அரசியலில் தோல்விகளை பற்றிச் சிந்திப்பதை விட, அந்தத் தோல்வி எதனால் வருகிறது என்று சிந்திப்பதே சிறந்தது என்று அரசியல் ஆய்வாளர்கள் அடிக்கடி சொல்வதுண்டு. கடந்த 2002ம் ஆண்டு முதல் தோல்விகளையே சந்தித்துக் கொண்டிருக்கிறது தமிழகத்தின் பிரதான எதிர்கட்சியான அ.தி.மு.க. நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல், உள்ளாட்சி மன்றத் தேர்தல், சமீபத்தில் மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் என தோல்விகளையே அ.தி.மு.க. சந்தித்துக் கொண்டிருக்கிறது. அக்கட்சி வெற்றிகளை பெற என்ன செய்ய வேண்டும் அ.தி.மு.க. காணாமல் போய்க் கொண்டிருக்கிறதா என கட்சி சார்பாளர்கள், சார்பற்றவர்கள், நடுநிலைவாதிகளிடம் கேட்ட பொழுது.............
செங்குட்டுவன் :- எம்.ஜி.ஆர் என்ற உன்னதமான மனிதர் இருக்கும் வரை தி.மு.க. என்ற கட்சி எப்படி மக்களால் புறக்கணிக்கப்பட்ட கட்சியாக இருந்ததோ அதே நிலை இன்று அ.தி.மு.க.விற்கு வந்திருக்கிறது. அ.தி.மு.க. கட்சி தலைவர்களை விட, கட்சித் தொண்டன் இன்று சோர்வடைந்து விட்டான். கட்சி ஒரு போராட்டம் என அறிவித்தால் முன்பெல்லாம் அ.தி.மு.க.வில் தீயாக இருக்கும். அந்தப் போராட்டத்தை மக்கள் மனதில் அப்படியே பதிய வைக்கும் வேலையை கன கச்சிதமாக செய்வார்கள். ஆனால் இன்று அ.தி.முக. தலைவி சென்னையில் இருந்து கொண்டு மதுரையில் ஒரு போராட்டம் நடைபெறும் என அறிக்கை மூலம் அறிவித்து விட்டு வீட்டுக்குள்ளேயே இருக்கிறார். கட்சிக்காரர்கள் மட்டும் கூடி பெயருக்கு ஒரு போராட்டத்தை நடத்தி விட்டு கலைகிறார்கள். போராட்டம் என்றால் கட்சித் தலைமை ரோட்டிற்கு வர வேண்டும். அதனை ஜெயலலிதா செய்திருக்கிறாரா? இல்லையே, பிறகு எப்படி கட்சி வளரும். இன்றைக்கு ஜெயலலிதா செய்ய வேண்டிய வேலைகளை ராமதாஸ் செய்து கொண்டிருக்கிறார். இன்றைய முதல்வர் கருணாநிதியை பாருங்கள். சரியாகக் கூட அவரால் நடக்க முடியவில்லை. ஆட்சிக்கு எதிரானவர்களை எப்படி சமாளிக்கிறார். ஒரு மைனாரிட்டி அரசை வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கிறார். தனக்கு பின் கட்சியில் யார் யாருக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். தனது வாரிசுகளுக்கு எப்படி எல்லாம் வழி ஏற்படுத்திக் கொடுத்து, அதில் எந்த சிக்கலும் இல்லாமல், அவர்கள் முன்னேற வழிகளை செய்து கொண்டிருக்கிறார். ஆனால் அ.தி.மு.க.வில் எந்த நபராவது படிப்படியாக உயர முடிகிறதா? தினகரன், பி.ஹச். பாண்டியன், செம்மலை, தளவாய் பாண்டியன் கொஞ்சம் நன்றாக வந்து கொண்டிருந்தார்கள். தற்பொழுது அவர்களையும் ஓரம்கட்டி விட்டதாக செய்தி வருகிறது. எம். ஜி. ஆர் இருக்கும் பொழுது பலரை வளர்த்து விட்டார். அதாவது ஆக்ஸிலேட்டரை அவர்களிடம் கொடுத்து விடுவார். ஆனால் பிரேக்கை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பார். அதனால் அவர்களும் வளர்ந்தார்கள். கட்சியும் வளர்ந்தது. அது போல் ஜெயலலிதா தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் அடி மேல் அடி விழுந்து கட்சி காணாமல் போய் விடும்.
