ஜூலை 06 2006
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
சிறப்பு ஆசிரியர் : சிறப்பு ஆசிரியர்கள் - 2
- இளவஞ்சி
Save as PDF | Bookmark in Del.icio.us | | Printable version | URL |

மேல்நிலை வகுப்புக்கு வந்துட்டாவே இந்த பசங்களுக்கு எல்லாம் கோட்டி பிடிச்சுரும்போல. ஒரு நெலைல நிக்கமாட்டானுவ. அது என்னதான் வயசுக்கோளாறோ? கொரங்குமாதிரி இங்கையும் அங்கையும் தவ்வறதும், கேனத்தனமா இளிக்கறதும்னு கரைகள் உடைந்து பொங்கும் இளமைய எப்படியாவது எல்லார் முன்னாடியும் பாய்ச்சி வீரதீர அழகன்னு பேருவாங்கறதுல அப்பிடி ஒரு குறி! நமக்குத்தான் நெனைப்பு இப்படி இருக்குமே தவிர வெளிய இருந்து பார்க்கறவங்களுக்கு நாமெல்லாம் ஒரு "நமச்சிவாய விசித்திர மிருகம்" மாதிரிதான் தெரிஞ்சிருப்போம் போல. கொழந்தைன்னு நினைச்சு நம்மள கொஞ்சவும் முடியாது! வாலிப வயசுன்னு மதிக்கவும் முடியாது. ஒரு மார்க்கமாவே பார்ப்பாங்க. அதுசரி! நாம மட்டும் என்ன அவங்க மதிக்கறமாதிரியா நடந்துக்கிட்டு இருப்போம்? எப்படியாவது எதனையாவது எங்கயாவது செஞ்சி நாம வயசுக்கு வந்துட்டோம்னு காட்ட ஒரு துடிப்பு எப்பவும் உள்ளார ஓடிக்கிட்டே இருக்கும். சந்தேகமிருந்தா பதினொன்னாவது ரேஞ்சுல படிக்கற ஒரு பயலை பிடிச்சு பேசிப்பாருங்க!

"என்னடா! ஸ்கூலு இன்னைக்கு லீவா?"

"யாரு சொன்னா? ஸ்கூலுக்கு நாங்க லீவு!"

"(க்ர்ர்ர்ர்...) எதுக்குடா காந்தி செத்ததுக்கா?"

"அப்பறம்? நீங்க செத்தாவா லீவு விடுவாங்க?"

இதுக்குமேல பேச தோனுங்கறீங்க? ஒரு கேள்விகேட்டா பதிலா திரும்பவும் ஒரு கேள்விதான் வரும். பின்ன, ஒலகத்துல நடக்கறதை ஒவ்வொன்னா புரிஞ்சுக்க ஆரம்பிச்சிருக்கறோம் அப்படிங்கறதை வேற எப்படி வெளிப்படுத்தறதாம்! நாங்க இந்த நெலையில இருந்தப்ப வகையா மாட்டுனவங்க தான் எங்க தமிழ் டீச்சரு. அப்பவே அவங்களுக்கு வயசு 29 இருக்கும். கருப்பா இருந்தாலும் நல்ல களையா இருப்பாங்க. தமிழுன்னா உயிரு. நாங்க என்ன ஆட்டம் போட்டாலும் கடைசியா அவங்க சொல்லிக் கொடுக்கறதுல ஏதாவது ஒன்னை சரியா படிச்சிட்டா அப்படியே உச்சி குளுந்துருவாங்க.

மத்த எல்லா வகுப்புலையும் அடியும் ஒதையும் வாங்கற எங்களுக்கு இந்த வகுப்புதான் விடுதலை கொடுக்கும். என்ன வேணா செய்யலாம். டீச்சருக்கு கோவமே வராது. கையில ஒரு ஸ்கேலை வைச்சுக்கிட்டு "டேய்! அடிச்சிருவேன்.."ன்னு மெரட்டிக்கிட்டே இருப்பாங்க. லொல்லு தாங்க முடியாமபோனா கூப்பிட்டு வைச்சு டேபிள்மேல கைய வைக்கச்சொல்லி கண்ணை இருக மூடிக்கிட்டு ஏதோ நகைக்கடையில வளையல் ஒடுக்கெடுக்கறவன் தட்டறமாதிரி லைட்டா ஒரு அடி! நாங்கெல்லாம் அதுக்கு முன்னாடிதான் அறிவியல் வாத்தி ராக்கெட் ரங்கநாதனின் அருட்கரங்களால் முதுகு சிவக்கும் பாக்கியம் பெற்றிருப்போம். எங்களுக்கா சிரிப்பு தாங்காது. "நல்லா கொஞ்சம் வலிக்கற மாதிரி அடிங்க டீச்சர்"ன்னு கேட்டு வாங்கற அளவுக்கு போயிடும்.

வகுப்பு அவங்க எடுக்கறது கொஞ்சம்தான். மத்த நேரமெல்லாம் அவங்க சொல்லிக்குடுக்கற ஒவ்வொரு வரிக்கும் கிண்டலும் கமெண்டுமாத்தான் பொழுதுபோகும். வாய வைச்சுக்கிட்டு சும்மா இருக்கற வயசா அது? டீச்சரு பாண்டவர்கள் பத்தி வகுப்பெடுத்தா,

"டீச்சர், திரொளபதி பயங்கரமான ஆளு!"

"ஏண்டா?"

"அஞ்சு பேர்த்த சாமாளிச்சிருக்காங்களே!"

அகநானூறு எடுத்தா...

"டீச்சர், களவொழுக்கம்னு சொல்லறீங்களே? களவுக்கு என்னாத்துக்கு ஒழுக்கம்?"

இப்படி நாங்க அறிவுபூர்வமா பெனாத்தறதும் அதைக்கேட்டு புள்ளைங்க குசுகுசுன்னு சிரிக்கறதும் ஒரு போதையான வெளையாட்டு. இந்த வில்லங்கமான கேள்விகளுக்கெல்லாம் "டேய்! அடி வாங்குவ நீ!" அப்படிங்கற ஒரு மெரட்டல்தான் டீச்சர் வாயில இருந்து வரும். டீச்சரு பக்கத்து காலனியிலதான் இன்னொரு டீச்சரு வீட்டுல ஒரு போர்சன்ல வாடகைக்கு குடியிருந்தாங்க. அந்தக்காலத்துல தமிழுக்கு டியூசன்போன மாணாக்கர் நாங்க மட்டும்தான் இருப்போம்! டியூசன்னா என்ன? ஸ்கூல்ல தமிழ் பீரியட்ல மிச்சம் வைச்ச கேலிகிண்டல்கள் டியூசன்ல அரங்கேறும்.

டீச்சரை சகோதரின்னு நாங்க நினைச்சிருக்க முடியாது. அம்மா மாதிரியும் இல்லை. டீச்சராகவும் இல்லை. ஏதோ ஒரு உறவுப்பாலம் எங்களுக்குள். பெத்தவங்க மாதிரி எதுக்கெடுத்தாலும் திட்டாம, கூடப்பொறந்தவங்க மாதிரி ஒரு லிமிட்டுக்குள்ள  இல்லாம, நண்பிகள் போல அந்த வயசுக்கே உரிய அசட்டுக் கூட்டங்களா இல்லாம எங்க விடலைத்தனங்களை எல்லாம் சகிச்சுக்கிட்டு "இந்த வயசுல பசங்கன்னா இப்படித்தான்" அப்படின்னு எங்களை விட்டுபிடிச்சு எங்களை எங்களாகவே இருக்கவிட்ட அந்த ஆத்மாவை நாங்க உறவில் சேர்ப்பதென தெரியவில்லை. அனுக்கி?! இது கொஞ்சம் அருகாமையில் வரக்கூடும்.

அவங்களுக்கு நாங்க கொடுத்த சந்தோசம் தமிழ்ல நல்ல மார்க்கு எடுக்கறதுதான். +2 முடிச்சு அவனவன் டாக்டரு, இஞ்சினியருன்னு சீட்டு வாங்குனதுக்கு அப்பறம் ஸ்கூலுக்கு போய் ஸ்வீட்டு கொடுத்து ஆசி வாங்கிட்டு வந்ததோட சரி. மற்றுமொரு மாய உலகமான கல்லூரி வாழ்க்கை எங்களுக்குத் தேவையான ஆட்டக்களத்தைக் கொடுக்க பள்ளி எனும் சிறுவர்பூங்கா மனதில் மங்கத் தொடங்கிய காலம். டாக்டருக்கு சேர்ந்த வெங்கி வீடு டீச்சரு வீட்டுக்கு பக்கம்ங்கறதால சில நேரம் அவங்களை பார்க்க வாய்ப்புக் கிடைக்கும். மொதவெல்லாம் ஆர்வமா நின்னு காலேஜு கதையெல்லாம் சொல்லுவோம். நின்னு பேசற நேரம், காலம் கூடக்கூட குறையத்தான் செய்தது. மொத வருட கால்லூரி வாழ்க்கை அதுவரை அறிந்திராத மருட்சியைக் கொடுத்தாலும், அடுத்த வருடமே எல்லாரும் மைனரு ஆகிட்டோம். வாழ்க்கையே தலைகீழாகிப்போனது. அதுவரை விகல்பமில்லாமல் சிரிக்க மட்டுமே இருந்த எங்க நகைச்சுவை உணர்வு, அதன்பிறகு யார் எப்படி எவரை நார்நாராய்க் கிழித்து கிண்டலடித்து ஓட்டி அழவைக்கும்படி செய்யறமோ அதுவே திறமை என நிரூபிக்கும் கருவியாயிற்று. நண்பர்கள் சந்திப்பு அனைத்தும் அடுத்தவனை எப்படி அழவைப்பது என்பதற்கான திறனாய்வுக்களமாக மாறியது. நண்பர்களாக கூடிக்குழாவினாலும் அடுத்தவன் எப்ப மாட்டுவான்னு தேவுடு காக்கற புத்தி வந்துருச்சு.

காலேஜுல படிச்சு ஒன்னும் கலட்டலைன்னாலும் வெங்கி டாக்டருன்னும் நான் இஞ்சினியருன்னும் ஒரு லேசான கர்வம் வந்திருந்த நேரம். ஒரு நாள் நானும் வெங்கியும் டீச்சரு அவங்க வீட்டுமுன்னாடி நின்னுக்கிட்டு இருக்கறப்ப பார்த்தோம். எங்களைப் பார்த்ததும் அவங்களுக்கு ஒரே சந்தோசம்!

"எப்படிடா இருக்கீங்க?"ன்னு முகம் மலரத்தான் கேட்டாங்க.

"எங்களுக்கென்ன கொறைச்சல் டீச்சர்.."ன்னு ஆரம்பிச்சது பொங்கல்.

காலேஜ் பத்தியெல்லாம் கேட்டாங்க. படிக்கற படிப்பை பத்தியும் கேட்டாங்க. அரியலெல்லாம் வாங்க ஆரம்பிச்சிருந்ததால எனக்கு யாராவது படிப்பைப் பத்தி கேட்டா எங்க கண்டுபுடிச்சிருவாங்களோன்னு ஒரு பயம் வந்துரும். ஆனா நக்கல் விடுமா? அவங்க கேக்கறதுக்கெல்லாம் கோக்குமாக்கா ஏதாவது பதில் சொல்லிட்டு கெக்கேபிக்கேன்னு நாங்களே சிரிச்சுக்கறோம்.

"ஆக மொத்தம் உங்களுக்கு இப்ப வாயி மட்டும் கொஞ்சம் நீளமாயிருக்கு"ன்னாங்க.

"ஆமா... இப்ப ஸ்கூலெல்லாம் எப்படி டீச்சர்? பசங்க பரவாயில்லையா?"ன்னு கேட்டேன்.

"உங்க அளவுக்கு இல்லைடா.. பசங்க படிக்குது"ன்னாங்க.

"ஆமா.. தமிழைப் படிச்சி என்னத்தை கண்டோம்? இப்ப எல்லாம் இங்கிலீசுலயே இருக்கு. உங்க கிட்ட படிச்சதே வேஸ்ட்டு டீச்சர்"ன்னேன் நான்.

"அப்படியெல்லாம் சொல்லாதீங்கடா! அந்தந்த காலத்துக்கு அதது. படிச்சது எதுவும் வீணாப் போகாது" ன்னாங்க டீச்சரு.

"என்னத்த யூஸ்? நாங்க பாருங்க ஃபர்ஸ்ட் க்ரூப் எடுத்தோம். நான் டாக்டரு... இவன் இஞ்சினியரு... நீங்க தமிழைப்படிச்சி இன்னும் டீச்சராத்தானே இருக்கீங்க... "

இப்படி சொல்லிக்கிட்டே வந்த வெங்கி திடீர்னு "தமிழைப் படிச்சதாலதான் இன்னும் கல்யாணம்கூட ஆகாம இருக்கீங்க"ன்னு ஒரே போடாப் போட்டுட்டான். டீச்சரு இந்த வார்த்தையை எதிர்பார்க்கவே இல்லை! அவங்க கண்கலங்கி நாங்க பார்த்ததே இல்லை. அழுகைய அவங்களால அடக்க முடியலை. வேதனையாக பொங்கும் முகத்தில் கண்ணீர் வழிய "டேய்! நீங்க என்ன வேணா படிங்க. எனக்குச் சோறு போடற தொழிலை தப்பா பேசாதிங்க"ன்னு குரல் கம்ம சொல்லிட்டு வீட்டுக்குள்ள போயிட்டாங்க!

எங்களுக்கு பேயறைஞ்ச மாதிரி ஆயிருச்சு! என்னடா வெளையாட்டுக்குப் பேசப்போக இப்படி ஆயிருச்சேன்னு. இருந்தாலும் அந்த வயசு வீம்பு விடுமா? மனசுக்குள்ள உறுத்துனாலும் "ஆமா! உணமையச் சொன்னா கொழந்த மாதிரி அழுவறாங்க"ன்னு எங்களுக்குள்ள சொல்லிக்கிட்டோம். ஆனா இப்ப  எந்த வீம்பும் இல்லாம யோசிச்சா, வாழ்க்கையின் நிராசைகளை எல்லாம் தமக்கு மிகப்பிடித்த தமிழ் கற்பித்தல் என்பதன் மூலம் பூசிமெழுகி அற்புத ஓவியமாக அவங்க சித்தரிச்சு வைத்திருந்த கற்பனை வாழ்க்கை மீது நிதர்சனத்தைச் சொல்லறோம்னு சேறு எடுத்து வீசினதுதான் நாங்க செய்த அற்பச்செயல்!

சரி விடுங்க! இப்ப யோசிச்சு என்ன வரப்போகுது?  :(

| |
oooOooo
இளவஞ்சி அவர்களின் இதர படைப்புகள்.   சிறப்பு ஆசிரியர் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |