Tamiloviam
ஜூலை 12 2007
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
கட்டுரை : 150 ருபாய் சம்பளம்
- திருமலை கோளுந்து [golundhu1979@yahoo.com]
| | Printable version | URL |

Woodcutter Muthusamyஒரு கோடாரி தான் எனது வாழ்க்கையின் ஆணி வேர். இது இல்லாமல் எனது குடும்பம்  மகிழ்ச்சியாக இருக்க முடியாது என்கிறார் 45 வயதான முத்துச்சாமி. உழைத்தால் தான் வீட்டு  அடுப்பில் ரேஷன் கடை அரிசி, சோறாக கொதிக்கும். உழைப்பு இல்லாவிட்டால் பட்னி தான். எனது வேலை பெரிய,   பெரிய மர முண்டுகளை கோடாரி கொண்டு உடைத்துப் போடுவது. இந்த வேலையை எனது 16 வயதில் இருந்தே செய்யத் தொடங்கி விட்டேன். அன்று முதல் இன்று வரை வேலை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. வாழ்க்கையை, குடும்பத்தை நடத்த இந்த வருமானம் தான் உதவுகிறது. கட்டிய மனைவியோடு குடும்பம் நடத்தியதற்கு சாட்சியாக 5 குழந்தைகள். அதில் மூன்று பெண். இரண்டு ஆண். குடியிருக்க சொந்த வீடு கிடையாது. ஒத்திக்கு ஒரே ஒரு சின்ன வீடு.

 காலையில் சாப்பாடு பழைய சோறு. மதிய சாப்பாடு கேப்பைக் கூல். தொட்டுக் கொள்ள   ஊறுகாய் அல்லது மிளகாய் மட்டும். இரவு மட்டுமே சுடு சோறு. அதிலும் பெரும்பாலும் ரசம், துவையல் தான். அதிகாலை 6 மணிக்கு வேலைக்கு கிளம்பி மரக் கடைக்கு வந்தால் வேலையை ஆரம்பிக்க 8 மணி ஆகிவிடும். அதன் பின்பு மரக்கட்டை உடைப்பு தான் எனது உலகம். ஒரு நாளைக்கு ஒரு டன் மரக்கட்டைகளை உடைத்துப் போட்டால் 100 ரூபாய் சம்பளம் கிடைக்கும். அதற்கு குறைவாக உடைத்தால் 70 ரூபாய் தான் கிடைக்கும். நான் ஒன்றரை டன் வரை உடைப்பேன். ஒன்றரை டன்னுக்கும் மேலாக உடைக்க ஆசை தான், ஆனால் முடியாது. வலுக்கட்டாயமாக முயன்றால் மறு நாள் வேலைக்கு வர முடியாது. உடம்பை படுக்க வைத்து விடும். மனுஷனை அப்படியே சாய்க்கும் திறமை இந்த மரக்கட்டைக்கு உண்டு.

நான் ஆண்டவனிடம் கேட்பது எல்லாம் விபத்து இல்லாமல் வேலை பார்க்க வேண்டும். கோடாரியைக் கொண்டு ஒரு முண்டை பிளப்பது எளிதான காரியம் இல்லை. மூன்று விதமான உடைப்புகள் இருக்கிறது. பெரிய முண்டுகளை இரண்டாக மட்டுமே உடைத்துப் போடுவது. அதற்கு பெயர் பாலப் பிளப்பு என்பார்கள். அடுத்ததாக சாயப்பட்டறைகளுக்கு, செங்கல் சூளைக்கு கென்று மரக்கட்டைகளை உடைத்து போடுவது, அடுத்ததாக வீட்டுக்கு, பிணங்களை எரிக்க பயன்படும் விதத்தில் சிறிதாக மரக்கட்டைகளை உடைத்துப் போடுவது. இதனைச் செய்யும் பொழுது கவனமாகச் செய்ய வேண்டும். 5 கிலோ எடை உள்ள கோடாரியை வெட்டுக்கு விடும் பொழுது கட்டையின் நடுப்பகுதியில் விழும் படி போட வேண்டும். கொஞ்சம் தவறினால், காலுக்கு வந்து விடும். அப்படி காலில் வெட்டு விழுந்தால் பொழப்பு அவ்வளவு தான். கால்கள் சில சமயம் நரம்புகள் துண்டிக்கப்பட்டு உணர்ச்சி இல்லாமலேயே போய் விடும். அதே போல் மரக் கட்டைகள் பிளக்கும் பொழுது அதில் உள்ள சிறு கட்டைகள் கத்தி போல இருக்கும். இது சிதறி கண்ணையோ, மண்டையிலேயோ குத்தி  விடும். தரையில் இருக்கும் மண் சில சமயம்  சிதறி கண்களை பதம் பார்த்து விடும். வேப்பமர முண்டு, புளியம்மர முண்டு போன்றவைகளை உடைக்கும் பொழுது கடினமாக இருக்கும். மற்ற வேலைகளில் இருக்கும் சிரமங்கள் விட இதில் அதிகமான சிரமம் இருக்கிறது.

நாள் தோறும் கீழே குணிந்து மரக்கட்டைகளை பிளக்கும் பொழுது உடம்பின் கை, கால்கள்  முதல் இடுப்பு, தோல் பகுதி வரை எல்லாமே வலி எடுக்கும். அப்படி எங்காவது உடம்பு பிடித்துக் கொண்டு டாக்டரிடம் போனால் உடம்பின் எல்லாப் பகுதி எலும்புகளும் தேய்ந்து கொண்டே இருக்கிறது. இந்த வேலையையே பார்க்காதே என்பார்கள். வேலையையே பார்க்கா விட்டால் சாப்பாட்டிற்கு என்ன செய்வது. வேறு வழியில்லாமல் உடல் நிலை லேசாக சரியாக உடனே பழைய படி உடைப்புக்கு வரத் தான் செய்ய வேண்டும்.

எனது சம்பளம் 150 ருபாய். எனது மனைவி கூலி வேலைக்கு போய் கொண்டு வருவது 40  ருபாய். மொத்த வரவு 190 ருபாய். ஆனால் செலவு? எப்படி கணக்கு சொல்வது என்று தெரியவில்லை. ஏதாவது பண்டிகைகள் வந்து விட்டால் வாழ்க்கை ரணகளமாகி விடுகிறது. பிள்ளைகள் கேட்டதை வாங்கிக் கொடுக்க முடியவில்லை. வாங்கிக் கொடுக்க நினைத்து கடன் வாங்கினால் அதற்கு வட்டியும், முதலும் கொடுத்து மீண்டுவர முடியவில்லை. ஓர் பெண்ணை கட்டிக் கொடுத்திருக்கிறேன். 5 பவுண் நகை, மாப்பிள்ளைக்கு ஒரு பவுணில் மோதிரம் 500 ரூபாய்க்கி வாட்ச் வாங்கி கொடுத்து, ரொக்கம் 5 ஆயிரம் கொடுத்தேன். இவை தவிர மற்ற செலவுகள் என வாழ்க்கையில் சேமித்த பணம் முக்கால்வாசி போய் விட்டது. இன்னும் 4 குழந்தைகளை எப்படி கரையேற்றுவது என தெரியவில்லை. நம்பிக்கை இருக்கிறது. உடலில் உழைக்கும் தெம்பு இருக்கிறது. இரண்டு குழந்தைகளோடு நிறுத்தி இருக்கலாம் என இப்பொழுது நினைக்கிறேன். ஆனால் அன்றைய சூழ்நிலை இப்படி இல்லை. அப்பொழுது வேலைக்கு போய் விட்டு வந்தால் ஒரே பொழுது போக்கு மனைவி தான். கணக்கில்லாமல் பெற்றாகி விட்டது. நான் கூட  பரவாயில்லை எனது மனைவி மூக்கம்மாள் தான் பாவம். கூலிக்கு உழைத்து விட்டு வீட்டில் சோறு ஆக்கி, பிற வேலைகளைப் பார்த்து நிம்மதியாகப் படுக்க முடியாது. அவற்றை எல்லாம் அவள் எப்படி சமாளிக்கிறாளோ தெரியவில்லை. ஆண்களை விட பாவப்பட்டவர்கள் பெண்கள். பிள்ளைகளை நன்றாக வளர்க்க வேண்டும். நல்ல மாப்பிள்ளையாக பார்த்து கட்டிக் கொடுக்க வேண்டும். இவற்றுக்கெல்லாம் பணம் தேவை. உழைத்தால் தான் அந்த பணத்தை பார்க்க முடியும். நாங்கள் உழைக்கிறோம். வாழ்க்கையில் பெரிய ஆசைகள் எல்லாம் கிடையாது. கடைசி வரைக்கும் உழைக்கணும். நோய் நொடியில் படுக்காமல் நிம்மதியா போய் சேர வேண்டும். அது போதும் என்றவர் கோடாரியை தூக்கி முண்டின் மேல் போடுகிறார். டங்........ என்ற சத்தத்தோடு பிளக்கிறது முண்டு.

oooOooo
                         
 
திருமலை கோளுந்து அவர்களின் இதர படைப்புகள்.   கட்டுரை பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2007 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |