Tamiloviam
ஜூலை 19 2007
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
தராசு : குழப்பத்தில் அ.தி.மு.க தலைமை
- மீனா [feedback@tamiloviam.com]
| | Printable version | URL |

 

சமீபகாலமாக அ.தி.மு.க தலைவியின் நடவடிக்கைகளைக் கண்டு குழம்பாதவர்களே இருக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு கட்சிப் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களை பெருமளவில் குழப்பி சந்தோஷப்பட்டிருக்கிறார் ஜெயலலிதா.

மதுரையில் நடந்த இடைத் தேர்தலில் தி.மு.க கூட்டணி அபார வெற்றி பெற - வழக்கம் போல அதை தேர்தல் தில்லுமுல்லு என்று கூறிய ஜெயலலிதா சென்னை நகரமன்றத் தேர்தலைப் புறக்கணித்ததைப் போலவே உள்ளாச்சித் தேர்தலையும் புறக்கணித்தார். உச்சகட்டமாக ஜனாதிபதி தேர்தலில் தான் சார்ந்த மூன்றாவது அணி யாருக்கும் ஓட்டுப்போடாது என்று கூறிவிட்டு - முலாயம், சந்திரபாபு உள்ளிட்ட அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கு அல்வா கொடுத்துவிட்டு அ.தி.மு.க ஜனாதிபதி தேர்தலில் ஓட்டுப் போட்டது. தன் கட்சி ஆட்கள் ஓட்டுப் போட்டது தன்னிச்சையாக அவர்கள் எடுத்த முடிவு - தனக்கும் அதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று ஜெயலலிதா கூறியதை குழந்தை கூட நம்பவில்லை. தன் விருப்பத்தை மீறும் ஆட்களை ஒரு வழியாக்கும் ஜெயலலிதாவின் போக்கு தமிழகத்தில் அனைவரும் அறிந்ததே. நிலைமை அப்படி இருக்க தன்னை மீறி கட்சிக்காரர்கள் ஓட்டுப் போட்டார்கள் என்று அவர் திரும்பத் திரும்ப கூறுவது "அப்பட்டமான பொய்" அல்லது "கட்சி தன் கட்டுப்பாட்டில் இல்லை என்பதை அவரே ஒப்புக்கொள்கிறார்" என்பதையே குறிக்கும்.

பல்லாண்டு பாரம்பரியம் வாய்ந்த கட்சியின் தலைவி - அனுபவ அறிவு நிறைந்தவராக தன்னைத் தானே கூறிக்கொள்ளும் அதிமுக தலைவி இவ்விஷயங்களில் ஒன்றை கவனிக்கத் தவறியுள்ளார். கட்சி ஆரம்பித்து சில மாதங்களே ஆன நிலையில் விஜயகாந்தின் தேமுதிக சென்னை நகரமன்ற தேர்தலை தைரியமாக சந்தித்து சில இடங்களில் வெற்றியும் பெற்றது. தொடர்ந்து மதுரை இடைத் தேர்தலிலும் விஜயகாந்த் கட்சி கணிசமான வாக்குகளைப் பெற்றுள்ளது.. மேலும் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலிலும் ஆளும் கட்சியின் அராஜகத்தையும் மீறி பல இடங்களில் தேமுதிக வெற்றி பெற்றுள்ளது. கட்சி ஆரம்பித்து சில மாதங்களே ஆன நிலையில் விஜயகாந்திற்கு இருக்கும் துணிவும் தைரியமும் அ.தி.மு.க தலைமையிடம் இல்லையே... பிரச்சனைகளை தைரியமாக எதிர்கொள்வதற்கு பதிலாக மற்றவர்கள் மீது பழியைப் போட்டுவிட்டு ஓடி ஒளிந்து கொள்வதை எவ்வகை துணிச்சலில் சேர்ப்பது?

வார்த்தைக்கு வார்த்தை ஆளும் தி.மு.க வை மைனாரிடி அரசு என்று சாடிவரும் ஜெயலலிதாவோ அவரது கூட்டணி கட்சிகளோ இன்று வரை அரசின் குறைகளைப் பற்றி ஆக்கப்பூர்வமான முறையில் எதிர்புகளை வெளியிடவே இல்லை.. ஆனால் அவர்கள் செய்ய வேண்டிய வேலையை குறைவின்றி செய்து தி.மு.கவிற்கு குடைச்சல் கொடுத்துவருகிறார் ராமதாஸ்.. அவரது குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லத்தெரியாமல் பல நேரங்களில் முழிக்கிறது தி.மு.க தலைமை... நியாயமாகப் பார்த்தால் இந்த வேலையை ஜெயலலிதா அல்லவா செய்திருக்கவேண்டும் ? அப்போதுதானே மக்கள் மத்தியில் அவருக்கும் அவரது கட்சிக்கும் செல்வாக்கு கூடியிருக்கும் ?

அதிமுகவில் கீழ்மட்டத் தொண்டர்களுடன் தலைமைக்கு உறவு முற்றிலும் அறுந்து விட்டது - ஒரு சிலர் கொடுக்கும் தவறான வழிகாட்டுதல்கள் மட்டும் தலைமையால் ஏற்றுக்கொள்ளப்படுகிறதே தவிர உண்மையான தொண்டனுக்கு இக்கட்சியில் மதிப்பில்லை என்ற முணுமுணுப்புகள் அக்கட்சியில் பரவலாக கேட்கத் தொடங்கிவிட்டன.. அதை உறுதி செய்யும் வகையில் தான் அடிக்கடி நிர்வாகிகள் மாற்றும் படலமும் நடந்துவருகிறது. மொத்தத்தில் உண்மைத் தொண்டர்கள் எல்லாம் கட்சித் தலைமை மீதும் கொள்கைகள் மீதும் நம்பிக்கை இழந்துவிட்டார்கள்..

இந்நிலையை மேலும் மோசமாக்குவதும் சீராக்குவதும் ஜெயலலிதாவின் கைகளில் தான் உள்ளது. அவர் இப்போதாவது விழித்துக்கொண்டால் தான் வரும் காலங்களிலாவது தி.மு.க.விற்கு சரியான மாற்று தாங்கள் தான் என்ற பெருமையை தக்க வைத்துக் கொள்ளமுடியும்.. இல்லாவிட்டால் இன்று காங்கிரஸ் இருக்கும் நிலைமைக்கு அதிமுகவும் வெகு சீக்கிரத்தில் தள்ளப்படும்..

 

 

|
oooOooo
                         
 
மீனா அவர்களின் இதர படைப்புகள்.   தராசு பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2007 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |