ஜூலை 29 2004
தராசு
வேர்கள்
மேட்ச் பிக்சிங்
காந்தீய விழுமியங்கள்
வானவில்
பருந்துப் பார்வை
கட்டுரை
பெண்ணோவியம்
முத்தொள்ளாயிரம்
சிறுகதை
க. கண்டுக்கொண்டேன்
கட்டுரை
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
 • கங்கை இல்லாத காசி
 • - பாஸ்டன் பாலாஜி
 • வார்த்தையல்ல, வாக்கியம்
 • - என். சொக்கன்
 • என்னை எழுதியவர்கள்
 • - சத்யராஜ்குமார்
 • சுய சாசனம்
 • - பாஸ்டன் பாலாஜி
 • கோடிட்ட இடங்கள்
 • - சித்ரன்
 • களம்
 • - நாகூர் ரூமி
  யுனிகோடில் தேடல்
  சென்ற இதழ்கள்
  வேர்கள் : ஓடிப் போனானா ? - 2
  - ஹரிகிருஷ்ணன்
  | Printable version |

  பாரதி பாண்டிச்சேரிக்குப் போனதன் தொடர்பாக அவன் மீது வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டைப் போன முறை கண்டோம்.  முரப்பாக்கம் சீனிவாசன் என்ற இளைஞரை போலீசில் அகப்படுமாறு விட்டுவிட்டு, தான் தப்பித்துக்கொண்டார் என்பது குற்றச்சாட்டு.  இந்தக் குற்றச்சாட்டை எடுத்து வைத்தவர் பாரதியைத் தன் நெஞ்சில் மிக உயர்ந்த இடத்தில் வைத்திருக்கும் அன்பர் என்பதையும் பார்த்தோம்.  பாரதி வரலாறு எவ்வளவு தவறான முறையில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்த நிகழ்வு அமைந்திருக்கிறது என்றும் சொன்னோம்.  பாரதி பாண்டிச்சேரிக்குப் போன கதைக்குத் தொடர்பான சம்பவங்களையும், ஆவணங்களையும் எடுத்து வைத்துக் கொண்டு, இந்தக் குற்றச்சாட்டு எப்படி உருப்பெற்றது, என்ன காரணத்தால் இப்படி ஒரு வடிவம் எடுத்தது, இந்தக் குற்றச்சாட்டில் எவ்வளவு தூரம் உண்மை இருக்கிறது என்று  இதன்  ஒவ்வொரு அம்சமாகப் பார்த்தபடி வருவோம்.  அதற்கு முன்னர், இந்தக் கதையில் சம்பந்தப்பட்டிருக்கும் கதை மாந்தர்களையும், களனையும் முதலில் அறிமுகம் செய்துகொள்வோம். 

  பாரதியின் பத்திரிகை உலகப் பணிகள் 'சுதேசமித்திரனில்' தொடங்கின என்பது நாம் அறிந்த ஒன்றுதான்.  பாரதி 1904ஆம் வருடம் நவம்பர் மாதம் சுதேசமித்திரனில் பணிக்குச் சேர்ந்தான்.  அதாவது, பாரதி தன் நிறைமாதக் கர்ப்பிணியான மனைவியுடன் சென்னைக்கு வந்து முழு நேர எழுத்துப் பணிக்குத் தன்னை ஆட்படுத்திக் கொள்ளும் போது வெறும் இருபத்திரண்டு வயதுப் பையன்.  அந்த வயதுக்கு அவன் வகித்த பதவிக்கு அவனை இளைஞன் என்று சொல்வது கொஞ்சம் அதிகப்படி.  உதவி ஆசிரியர் பணி.  பெரும்பாலும் செய்தி மொழிபெயர்த்தல், பிழை திருத்துதல் போன்ற பணிகள்தாம் அவன் செய்தது.  அவ்வளவுதான் எதிர்பார்க்க முடியும்.  பத்திரிகை உலகத்துக்கு அப்போதுதான் வந்திருக்கும் இளைஞனிடம் தலையங்கம் எழுதும் பொறுப்பைத் தூக்கி யாரும் ஒப்படைக்க மாட்டார்கள். 

  இதைச் இங்கே சொல்வதற்குக் காரணம் உண்டு.  அது இன்னொரு பாரதீய-மூடநம்பிக்கை.  பாரதியைப் பற்றி நிலவும் தவறான கருத்துகளில் இன்னொன்று.  தன்னைத் தலையங்கம் எழுத விடாத காரணத்தால்தான் பாரதி சுதேசமித்திரனிலிருந்து விலகி, இந்தியா பத்திரிகையில் சேர்ந்தார் என்று கவிஞர் வைரமுத்து 'கவிராஜன் கதை'யில் எழுதியிருக்கிறார்.  அப்படியும் ஒரு கருத்து நிலவுகிறது என்பதும் உண்மைதான்.  அது கவிஞர் வைரமுத்து அவர்களின் சொந்தக் கருத்தோ, ஆய்வோ அன்று; அப்படி அவர் எழுதியதற்குக் காரணம் உண்டு.  பாரதி வரலாறு எழுதிய சிலர் அப்படி ஒரு கருத்தை, பொத்தாம் பொதுவான அபிப்பிராயமாக, அடிப்படை, ஆதாரம் என்று எதையும் பார்க்காமல் எழுதி வைத்திருக்கிறார்கள்.  சிலர் என்ன சிலர்?  பாரதியின் பாஸ்வெல் என்று போற்றப்படும் வ. ரா. இந்த விஷயத்தில் என்ன சொல்கிறார் கேட்போம். 

  "தமிழுக்குப் புதிய உயிர் கொடுத்து அதைப் புது மொழியாக்கிய பாரதியார், 'சுதேசமித்திரன்' ஆபீசில் மொழிபெயர்ப்பு வேலை செய்தது நமக்கு ஆச்சரியமா யிருக்கலாம்.

  "அய்யர், பாரதியாரைத் தலையங்கம் எழுதும்படி விட்டதில்லையாம்.  அரசியலில் பாரதியார் 'அதி தீவிரவாதி' என்ற சாக்கே தலையங்கம் எழுதாதபடி அவர் தடுக்கப்பட்டதற்குக் காரணமாயினும், வேறு விஷயங்களைப் பற்றிக் கூட, பாரதியார் சொந்தமாகக் கட்டுரைகள் எழுதும்படியாக விடப்பட்டதில்லையாம்."  (மகா கவி பாரதியார் - வ. ரா. எழுதிய பாரதி வரலாறு, பகுதி 6)

  அப்படி இருந்திருந்தால் அது புரிந்துகொள்ளக் கூடிய ஒரு நிலைதான்.  ஜீ. சுப்பிரமணிய ஐயரைப் பொருத்த வரை, பாரதி சின்னப் பையன்தான்.  அதில் என்ன ஐயம் இருக்க முடியும்?  பணியில் சேர்ந்து ஓராண்டு கூட ஆகாத நிலையில் இப்படி ஒரு பொறுப்பை எந்தப் பத்திரிகையாகிலும் - இன்று கூட - இப்படி ஒரு இளைஞனிடம் ஒப்படைக்க முன்வருமோ?  அது ஒரு பக்கம் இருக்கட்டும்.  மேற்கண்ட பகுதியைப் படிக்கும்போது, பாரதிக்கு அப்படி ஓர் ஆதங்கம் இருந்திருக்குமோ என்ற ஐயம் தோன்றும்படியாகத்தான் வ. ரா. எழுதியிருக்கிறார் என்பதை மறுக்க முடியாது.  இப்படி எழுதியவர், ஆறு பக்கங்கள் தள்ளி, பகுதி ஏழில் சொல்கிறார்:

  ".... எனவே, இரண்டு பேரும் மனம் ஒப்பிய பிறகே பாரதியார், சுதேசமித்திரன் பத்திரிகையை விட்டு விலகிக் கொண்டார்.  பாரதியாரிடம் சுப்பிரமணிய அய்யருக்கு இருந்த பிரேமை, அய்யர் சாகும் வரையில் இருந்தது.

  பாரதியார் மனக்கசப்பால் 'சுதேசமித்திரனை விட்டார் என்ற வதந்திக்கும் ஆதாரம் இல்லை.  ஜீ. சுப்பிரமணிய ஐயர் கோகலேயைப் போல மிதவாதி அல்லர்; காந்தியைப் போலப் புரட்சிக்காரருமல்லர்.  எனவே, அரசியலில் அதி தீவிர புரட்சி மனப்பான்மை கொண்ட பாரதியார், அய்யரின் காரியாலயத்தினின்றும் வெளியேறியது ரொம்பப் பொருத்தமுள்ளதாகும்."  (வ. ரா.வின் மேற்படி நூல், பகுதி 7)

  இந்தக் கருத்துகளை அப்படியே பிரதிபலிக்கிறார் வை. சச்சிதானந்தன் அவர்கள், 'பாரதியாரின் வாழ்க்கையும் நூல்களும்,' என்ற தன்னுடைய நூலில்.  வ. ரா.வின் மேற்படி மேற்கோள்களில் முதலாவதைத் தன் நூலின் மூன்றாம் பகுதியில் தருகிறார் சச்சிதானந்தன்.  'மனக்கசப்பு இருந்திருக்கவில்லை,' என்ற கருத்தை எட்டுப் பக்கங்கள் தள்ளி எடுத்து வைக்கிறார்.  இவற்றில் எந்தப் பதிவை எடுத்துக் கொள்வது?   எளிமையான, பொருத்தமான, தர்க்க ரீதியான சிந்தனைக்குச் சரிப்பட்டு வரும் முடிவைத்தானே கொள்ள முடியும்! 

  இப்படிப்பட் கருத்து முரண்களால் ஏற்பட்ட வினை கவிஞர் வைரமுத்து எழுதிய பாரதி வரலாறு வரை பாய்ந்திருக்கிறது என்றுதான் கொள்ள வேண்டியிருக்கிறது. 

  நம்முடைய தர்க்க ரீதியான முடிவுக்கு இப்போது வருவோம்.  'பாரதியை ஜீ. சுப்பிரமணிய ஐயர் தலையங்கம் எழுதவிட்டதில்லை,' என்ற இந்தக் கருத்தைக் கொஞ்சம் நெருங்கி ஆய்ந்து பார்த்தால், இது பொடிப்பொடியாக உதிர்ந்து போகும்.  இந்தியா பத்திரிகை தொடங்கப்பட்டது 1906ஆம் ஆண்டு மே மாதம் என்பதைப் பார்க்கும் போது, பாரதி சுதேசமித்திரனில் பணியாற்றிய முதல் கட்டத்தின் நீளமே ஒன்றரை வருடங்களுக்குள்தான் என்பது தெளிவாகிறது.  சுதேசமித்திரனின் உரிமையாளரும், ஆசிரியருமான ஜீ. சுப்பிரமணிய ஐயரோ, ஹிந்து பத்திரிகையைத் தொடங்கி நடத்திய அனுபவசாலி.  1878ஆம் வருடம் அவர் ஹிந்து பத்திரிகையைத் தொடங்கியபோது, பாரதி பிறந்திருக்கவே இல்லை.  ஆங்கிலத்திலும், தமிழிலும் எழுதித் தேர்ந்திருந்த அவருடைய பட்டறையில் அப்போதுதான் புகுந்திருந்த பாரதி (நமக்கெல்லாம் மகா கவிதான்; அவன் பணிக்குச் சேர்ந்த காலத்தில் இன்னொரு பையன். அவ்வளவுதானே!) அவரிடம் பயிற்சி பெற்றான்.  சுதேசமித்திரன் அவனைக் கூர் தீட்டியது.  எனவே, வேலைக்குச் சேர்ந்து ஒன்றரை வருட காலத்திற்குள், தலையங்கம் எழுதும் பொறுப்பைத் தன்னிடம் ஒப்படைக்கவில்லை என்று வயதிலும், அனுபவத்திலும் மிக மூத்தவரான ஜீ. சுப்பிரமணிய ஐயரிடம் 'கோபித்துக் கொண்டு' பாரதி சுதேசமித்திரனிலிருந்து விலகினான் என்பது கொஞ்சமும் பொருத்தமில்லாத கருத்து. 

  ஆனால், அந்தக் குறுகிய காலத்துக்குள்ளேயே பாரதியின் ஆற்றல் மீது சுற்று வட்டாரத்தில் மிகப் பெரிய அளவில் நம்பிக்கை உண்டாகியிருந்தது.  அப்படி இல்லாவிட்டால், ஆகஸ்ட் 1905ல் தொடங்கப்பட்ட பெண்கள் பத்திரிகையான 'சக்ரவர்த்தினி' பத்திரிகைக்கு ஆசிரியராக அவன் நியமிக்கப்பட்டிருக்க முடியாது.  அதாவது, பத்திரிகையாளனாகத் தன் வாழ்க்கையைத் தொடங்கி, துணை ஆசிரியராக ஓராண்டுக்கும் குறைந்த அனுபவமே பெற்றிருந்த இருபத்து மூன்று வயது இளைஞனுக்கு இது ஐயத்திற்கிடமில்லாமல் பெரிய பொறுப்பு.
   
  இந்தப் பத்திரிகை சுதேசமித்திரன் பத்திரிகையின் ஓர் அங்கம் என்பது போன்ற தோற்றமே ரா. அ. பத்மநாபன் போன்றோருடைய பதிவுகளில் காணப்படுகிறது.  "புதிய பத்திரிகையில், அழகாக, அவருடைய பெயர், 'ஆசிரியர்: சி. சுப்பிரமணிய பாரதி,' என்றும் அவர்கள் வெளியிட்டது அவரிடம் 'மித்திரன்' அதிபரும், ஆசிரியருமான ஜீ. சுப்பிரமணிய ஐயர் வைத்திருந்த நம்பிக்கையின் சான்றாகும்,' என்று ரா. அ. ப. அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.  (சித்திர பாரதி, பக்கம் 24)

  ஆனால் சக்ரவர்த்தினி பத்திரிகையின் உரிமையாளர் வேறொருவர் என்று சீனி. விசுவநாதன் சொல்கிறார்.  "1905ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முதற்கொண்டு 'சக்ரவர்த்தினி' உலா வரத் தொடங்கியது.  பத்திரிகையின் அதிபர் - உரிமையாளர் - திரு. பி. வைத்தியநாத ஐயர் என்பவராவார்,' என்று சீனி விசுவநாதனின் 'கால வரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகள்' சொல்கிறது.  (தொகுதி 1, பக்கம் 38)

  அதாவது, இரு வேறு உரிமையாளர்கள் நடத்திய இரண்டு வேறு பத்திரிகைகளில், இரண்டு விதமான பதவிகளை ஒரே நேரத்தில் வகித்திருக்கிறான் பாரதி என்பதுதான் இங்கே காணப்பட வேண்டிய செய்தி.  சுதேசமித்திரனின் துணை ஆசிரியர்; சக்ரவர்த்தினியின் ஆசிரியர்.  இரண்டு பதவிகளையும் வகித்தது ஒரே காலத்தில்.  எத்தனை வயதில்?  இருபத்து மூன்றில்.  இப்படி, தன்னிடம் பணியாற்றிக்கொண்டே, இன்னொரு பத்திரிகையிலும் பணியாற்ற ஜீ. சுப்பிரமணிய ஐயர் இவனை அனுமதித்திருக்கிறார்.  சொல்லப் போனால், அவரே கூட இந்த ஏற்பாட்டைச் செய்திருக்கக் கூடும்.  அவர் பாரதியிடம் பாராட்டிய அபிமானம் அப்படி.   பாரதியே இந்த அபிமானங்களை வ. ரா. போன்றோரிடம் நிகழ்த்திய உரையாடல்களின் போது தெரிவித்திருக்கிறான்.  எனவே, 'இந்தியா,' பத்திரிகையில் அவன் சேர்ந்தது, ஜீ. சுப்பிரமணிய ஐயரிடம் கொண்ட கருத்து வேற்றுமையால் என்பது அடிபட்டுப் போகிறது.  வேறெந்த இடத்தில் இப்படி ஒரு சுதந்திரத்தை எதிர்பார்க்க முடியும்? 

  இந்தியா பத்திரிகை யாரால், எப்போது, எப்படி ஆரம்பிக்கப்பட்டது என்ற விவரத்துக்கு வருவோம்.

  (தொடர்வேன் ...)

  PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
  உங்கள் கருத்து  
  (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
  Copyright © 2004 Tamiloviam - Authors
  Best viewed with IE 4.x and above, Netscape 7.x , Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
  | Privacy |