உதயசூரியன் :- மதுரை மேற்கு தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்று இருப்பது தி.மு.க.வின் செல்வாக்கு டில்லியில் இன்னும் ஒரு படி மேலே சென்று இருக்கிறது. விலைவாசி உயர்வு, கொலை, கொள்ளை என்று தமிழகத்தில் பெருகி விட்டதாக சொன்னார்கள். சொன்னவர்களை கோமாளிகள் என இந்த தேர்தல் முடிவு சொல்கிறது. இன்று தி.மு.கவின் பலமே அதன் கூட்டணி தான். இதனை மறுக்க முடியாது. அதனை உணர்ந்து தான் அனைவரையும் அரவணைத்துச் செல்கிறார் முதல்வர் கருணாநிதி. ஆட்சி இப்படியே சென்றால் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலிலும் வெற்றி எளிதில் கிடைத்து விடும். அ.தி.மு.க.கூட்டணியில் வை.கோ என்பவர் இருக்கிறாரே அவரால் அக்கூட்டணிக்கு எந்த நன்மையாவது இருக்கிறதா? உணர்ச்சிகரமாக பேசுவது, அறிக்கை விடுவது எல்லாம் வை.கோ.விற்கும் ஜெயலலிதாவிற்கும் கை வந்த கலை. ஆனால் அறிவுப்பூர்வமான செயல்பட்டால் தான் அரசியலில் ஜெயிக்க முடியும். அது தி.மு.க.வால் தான் முடியும். முடிகிறது.
கனகலட்சுமி :- அ.தி.மு.க. காணாமல் போய்க் கொண்டிருக்கிறது என்பது எல்லாம் முட்டாள்தனமான கருத்து. அ.தி.மு.க.விற்கு என்று ஓட்டுக்கள் அப்படியே தான் இருக்கின்றன. ஒரு ஓட்டுக்கு 2000 ரூபாய் என்று கொடுத்தால் 30,000 ஓட்டு வித்தியாசம் என்ன 3 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் கூட வெற்றி பெறலாம். அது பிரச்சினையல்ல. பொதுவாக இடைத்தேர்தலில் பெரும்பாலும் ஆளும்கட்சி தான் வெற்றி பெற்று வருகிறது. காங்கிரஸ் மட்டும் இந்த இடைத்தேர்தலில் தனித்து போட்டியிட்டு இருந்தால் டிபாசிட் கூட கிடைத்திருக்காது. தி.மு.க. கூட்டணி என்ற போர்வைக்குள் இருந்து கொண்டு தனது பலவீனங்களை கடந்த தேர்தல்கள் முதல் இன்று வரை மறைத்து வருகிறது. நாள் தோறும் கொலை, கொள்ளை, குண்டுவெடிப்பு இல்லாத செய்திகள் தமிழகத்தில் இருக்கிறதா? ஒரு தொகுதியில் வெற்றி பெற்று விட்டு தமிழகத்தை மீண்டும் பிடித்து விடலாம் எனபது கனவுக்கு சமமானது. ராமதாஸ் குடைச்சல் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார். விரைவில் அவர்கள் கூட்டணிக்குள்ளும் புகைச்சல் வரும். கூட்டணி வரும். வெளியே வருபவர்கள் மீண்டும் அம்மாவிடம் சேரத் தான் போகிறார்கள். அ.தி.மு.க. வெற்றி பெறத் தான் போகிறது.
செந்தில் குமார் :- அரசியல் அறிவு என்பது இன்றைய காலக்கட்டத்தில் மிக முக்கியமானதாக இருக்கிறது. கடந்த தலைமுறை அரசியல் சூழல் தற்பொழுது இல்லை. சிறு கட்சிகளையும் அரவனைத்துப் போனால் தான் எதிர்காலம் உண்டு என்பதை தி.மு.க. கணித்து அதன் பலனை அனுபவித்து வருகிறது. ஆனால் ஜெயலலிதாவிடம் அந்தக் குணம் இருக்கிறதா என்றே தெரியவில்லை. அவர் இன்னும் தான் பெரிய கட்சியின் தலைவி என்ற ஆவணத்திலேயே இருக்கிறார். இல்லை என்றால் வழியவந்து உங்களுக்கு ஆதரவு கொடுக்கிறோம் என்று சொல்லிஈ ஆதரவு கொடுக்கும் பாரதீய ஜனதாவின் ஆதரவை ஏற்காமல் இருப்பாரா? எதிர்கால அரசியலைப் பற்றி எண்ணுவதை விட இன்றைய அரசியல் என்ன? தி.மு.க.வை எதிர்ப்பது. அதற்கு தி.மு.க.விற்கு யார் யார் எல்லாம் எதிராக இருக்கிறார்களோ அவர்களை எல்லாம் ஒருங்கிணைத்து ஒரு கலக்கு கலக்கி ஆட்சியாளர்களை தூங்க விடாமல் செய்யலாம். அதனை விட்டு விட்டு மூன்றாவது அணி என்று போய் அதுவும் யார் தலைவர், யார் துணைத் தலைவர் என்று கூட இல்லாமல் அந்த அணி இருக்கிறது. மூன்றாவது அணியால் எதுவும் சாதிக்க முடியாது என பழைய வரலாறுகள் சொல்கிறது. இதனை எல்லாம் தெரிந்தும் அதில் போய் விழுந்து தனது இமேஜை ஜெயலலிதா இழந்து கொண்டு இருக்கிறார்.
சந்திரா :- அ.தி.மு.க. கடந்த சில தேர்தல்களில் தோல்வி அடைந்து வருகிறது என்பது உண்மை தான். அந்த தோல்விகள் எல்லாம் அ.தி.மு.க.வின் தவறினால் வந்த தோல்விகள் அல்ல. சூழ்நிலையால் வந்த தோல்விகள். 7 கட்சிகள் வழுவான ஒரு கூட்டணியை அமைத்துக் கொண்டு மோதும் பொழுது தனித்து போட்டியிட்டு அவர்களை வெற்றி கொள்ள முடியவில்லை. இந்த உண்மையை மதுரை மேற்கு தொகுதி இடைத்தேர்தல் தெளிவாக சொல்கிறது. இதே தொகுதியில் கடந்த தேர்தலில் அ.தி.மு.க. 3,000க்கும் அதிகமான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுகிறது. ஆனால் இன்று 30,000க்கும் மேலான ஓட்டில் தோல்வி அடைகிறது. கட்சி தலைமை இனி ஒரு தெளிவான முடிவுகளை எடுக்க வேண்டும். தி.மு.க.வின் கூட்டணியை சமாளிக்க விஜயகாந்துடன் கை கோர்ப்பதை தவிர வேறு வழியில்லை. அ.தி.மு.க.வும், தே.மு.தி.கவும் சேர்ந்து போராட்டங்களை மக்கள் முன்னெடுத்துச் செல்லும் பொழுது தி.மு.க. கூட்டணி தானாகவே ஆட்டம் கண்டு உடைய வாய்ப்பு இருக்கிறது. இதனை அ.தி.மு.க.தலைவி ஜெயலலிதா புரிந்து கொள்ள வேண்டும். வறட்டுக் கவுரவம் பார்த்துக் கொண்டு தே.மு.தி.க.வை தனித்து அரசியல் செய்யும் படி விட்டால் அது அ.தி.மு.க.விற்கு தான் ஆபத்து.
|