பல படங்களில் பார்த்து பார்த்து சலித்துப் போன ஒரு கதையை மீண்டும் காமெடி கலந்து சொல்ல வந்திருக்கிறார் மன்சூர் அலிகான். ஆனால் சரியாக சொல்லத் தெரியாததால் ரசிகர்களை கடுப்பேற்றி அவர்களின் சாபத்திற்கு ஆளாகிறார்கள் மன்சூரும் இயக்குனர் ஜமீன்ராஜும்.
பணத்திற்காக எதையும் எப்படி வேண்டுமானாலும் செய்வேன் என்ற கொள்கை கொண்டவர் மன்சூர். தாசில்தார் மாணிக்க வினாயகத்தின் பெண் மஞ்சு எம்.எல்.ஏ அனுராதாவின் மகனைக் காதலிக்கிறார். இந்தக் காதலை வெறுக்கும் அனுராதா பேசிப் பேசி மகனின் மனதை மாற்றிவிடுகிறார். ஆனால் தங்களால் இந்தக் கல்யாணம் நிற்கக்கூடாது என்று நினைக்கும் அனுராதா மஞ்சுவின் மீது பழியைப் போட நினைத்து கல்யாணத்தை நிறுத்தும் பொறுப்பை மன்சூரிடம் ஒப்படைக்கிறார். பணத்தை பெற்றுக் கொண்ட மன்சூர் திருமணத்தை தடுத்து நிறுத்த ராஜ தந்திர திட்டங்களை வகுத்து வெற்றியும் பெற்று விடுகிறார்.
திருமணம் நின்ற அதிர்ச்சியில் மஞ்சுவின் தந்தை மரணம் அடைகிறார். தனது தந்தையின் சாவுக்கு காரணமான மன்சூரை பழி வாங்க வேண்டும் என துடிக்கிறார் மஞ்சு. திருமணம் நின்று போனதற்கு காரணம் மன்சூர்தான் என நினைத்து அவரை பழிவாங்க கற்பழிப்பு புகார் கொடுக்கிறார் மஞ்சு. மஞ்சுவின் புகாரால் கம்பி எண்ணுகிறார் மன்சூர்.
ஒரு கட்டத்தில் மஞ்சுவுக்கு உண்மை தெரியவருகிறது. அதன் பிறகு மன்சூரை காதலிக்க தொடங்குகிறார். மன்சூரும் மஞ்சுவும் இணைந்தார்களா இல்லையா என்பதே மீதிக்கதை.
தன்னை நாயகான காட்டிக்கொள்ள படாதபாடுபடுகிறார் மன்சூர். ஆனாலும் உபயோகம் ஒன்றும் இல்லை. சின்ன பையன்களுடன் கோலி விளையாடும் மன்சூர் அவ்வப்போது ஆக்ரோஷமாகி வில்லத்தனம் செய்வது நல்ல காமெடி. மன்சூரின் கோபம் சிரிப்பைத்தான் வரவழைக்கிறது. இயக்குனர்கள் மற்றும் நடிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் - மன்சூருக்கு அவ்வப்போது ஏதாவது ஒரு துண்டு துக்கடா வேடமாவது உங்கள் படங்களில் கொடுங்கள்... அப்போதுதான் இவரது ஹீரோயிஸக் கொடுமையிலிருந்து ரசிகர்கள் விடுபடமுடியும்.
மன்சூரே இப்படி என்றா புது முக நடிகை மஞ்சுவிடம் என்ன எதிர்பார்க்கமுடியும்? அனுராதா அபிநயஸ்ரீ, மாணிக்க வினாயகம், சுந்தர்ராஜன் என்று பலர் இருந்தும் ஒருவரது நடிப்பும் உருப்படியாக அமையவில்லை. போதாத குறைக்கு நெல்லை சிவா, போண்டா மணி, கொட்டாச்சி, கிங்காங் கூட்டணியின் காமெடி சிரிப்புற்கு பதிலாக எரிச்சலை மட்டுமே வரவழைக்கிறது. மக்கள் மத்தியில் இன்னும் பிரபலமாக வேண்டும் என்று நினைத்தோ என்னவோ இந்தப் படத்தில் நடித்து விஷப் பரீட்சை செய்திருக்கிறார் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமா - நல்லதாகப்படவில்லை...
வாசகன் இசையில் பாடல்கள் எல்லாம் ரொம்ப சுமார். படத்தில் கதை, பாடல்கள் எழுதி, அதில் சிலவற்றை தானே பாடி - கதாநாயகனாக நடித்திருக்கிறார் மன்சூர்.
|