பாகிஸ்தானில் தீவிரவாத முகாம்கள் செயல்படுவதை அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ ஆதாரத்துடன் நிரூபித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவில் வாழும் பாக். இளைஞர் ஒருவரது சந்தேகமான நடவடிக்கைகளால் அவரைக் கண்காணித்து கைது செய்துள்ள எப்.பி.ஐ, பாகிஸ்தானில் தீவிரவாத முகாம்கள் செயல்படுவதை செயற்கைகோள் மூலமாக எடுத்துள்ள படங்களின் மூலம் நிரூபித்துள்ளது.
உலகம் எங்கும் பயங்கரவாதம் விரிந்து பரந்துள்ள இச்சூழ்நிலையில் சூழ்நிலையில் பாகிஸ்தானைத் தலைமையிடமாகக் கொண்டு பல தீவிரவாத அமைப்புகள் செயல்பட்டு வருவதை இந்தியா பலமுறை ஆதாரங்களோடு உலக வல்லரசு நாடுகளுக்கு நிரூபித்துள்ளது. ஆனால் அப்போதெல்லாம் ஏதாவது ஒரு நொண்டி சாக்கைச் சொல்லி இக்குற்றங்களை மறுத்து வரும் பாக்.அதிபர் தீவிரவாதிகளை ஒழிக்க உலக நாடுகளோடு இணைந்து ஒத்துழைக்கத் தயார் என்றெல்லாம் கூறிவருகிறாரே தவிர தங்கள் நாட்டில் உள்ள தீவிரவாதிகளைக் கட்டுப்படுத்த பாக். அதிபர் ஒரு நடவடிக்கையும் எடுப்பதில்லை என்பதுதான் அப்பட்டமான உண்மை. காஷ்மீரை இந்தியாவிடமிருந்து பிரித்து தங்கள் நாட்டோடு இணைக்க தீவிரவாதிகளால்தான் முடியும் என்று காலம் காலமாக பாக். ஆட்சியாளர்கள் கருதிவருகிறார்கள். அதனாலேயே அவர்கள் தங்கள் நாட்டில் இத்தகைய தீவிரவாதிகளை பராமரித்து வருகிறார்கள்.
ஏழை சொல் அம்பலம் ஏறாது என்ற பழமொழிக்கு ஏற்ப இந்தியா பாக்.கின் இந்த இரட்டை வேஷத்தை பல முறை ஆதாரங்களோடு நிரூபித்தும் நம்பாதவர்கள் அமெரிக்க உளவு நிறுவன செய்திக்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்போகிறார்கள் என்று பார்க்கவேண்டும்.
|