Tamiloviam
ஜூலை 09 2009
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
கட்டுரை : காந்தியின் போட்டியாளர்
- ச.ந. கண்ணன்
  Printable version | URL |

Chetan Bagatஅரை மணி நேரத்தில் சேதன் பகத்தின் எந்தப் புத்தகத்தையும் உங்களால் கடகடவென்று வாசித்துவிடமுடியும். ஹிந்து யங் வேர்ல்ட் போல எளிமையான ஆங்கிலம். ஒரு வார்த்தைக்குக்கூட அகராதியின் துணை தேவையிருக்காது. காந்தியின் சுயசரிதைக்குப் பிறகு இன்று  இந்தியாவில் அதிகம் விற்கும் புத்தகங்கள் என்கிற பெருமையை சேதன் பகத்தின் மூன்று நாவல்களும் பெற்றுள்ளன. பெரிதாக போட்டோ போட்டு நியூயார்க் டைம்ஸில் புகழ்ந்து தள்ளுகிறார்கள். ஆனால் இங்கே தலைகீழ் நிலைமை.  இலக்கிய விமர்சகர்கள் சேதன் பகத்மீது சாணி அடிக்கிறார்கள். இது என்ன எழுத்து என்று ஒரேவரியில் வெட்டிச் சாய்க்கிறார்கள்.

முதல் நாவல் - Five Point Someone - What not to do at IIT. ஐஐடி வளாகத்தின் உள்ளே நுழைய எல்லோருக்கும் சந்தர்ப்பம் வாய்க்காது. அப்படியும் நீங்கள் சாரங் கலை நிகழ்ச்சிகளின் ஆஸ்தான பார்வையாளர் என்றாலும் சாரங் மைதானத்தில் அமர்ந்துகொண்டு அவர்கள் உலகத்தை முழுமையாக அணுகுவது என்பது சாத்தியமில்லாத ஒன்று. அந்த மாய உலகத்தை தன் நாவலில் அகலமாகத் திறந்து காட்டுகிறார் சேதன் பகத். ஐஐடியில் வழங்கப்படும் மதிப்பெண்கள் புள்ளிகளின் (பாயிண்ட்ஸ்) அடிப்படையில் வழங்கப்படுபவை. பத்துக்கு எவ்வளவு பாயிண்டுகள் என்பதை வைத்துத்தான் ஒரு மாணவன் ராமானுஜமா கோயிந்சாமியா என்று கட்டம் கட்டுகிறார்கள். ஆறு பாயிண்ட் வரைக்கும் பாதுகாப்பு போலிருக்கிறது. கேம்பஸிலேயே ஐந்திலக்க சம்பளத்தில் அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் வாங்கிவிடலாம். ஆனால் இந்த நாவலின் கதை நாயகர்கள் மூவரும் ஐந்துப் புள்ளிக்காரர்கள். ஐஐடி வளாகத்தில் அவர்கள் செய்கிற அழிச்சாட்டியம்தான் மொத்த கதையும். சேதன் பகத்தின் உருப்படியான நாவல் என்று அவருடைய இந்த முதல் நாவலைத்தான் சொல்வேன். உண்மைக்கு மிக அருகில் உள்ள ஒரே காரணத்துக்காக.

அடுத்தது, One Night @ the Call Center. இந்த நாவலில் இருந்துதான் கீழே சறுக்க ஆரம்பிக்கிறார் சேதன் பகத். ஒரு கால் செண்டரில் ஓர் இரவில் நடக்கும் சம்பவங்கள்தான் கதை. நாவலை தொடங்கிய விதத்தில் பெரிய எதிர்பார்ப்பை உண்டுபண்ணிவிடுகிறார் ஆசிரியர்.  ஒவ்வொரு பக்கமும் படிக்க அவ்வளவு சுவாரசியமாக இருந்தாலும் பாதி நாவலில் நாவலை சினிமாவாக மாற்றிவிடுகிறார் சேதன் பகத். அதுவும் கிளைமாக்ஸ் உட்டாலக்கடி.  இறுதிப் பக்கங்கள், சிறிது நேரம் புத்தகத்தைக் கீழே வைத்துவிட்டு யோசிக்க வைக்கிறது. இந்தப் படம் ஹலோ என்று ஹிந்திப்படமாக எடுக்கப்பட்டு பொட்டிக்குள் சீக்கிரமே சென்றுவிட்டாலும் நாவல் மிகப்பெரிய வெற்றி.

 முதலிரண்டும் நாவல்களின் விற்பனை பத்து லட்சம் காப்பிகளைத் தாண்டிவிட்டது என்று கால் செண்டர் நாவல் வெளியான மூன்றாவது மாதத்தில் தம்பட்டம் அடித்துக்கொள்கிறது சேதன் பகத்தின் பதிப்பகத்தாரான ரூபா பப்ளிகேஷன்ஸ். இந்தச் சமயத்தில்தான் நியூயார்க் டைம்ஸ் சேதன் பகத்துக்கு போன் போடுகிறது.
 
மூன்றாவது, The Three Mistakes of My Life. சினிமாவுக்கென்றே எழுதப்பட்ட கதை. இந்திய - ஆஸ்திரேலிய கிரிக்கெட் மற்றும் குஜராத் சம்பவங்களின் பின்னணியில் சில அடல்ட் காதல் காட்சிகள் கொண்ட ஒரு தேசப்பக்திக் கதை (என்னே ஒரு கலவை).  சேதன் பகத்தின் ஆசைப்படியே ஐஐடி நாவலும் இந்த நாவலும் தற்போது இந்தியில் படமாக எடுக்கப்பட்டு வருகின்றன. ஆச்சா.

3 மிஸ்டேக்ஸ் தமிழுக்கும் சரிபடும். ஆனால் தமிழ் சினிமா இயக்குநர்களும் உதவி இயக்குநர்களும் தங்களை இலக்கியவாதிகள், படிப்பாளிகள் என்று சொல்லிக்கொள்வார்களே தவிர தன் படம் என்று வரும்போது கதையின் சொந்தக்காரராக தன்னை முன்னிறுத்திக்கொள்வார்கள். இது ஒரு தீரா நோய்.  இதைப் பற்றிப் பேசக்கூடக் கூடாது.

தமிழிலேயே நூறு ரூபாய்க்குக் குறைவாக நாவல்கள் விற்பது கிடையாது. ஆனால் முன்னூறு பக்கத்துக்கும் அதிகமான சேதன் பகத்தின் மூன்று நாவல்களும் தலா 95 ரூபாய்க்குத்தான் விற்கப்படுகின்றன. ஒரு கிலோ விரால் மீனை மட்டும் 350 ரூபாய்க்கு வாங்குகிறீர்களே என்று விதண்டாவாதம் பேசுவது கிடையாது.  பொட்டிக்கடை தவிர எல்லாப் புத்தகக்கடைகளிலும் சேதன் பகத்தைப் பார்க்கமுடியும். பிளாட்பார்ம் கடைகளின் ராஜா சேதன் பகத்தான். நானே இப்படியொரு மார்க்கெட்டிங்கில் ஈர்க்கப்பட்டுத்தான் முதல்முதலில் கால்செண்டர் புத்தகத்தை வாங்கினேன். விலையும் குறைவு. சுவாரசியத்துக்கும் பஞ்சமில்லை. வாங்கிப்போடு மீதி இரண்டு புத்தகங்களையும் என்கிற போதை எண்ணம் முதல் நாவல் முடித்தக் கணத்திலேயே ஏற்பட்டு விடுகிறது.

அசோகமித்ரன், சுஜாதா இருவரின் சுண்டுவிரலுக்கு அருகில்கூட செல்லமுடியாத ஓர் எழுத்து எப்படி காந்திக்கு அடுத்த வரிசையில் நிற்கிறது? ஏன் இவரைப் பற்றி மட்டும் நியூயார்க் டைம்ஸில் விசாலமாக  கட்டுரை எழுதுகிறார்கள்? ஏன் நம் ஆள்களால் லட்சம் காப்பிகள்  விற்பனைக்கு ப்ராப்தம் இல்லாமல் போகிறது? என்றெல்லாம் நெஞ்சு கொதித்தாலும் சேதன் பகத்தின் அடுத்த நாவலுக்கு என்னிடம் பெரிய எதிர்பார்ப்பு இருக்கத்தான் செய்கிறது.

oooOooo
                         
 
ச.ந. கண்ணன் அவர்களின் இதர படைப்புகள்.   கட்டுரை பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2008 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |