடக்கற கழுதை என்னைக்குன்னாலும் நடக்கும்! நடக்காத மீனு என்னைக்குமே நடக்காது!! இதுதான் நீ கண்டுபுடிச்ச அரிய பெரிய தத்துவமா?"ன்னு நீங்க அருவா தூக்கறதுக்கு முன்னாடி சொல்லிடறேன்! இந்த வாரம் நான் தமிழோவியத்துல சிறப்பாசிரியருங்க! விதியை நொந்துக்கறதுக்கு முன்னாடி சொல்லுங்க... நடக்கறது நடந்தே தீருமா இல்லையா?!
சிறப்பாசிரியர்னு சொல்லிட்டா மட்டும் நமக்கு சிறப்பா எதுனா வந்துடப் போகுதா என்ன? இலக்கியவாதியா இருந்தா எதுனா ஆய்வுக்கட்டுரை எழுதலாம். இல்லைன்னா ஏதாவது புத்தக விமரிசனம் செய்யலாம்! நாம அட்டை டு அட்டை முழுசா படிச்ச புத்தகம் எதுன்னு யோசிச்சி மருதம், திரைச்சித்ராவுக்கு எல்லாம் புத்தக மதிப்பீடு எழுதலாம்னு நினைச்சா நம்பளைப் பத்தின மதிப்பீடு டர்ர்ராகும் வாய்ப்பே அதிகமா இருக்கும்னு தோணுது! (பின்ன?! நீங்களும் என் மதிப்பீட்டை வரிக்கு வரி படிச்சு ரசிச்சிட்டு அப்பறம் சாவகாசமா "சமூகத்தை அரிக்கும் கரையான் படைப்புகள்"னு ஒரு ஆய்வுக்கு கெளம்பிர மாட்டிங்களா என்ன?!) வலைப்பதிவர் என்ற வகையிலே எனக்கு எழுத தெரிஞ்சதெல்லாம் கொசுவத்தி சுத்தறதுதான்! அதையும் எனக்கு வேணுங்கற அளவுக்கும் நீங்க வேணான்னு சொல்லற அளவுக்கும் பொகைமண்டலமா கெளப்பியாச்சு! ஆனாலும், இதையும் வேணாம்னு விட்டுட்டா அப்பறம் என் கதி?! அதனால... ஹிஹி...
நான் சிறப்பாசிரியர் அப்படிங்கறதை கேள்விப்பட்டவுடன் தலைல லைட்டா அடிச்சுக்கிட்டு "ஹிம்ம்... வெளைக்கீரும்!" அப்படின்னு சலிச்சுக்கற ஆட்களில முத வரிசைல வர்றவுக யாரா இருக்கும்னு கொஞ்சம் உத்துப் பார்த்தா, அது இதுவரைக்கும் எனக்கு கல்வி கொடுத்த ஆசிரியர்களாகத்தான் இருக்கக்கூடும்! அந்தக்காலத்துல அவங்க வாங்குன சம்பளத்துக்கு டபுள் மடங்கா அவங்களை வேலை வாங்கி இருக்கன்னா பின்ன சும்மாவா? அதுவும் எனக்கு ஆங்கில வகுப்பு எடுத்த ஆசான்கள் அந்த 26 எழுத்துக்களை என் மண்டைக்குள் திணிப்பதற்குள் ஓய்ஞ்சு போய் கவுத்துப்போட்ட K மாதிரி இரண்டு கைகளையும் விரித்து ஆண்டவனை இறைஞ்சிய கதைகள இங்கே சொன்னா சரியா இருக்குங்கறீங்க?!
ஒவ்வொருத்தரு வாழ்க்கைலயும் அவங்க மொதமொதலா கண்டுபிடிக்கற ஹீரோ ஹிரோயினி அவங்க டீச்சராகத்தான் இருக்கனும்! "அம்மா! எங்க டீச்சருக்கு இந்த புக்குல இருக்க எல்லாமும் தெரியுமே!" "அய்யோ! எங்க வாத்தியாரு 16ம் வாய்ப்பாடு தழகீழாச் சொல்லுவாரு!". சொன்னதில்லையா என்ன நீங்க? அதனால என் வாழ்க்கைல என்னை பாதிச்ச என் மனசுல சிலபல விசயங்களை ஆழப்பதிச்ச ரெண்டு வாத்தியாருங்களை மட்டும் "சிறப்பாசிரியரா" இங்க சொல்லலாமுன்னு இருக்கேன்!
நமக்கு LKG, UKG எல்லாம் கொடுப்பினை இல்லைங்க! மொத எண்ட்ரியே ஒன்னாப்புதான்! அப்படிச் சேர்ந்து சீரழிச்ச கதைய ஒரு பதிவாக்கூட போட்டிருக்கேன் அதுல அந்த ராமச்சந்திரன் வாத்தியாருதான் அஞ்சாப்பு வரைக்கும் என் ஹீரோ. வாத்தியாருன்னா தெய்வம். சொல்வதே வேதவாக்கு. மறுத்துப் பேசுதல் என்பது கனவிலும் இல்லை. நம்ம நாமக்கல் சிபியார் கூட அங்கதான் படிச்சிருக்காரு. "சாரு விடிகாலைல படிக்கச் சொன்னாரு...சாரு ரெண்டு மொறை பல்லு தேக்கச் சொன்னாரு.. சாரு கைகால் கழுவிட்டுத்தான் சாப்புடச் சொன்னாரு..." ன்னு வீட்டுலையும் வாத்தி பொராணம் பாடிக்கிட்டே இருப்பேன். ராமச்சந்திரன் சாரும் ரொம்ப நல்ல மனுசன்! கையில எப்பவும் குச்சி இருந்தாலும், முறுக்கு மீசை வச்சிருந்தாலும், எப்பவும் அவரைப் பார்த்தா பயமா இருந்தாலும் அவரு சொல்லு சொல்லுதான்! அவரு கேட்டதையெல்லாம் படிப்புல காட்டலைன்னாலும் எப்படியாவது அவரு கிட்ட நல்ல பேரு வாங்கிறனும்னு வகுப்பு போர்டுக்கு கரி பூசறது, பானைல தெனம் தண்ணி புடிச்சி வைக்கறது, சத்துணவு தட்டுகளை விநியோகம் செய்யறதுன்னு எடுபுடி வேலைகளுக்கு ஆளாப்பறப்போம்.
வாத்தியாருக்கு நாம நல்லவன்னு சொன்னா போதுமா? மத்த கெட்டவங்களை கண்டுபுடிச்சுக் கொடுத்து அடிவாங்கிக் கொடுக்க வேணாமா? அதனால 'தீ' படத்துல ரஜினியை பார்த்துட்டு அவரு கடைசில சாகாம இருந்திருந்தா அந்த 'கெட்டவனை' வாத்தியாருகிட்ட புடிச்சுக்குடுத்து அடிவாங்க வைச்சு நல்லவனா மாத்தனும்கற கூட்டுத்திட்டமெல்லாம் கூட எங்களுக்கு இருந்தது. ஆனா பாவம், ரஜினிக்கு கடைசிவரைக்கும் கொடுத்து வைக்கலை! ராமச்சந்திரன் வாத்தியாரை இரண்டு விசயங்களுக்கு மட்டும் பிடிக்காது. ஒன்னு ஒவ்வொரு இங்கிலீசு வார்த்தை தப்புக்கும் அரை மார்க்கா கொறைச்சு கடைசியா பூச்சியம் போடறது. அடுத்து என் கையெழுத்து எவ்வளவு சொல்லியும் சரியா வரலைன்னு பெஞ்சுமேல நிக்கவைச்சி பெரம்பால கெண்டைக்காலை ரூல்டு காலா மாத்தறது. நல்லவேளை! இப்பவெல்லாம் லதா ஃபாண்டு இருக்கு. இல்லைன்னா நீங்க எல்லாம் என்னைக்கு நான் எழுதறதை புரிஞ்சு படிக்கறது?!
இந்த ரெண்டு விசயம் நடக்கும் நேரம் தவிர வாத்தியாரை வெறுக்க எனக்கு எந்த காரணிகளும் கிடைத்ததில்லை! சில சமயம் இந்த இங்கிலீசு பூச்சியம் மேட்டருல பொண்னுக வரிசைல அமர்த்தி என்னை திருத்த நினைத்ததும் உண்டு. அப்போதெல்லாம் கருவாச்சிக்கும், மூக்கொழுக்கிக்கும் நடுவுல (என் பேரு ஒடக்கான்ங்கறது இங்க வேணாங்க...) ஒக்கார்ந்ததுக்காக கூனிக்குறுகி, கதறிக்கதறி அழுதிருக்கேனே தவிர என் கையெழுத்து மாறின பாடில்லை! வெவரம் வந்த வயசுல எத்தன தப்பு செஞ்சாலும் ஒரு வாத்தியும் புள்ளைங்க பக்கம் ஒக்காரச் சொன்னது இல்லை! ம்ம்ம்... ஆண்டவன் எப்பொழுதுமே ஆம்பளையாளுக்கு தேவையான நேரத்தில் தேவையானதைக் கொடுக்கறதில்லை.
எல்லாம் சரியாத்தாங்க போச்சு! நாங்க கோனாருகடை சந்துல ஒரு நாள் ராமச்சந்திரன் சார் அவரு நண்பரோடு பீடி குடித்துக்கொண்டு சிரித்துப் பேசிக்கொண்டிருந்ததை பார்க்கும் வரை! எங்களால அந்த காட்சியை நம்பவே முடியவில்லை! தாங்க முடியாத அதிர்ச்சி! என்ன செய்யறதுன்னு தெரியலை. கெட்டவங்க கூட சேரக்கூடாதுன்னு சொன்ன நம்ப வாத்தியாரு பீடி குடிக்கறாரா? கண்ணுல தண்ணீ முட்டிக்கிட்டு நிக்குது. எவனுக்கும் என்ன சொல்லறதுன்னு தெரியலை. அழுதுக்கிட்டே வீட்டுக்கு ஓடியாந்தோம்.
ம்ம்ம்... அந்த காட்சி கடைசிவரை எங்க கண்ணுல படாமலேயே இருந்திருக்கலாம்! நாங்களும் எங்க ராமச்சந்திரன் வாத்தியாரை கெட்டவங்க லிஸ்ட்டுல சேர்த்தறதா வேணாமான்னு கொழம்பித் தவிக்காம இருந்திருக்கலாம் !
|