ஜூலை 27 06
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
பாடல்களால் ஒரு பாலம் : இரயிலில் ஓர் ஒயில்
- அபுல் கலாம் ஆசாத் [azad_ak@yahoo.com]
Save as PDF | Bookmark in Del.icio.us | | Printable version | URL |

தமிழில்,

திரைப்படம்: சிவகாமியின் செல்வன்

பாடலாசிரியர்: புலமைப்பித்தன்

இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்

பாடியவர்: டி.எம்.சௌந்தரராஜன்

திரையில்: சிவாஜி கணேசன், .வி.எம்.ராஜன், வாணிஸ்ரீ.

 

இந்தியில்,

திரைப்படம்: ஆராதனா

பாடலாசிரியர்: ஆனந்த் பக்ஷி

இசை: எஸ்.டி.பர்மன்

பாடியவர்: கிஷோர் குமார்

திரையில்: ராஜேஷ் கன்னா, சுஜித் குமார், ஷர்மிளா டாகூர்

 

'சலசல சலசல இரட்டைக்கிளவி

தகதக தகதக இரட்டைக்கிளவி

உண்டல்லோ தமிழில் உண்டல்லோ' என இரட்டைக்கிளவியை எல்லாருக்கும் அறிமுகம் செய்துவைத்தவர் வைரமுத்து.

பல்லவியின் இரண்டு அடிகளின் கடைசியிலும் இரட்டைக்கிளவிகள். தொடர்ந்த இரண்டு சரணங்களின் கடைசி அடிகளிலும் இரட்டைக்கிளவிகள். அவற்றின் முன்னே கச்சிதமாகப் பொருந்துகின்ற முதலடிகள். இப்படி நகாசு வேலையை திரைப்பாடலில் செய்துவைத்தவர் புலமைப்பித்தன்.

ஜிகுஜிகு, ஜிலுஜிலு, குளுகுளு, கிளுகிளு இவையே அந்த இரட்டைக்கிளவிகள்.

அது ஒரு குளிர்ப்பிரதேசம். கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் பசுமை படர்ந்திருக்க, அதனிடையே கோடு கிழித்தாற்போல இருப்புப்பாதை. இருப்புப் பாதையையொட்டி அதனுடன் இணையாகச் செல்லும் சாலை. அங்கே செல்லும் இரயிலின் வேகம் ஒன்றும் காற்றைக் கிழித்துப் பறப்பதாக இல்லை. சாலையில் செல்லும் எந்த வாகனமும் இரயிலின் வேகத்தோடு கூடவே செல்வதற்குத் தோதுவான வேகம்.

இரயிலின் சன்னலின் ஓரத்தில் ஓர் ஒயில் அமர்ந்திருக்கிறாள். தடிமனான புத்தகத்தைக் கையில் வைத்துக்கொண்டு புரட்டிக்கொண்டே வருகிறாள். புத்தகத்தை ஒயில் படித்தாளோ இல்லை படிப்பதாகப் பாவனை செய்தாளோ எவரும் அறியார். ஆனால், இரயிலுடன் கூடவே சாலையில் வாகனத்தில் வந்த இளஞன் ஒருவன் ஒயிலைப் படித்துக்கொண்டே வந்தான். அவள் புத்தகத்தின் பக்கங்களைப் புரட்டும்போது ஓரக்கண்ணால் அவனைப் பார்த்து அவனது மனதையும் புரட்டிப் போட்டாள். அவள் புரட்டிப் போட்டதில் அவனது மனதில் காதல் விழித்துக்கொண்டது. காதல் வந்தால் கவிதையும் கூடவே வரவேண்டுமல்லவா, வந்தது.

உள்ளம் ரெண்டும் ஒன்றை ஒன்று

மிஞ்சும் வண்ணம் ஓடும் வேகம் ஹே

ஜிகுஜிகு ஜிகுஜிகு ஜிகுஜிகு ஹே!

பெண்மை என்னும் தென்றல் ஒன்று

என்னைத் தொட்டுக் கொஞ்சும் இன்பம் ஹே

ஜிலுஜிலு ஜிலுஜிலு ஜிலுஜிலு ஹே!

காத்திருந்தாள் ஒரு ராஜாத்தி - இரு

கண்களில் மையெழுதி!

கண்டுகொண்டாள் என்னை நெஞ்சில் நிறுத்தி - அவள்

கோடியில் ஓரழகி!

தொட்டுத் தொட்டு கட்டுக் கதை

இட்டுச் சொல்லும் பட்டுக் கண்கள்! ஹோ!

குளுகுளு குளுகுளு குளுகுளு ஹே!

நேற்றிரவு நல்ல பால்நிலவு - எந்தன்

நெஞ்சினில் ஓர் கனவு!

வந்தவள் யார் இந்தத் தேவதையோ - இவள்

வார்த்தைகள் தேன்மழையோ!

செல்லக் கன்னம் வெல்லம் என

மெல்லமெல்ல கிள்ளக்கிள்ள! ஹோ!

கிளுகிளு கிளுகிளு கிளுகிளு ஹே!

தமிழ்த் திரையில் இரயிலில் ஒயிலாகத் தோன்றியவர் வாணிஸ்ரீ. உடன் செல்லும் வாகனத்தில் சிவாஜியும் ஏ.வி.எம். ராஜனும். புத்தகத்தைப் பார்ப்பதும், சிவாஜியைப் பார்ப்பதும், பின்பு அலட்சியமாக முகத்தைச் சுழித்துவிட்டு மீண்டும் புத்தகத்தைப் படிப்பதுமான பாவனையில் துவங்கி, மெல்லமெல்ல பாடலில் ஒலிக்கும் வர்ணனைகளை ரசிக்கத் துவங்கி, இதழோரத்தில் தோன்றும் புன்னகையுமாக வாணிஸ்ரீ.

Rajesh Kanna, Sharmilaஆராதனாவில் ஷர்மிளா டாகூர் புத்தகத்தில் முகம் மறைத்து விளையாட்டுக் காட்டுவதைப் பார்த்தபின் சிவகாமியின் செல்வனைப் பார்க்க நேர்ந்தால், அந்தக் காட்சியின் நேர்த்திக்காக வாணிஸ்ரீ எத்தனை சிரமப்பட்டிருப்பார் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

அலட்சியமாகப் பார்க்கும் பார்வையை ஓரிரு வினாடிகள் வீசுவாரென்றால், அடுத்த வினாடி பொய்யான கோபப் பார்வையை வீசுவார். பிறகு புத்தகத்தில் முகம் புதைத்துக்கொள்ளும் பாவனையில் சில வினாடிகளும், மெதுவாகப் புத்தகத்தை விலக்கி அவனது பாட்டில் இருக்கும் நாயகி தான்தானா என்னும் சந்தேகம் தன்னை ஆட்கொண்டது போன்ற முகபாவனையில் சில வினாடிகளாகளுமாக உட்கார்ந்த இடத்திலிருந்தே பல உணர்வுகளை வெளிப்படுத்துவார்.

இப்படியான முகபாவங்கள் அன்று முதல் இன்று வரையில் தமிழ்த் திரையில் வந்துகொண்டே இருக்கின்றன. துவக்கத்தில் கொஞ்சம் விலகி நிற்கவேண்டுமென நினைப்பதும், பிறகு இணைந்துகொள்வதுமாக பார்க்கின்ற படங்களிலெல்லாம் ஒன்றிரண்டு காட்சிகள் வந்துபோனாலும் அலுப்புத் தட்டாமல் இருப்பதற்குக் காரணம் நமது மனதில் இயல்பாகவே வேர்விட்டிருக்கும் மென்மையான உணர்வுகளும், திரையில் தோன்றுகின்ற நடிக நடிகையர் மேலிருக்கும் அபிமானமுமே. இந்த அபிமானங்கள் வளர்ந்து சார்பு நிலையை உருவாக்காமலிருந்தால் அது நடுநிலை.

காட்சியில், திறந்த ஜீப்பினை ஓட்டிக்கொண்டு ஏ.வி.எம்.ராஜன் சிவாஜியின் நண்பராக அவ்வப்போது சிந்தும் புன்னகையுடன் வர, தனக்கே உரிய அற்புதமான உதட்டசைவில் சிவாஜி, புலமைப்பித்தன் - எம்.எஸ்.விஸ்வநாதன் கூட்டணிக்கு உயிரூட்டிக்கொண்டு வர, மூன்று நிமிடங்களில் பெரிய காதல் நாடகத்தையே திரையில் அரங்கேற்றிக் காட்டிய பாடலிது.

இந்தியில் இதன் மூலவடிவில் ராஜேஷ் கன்னாவும், சுஜித் குமாரும் ஜீப்பில் வர, இரயிலில் ஷர்மிளா டாகூர்.

இந்தித் திரையில் எழுபதுகளில் ராஜேஷ் கன்னாவுக்கு இருந்த அங்கீகாரம் அபாரமானது. கொஞ்சம் தேசபக்தி, கொஞ்சம் அம்மா பாசம், கொஞ்சம் தங்கைப் பிரியம், கொஞ்சம் காதல், மிகமிகக் கொஞ்சம் வீரம் இப்படியான கலவையில் வெற்றிப் படங்களின் நாயகனாகவே அவர் வலம் வந்துகொண்டிருந்தார்.

இந்தப் பாடல் காட்சியில் ராஜேஷ் கன்னாவின் நண்பராக வண்டியை ஓட்டிக்கொண்டு வருகின்ற சுஜித் குமார் வங்காளத்தைச் சேர்ந்தவர். மிதுன் சக்ரபோர்த்தியின் வருகைக்கு முன்பு வரையில் வங்காளத்திலிருந்து வந்து பிரபலமாகக் காலூன்றிய நடிகர் என சுஜித் குமாரைச் சொல்லலாம். பின்னாளில் சுஜித் வில்லனாகிப்போனார்.

ஷர்மிளா டாகூருக்கும் வாணிஸ்ரீக்கும் இயல்பாகவே பொருந்துகின்ற உயரமான சிகை அலங்காரமும், இந்தியில் இருந்ததைப் போலவே தமிழிலும் ஆண்களின் உடையமைப்பில் நேபாளபாணித் தொப்பியும், ஜிகுஜிகுவென பாடலுடன் சேர்ந்து ஒலிக்கும் இரயிலின் சத்தமும், சிலநேரங்களில் இந்தியைப் பார்க்கிறோமா தமிழைப் பார்க்கிறோமா என யோசிக்கச் செய்யும்.

தமிழில் சரணத்தில் கவிஞர் சொல்கிற கனவில் வந்த தேவதை, இந்தியில் பாடலின் பல்லவியிலேயே வந்துவிடுகிறாள்.

மேரே சப்புனோன்கி ரானி கப் ஆயேகி தூ

ஆயே ருத்து மஸ்தானி கப் ஆயேகி தூ

பீத்து ஜாயே ஸிந்தகானி கப் ஆயேகிதூ

சலே ஆ தூ சலே ஆ!

எந்தன் கனவினில் வந்த தேவதையும் நீயோ

இந்த வசந்தத்தின் மொத்த சுகந்தமும் நீயோ

என்னில் வாழவந்த காவியப்பெண்ணாக நீயோ

வருவாய்! நீ வருவாய்!

(இது வார்த்தைக்கு வார்த்தையான மொழிமாற்றம் அன்று. பொருளை உள்வாங்கிக்கொண்டு பாடலின் வரிகளைத் தமிழில் அதே மெட்டிற்குப் பொருந்தும்படியாக மாற்றி எழுதியது. ஓரளவிற்குதான் வரிகள் பொருந்தும். இனி தொடரப்போகும் எல்லா மொழிமாற்றங்களும் இப்படித்தான் இருக்கும்.)

காதலின் வீதியும் தோட்டத்து மலர்களும்

எங்கும் தோன்றும் வண்ணமயமும்

உன் காதலின் கீதத்தைக் கேட்கத் துடிக்கும்!

(என் கனவில் வந்த தேவதையும் நீயோ)

ப்யார்கி கலியான் பாகோன்கி கலியான்

சப்ரங்கு ரலியான் பூச்ரஹிஹை

கீத் பன்ஹட்டுபே கிச்தின் காயேகி தூ

(மேரே சப்புனோன்கி ரானி கப் ஆயேகி தூ)

இந்தியில் இந்தப் பாடலில் ஒலித்த ஒரு குறும்பு தமிழில் ஒலிக்கவில்லை. அவளை வர்ணித்துக்கொண்டே செல்லும் பாடலின் முடிவில் நாயகன் நாயகியை செல்லமாகச் சீண்டிப்பார்ப்பான். 'என் கனவில் வந்த தேவதையே நீ எப்போது என்னுடன் வருவாயோ, எப்போது காதலின் கீதம் பாடுவாயோ' என்றெல்லாம் கேட்டுக்கொண்டே, கடைசியில், 'எனக்கு நம்பிக்கையில்லை, உன்மேல் உண்டானது போலவே இன்னொருத்தியின் மீதும் காதல் உண்டாகாது என்று உறுதியாகச் சொல்லமுடியாது. அப்படி உண்டாகிவிட்டால் நீ வருத்தப்படுவாய்' என்று சொல்கிறான்.

க்யா ஹை பரோஸா ஆஷிக் தில்கா

அவுர் கிஸிபே யே ஆஜாயே

ஆகயாதோ பஹூத் பச்தாயேகி தூ

(மேரே சப்புனோன்கி ரானி கப் ஆயேகி தூ)

நாளையென் கனவில் இன்னொரு கீதம்

தோன்றும் வேளை பாதை மாறும்

நீ கனலாகி என்னை அன்று சூழக்கூடும்!

(என் கனவில் வந்த தேவதையும் நீயோ)

இப்படிக் காதலில் துடித்த அவர்கள் சிருங்காரத்தில் துடித்த பாடல் ஒன்றும் இதே திரைப்படத்தில் இருக்கின்றது.

தொடரும்...

 

| |
oooOooo
அபுல் கலாம் ஆசாத் அவர்களின் இதர படைப்புகள்.   பாடல்களால் ஒரு பாலம் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |