இப்போதெல்லாம் நிறைய பாடகர்கள் தமிழுக்கு புதிது புதிதாக அறிமுகம் ஆகிக்கொண்டு இருக்கின்றார்கள். மிகவும் நல்ல விஷயம். ஒவ்வொருத்தருக்கும் தனித்தனி பாணி என்று இன்னும் அவர்கள் வகுத்துக் காட்டாவிட்டாலும், அவர்களது வரவு ஒரு பெரிய மாறுதலை தமிழ்த் திரையுலகில் கொண்டு வந்து இருக்கின்றது என்பது மறுக்க முடியாத உண்மை. நிறைய பாடல்கள், நிறைய பாடகர்கள் என்று தமிழ்த் திரையிசை முன்னோக்கிப் போய்க்கொண்டு இருக்கின்றது. புதுப்புது இசை வடிவங்கள், யுக்திகள் எல்லாம் வந்து செழுமை அடைந்து கொண்டு இருக்கின்றது.
இருந்தும் ஒன்றே ஒன்று மட்டும் என் மனதை உறுத்திக்கொண்டு இருக்கின்றது. அது தமிழை உச்சரிக்கும் விதம். இப்போது வரும் பாடல்களில் முக்கால்வாசிப் பாடல்களில் தமிழைத் தவறாக உச்சரிக்கின்றனர். இது எல்லாருக்கும் தெரிந்தும் கூட பாடலை, முக்கியமாக, ரஹ்மான் பாடலை ரசிக்கின்றோம். சீர்காழியின் தமிழைக் கேட்டும், சூலமங்கலத்தின் உச்சரிப்பை கேட்டும், TMS இன் பாடலைக் கேட்டும், SPB யின் குரலினிமை கேட்டும் வளார்ந்த தலைமுறையினர் முணுமுணுக்கின்றனர். ஆனால், கல்லூரி செல்லும், குறிப்பாக சென்னை வாழ் மாணவர்களுக்கு, இந்தப்பாடல்கள் எல்லாம் பிடித்து இருக்கின்றன. இப்போது கணிணியின் படையெடுப்பால், சிறுநகர்ப்புறங்களான திருநெல்வேலி போன்ற இடங்களில் கூட மாணவர்கள் இவ்வகைப்பாடல்களைக் கேட்டு மகிழும் நிலை உருவாகி இருக்கின்றது. பாடல்களில் உள்ள தாளலயம் இளரத்தத்தில் சூட்டைக்கிளப்பி உத்வேகப்படுத்துகின்றது என்று தோன்றுகின்றது.
தவறாக இருக்கின்றது என்று தெரிந்தும் எப்படி மக்கள் அதனை விரும்புகின்றனர் என்று சற்று சிந்தித்துப் பார்த்தேன். அடிப்படையில் ஒரு (மிகவும் பொதுப்படையானது அல்ல) விஷயம் புரிய வந்தது. 95% நான் பார்த்த மக்களில், தமிழராயிருந்தும் தமிழ் எழுதப்படிக்க தெரியாத, அல்லது எழுத்துக்கூட்டி மட்டும் படிக்கத் தெரிந்தவர்கள் இது போன்ற பாடல்களை மிகவும் விரும்புகின்றனர். அமெரிக்காவில் பிறந்து வளாரும் இப்போதைய தலைமுறை மக்கள் இதில் நன்கு பொருந்துகின்றனர். சற்று யோசித்துப் பார்த்தால் எனக்கு இதனை தன்னிலை அறிமை (Identity recognition) யோடு பொருத்திப்பார்க்க தோன்றுகிறது.
சென்னை நகர்ப்புறங்களில் ஆங்கிலப் பயிற்று மொழிக் கல்விக்கூடங்களில், தமிழை தவிர்த்து வடமொழியின் ஒரு எளிதான வடிவத்தினை மதிப்பெண்களுக்காக கற்கக் கூடிய வழி இருக்கின்றது. சிலர் தமிழுக்கு பதில் இந்தியினைத் தேர்வு செய்து பாடமாகப் படிக்கின்றனர். (இந்த ஒரு மடத்தனம் மட்டும் எனக்குப் புரியவே இல்லை. தமிழ்நாட்டில் இருந்து கொண்டே இந்தியை இவர்கள் தமிழை விட எளிதாக எப்படி கற்க முடியும் ? நீங்கள் ஆங்கிலத்திற்கும் இந்த உதாரணத்தைக் கூறலாம். இந்தியை இரண்டாம் மொழியாகத் தான் கற்கின்றார்களேயன்றி பயிற்று மொழியாக அல்ல) இவ்வாறு படிக்கின்ற அத்தனை பேரின் தமிழறிவும் மோசமாகத் தான் இருக்கின்றது. பேரூந்தில் வருகின்ற பலகையைக்கூட படிக்கத் திராணியற்ற நிலை இருக்கின்றது. முக்கால்வாசி பேர் பேரூந்து எண்ணை மட்டுமே நம்பி ஏறுகின்றனர். இப்படிப்பட்ட தமிழறிஞர்களிடம் நான் இரண்டாந்தர தமிழ் உச்சரிப்பையே கேட்டு இருக்கின்றேன். இந்த மக்களுக்கு, பாடல் வரிகளில் சிதைக்கப்படுகின்ற தமிழ், அவர்கள் பேசுகின்ற தமிழைப்போலவே இருப்பதால் ஒரு சந்தோஷம் - நிலை சேர்மை (Identity matching) - என்று தோன்றுகின்றது. கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள் - தமிழ் நன்றாய்த் தெரிந்ததால் தானே சீர்காழியின் தமிழைப் பற்றி உயர்வாகப் பேசுகிறார்கள் தமிழ் அறிந்தவர்கள் ? அது போல இப்போது வருகின்ற பாடல்களில் சிதைந்த தமிழைக் கண்டு, தாமும் அங்ஙனமே பேசக் கண்டு சந்தோஷப் படுகின்றார்கள் என்று தோன்றுகின்றது.
"ஹேய்..எவ்லோ superaa sing பன்ரான் ?இல்ல?..செமயா இர்க்குய்யா"
இந்த மாதிரி அழகிய தமிழை நீங்கள் கல்லுரி வாசல்களில் கேட்கலாம். ஒரு காலத்தில் சேட்டுக்கள் பேசும் தமிழை கிண்டலடித்து படங்களில் பேசியவர்கள் எல்லாம் இப்போது அதற்கு வழியே இல்லாமல் நனவிலேயே அப்படிப் பேசுகின்றார்கள். என்னடா இவன் மற்றவன் தமிழைப் பார்த்து அங்கலாய்க்கின்றானே, இவன் என்ன படித்து இருக்கின்றான் என்று தோன்றலாம் உங்களுக்கு. நானும் CBSE இல் 12 வரை படித்தவன் தான். பத்தாம் வகுப்பிலேயே இரண்டாம் மொழியான தமிழ் பயிற்றுவித்தல் முடிவடைந்தது. நான் தனியாக இந்தியும் கற்றவன். இரண்டும் மிக அழகான மொழிகள். இந்தியினைப் பயில வேண்டிய 8 பரீட்சைகளுள் கடைசித் தேர்வுகளான விஷாரத் மற்றும் ப்ரவீண் இரண்டிலும், இரண்டாம் மொழித் தாள் என்று ஒன்று உண்டு. அதற்கு தமிழ் எடுத்துப் படித்தவன் நான். அதற்கு வைத்த பாடப் புத்தகங்கள் என்ன தெரியுமா ? கம்பராமாயணத்தின் வாலி வதைப்படலம் மற்றும் நாலாயிர திவ்ய பிரபந்தம் போன்ற கடினமான இலக்கியங்கள் ! நான் எட்டாங்கிளாசில் இந்தப் பரீட்சைக்குத் தயார் செய்யும்போது மூச்சுப் முட்டி போனேன். 45 மதிப்பெண்கள் எடுத்து கடைசித் தமிழ்த்தேர்வில் தேறினேன் என்பதை சொல்லவும் வேண்டுமா ! ஆனால், அன்று நான் படித்த தமிழ் தான் இன்று வரை எனக்கு துணையாக நின்று வருகின்றது. ஒரு மொழியை நன்றாகக் கற்றோம் என்கிற திருப்தி இருக்கின்றது. இந்தி கற்க வேண்டிய ஆசையில் நல்ல தமிழும் கற்றுக்கொண்டேன்.
ஒரு மொழியின் பயன் பிறருக்கு விளங்க வேண்டும், அவ்வளவுதான் என்று சிலர் வாதிடலாம். ஒத்துக்கொள்கிறேன். ஆனால், Hamilton's Bridge, அம்பட்டன் பாலம் ஆனது போல், சிதையுமானால் அது நல்லதல்ல. இப்போது அந்தப் பாலத்தை கட்டியவன் அம்பட்டன் என்று ஆகிவிட்டது. யார் அறியப் போகிறார்கள் Hamilton என்று ? அப்படியென்றால் என்ன செய்வது ?
என்னுடைய கோரிக்கை இதுதான். நிச்சயமாக கல்லுரித்தமிழில் பாடல் புனையுங்கள். அதனை ரசித்துக்கேட்க மக்கள் இருக்கின்றனர். "முஸ்தஃபா முஸ்தஃபா" போன்ற பாடல்கள் நிச்சயம் ரசிக்க கூடியவை. அதிலே ஆங்கிலக் கலப்பு நிறைய இருக்கின்றது, பரவாயில்லை. "முற்றுப்புல்லியே" என்று சொல்லிவிட்டுப் போங்கள். பரவாயில்லை. ஆனால் , நல்ல தமிழுக்கு மதிப்பு கொடுத்து எழுதப் படுகின்ற பாடல்களிலாவது தமிழினை ஒழுங்காக உச்சரிக்கச் செய்யுங்கள். அதிலும் தமிழை கோட்டை விட்டால் பின்னர் அது கிடைக்கவே கிடைக்காது. உதாரணத்திற்கு "அந்தி மந்தாரை" என்ற படத்திலிருந்து ஒரு அற்புதமான பாடல் :
சகியே..நீ தான் துணையே விழிமேல் அமர்ந்த இமையே ஆதவன் போனால் அகல் தான் ஒளியே
மிக ரம்மியமான பாடல். ஆனால் அத்தனை அழகுமிக்க குரல்வளம் கொண்ட உன்னிக்ருஷ்ணன், "அகல் தான் ஒலியே" என்று தவறாகப் பாடும்போது எரிச்சல் வரத்தான் செய்கின்றது. உன்னிக்ருஷ்ணன் போன்ற கர்னாடக இசைப்பாடகர்களே தமிழைத் தவறாக உச்சரித்தால், மற்றவர்களை என்ன சொல்வது ? ஆரம்ப காலங்களில் யேசுதாஸின் தமிழ் உச்சரிப்பில் சில தவறுகள் இருந்ததற்கே அவரை நார் நாராக கிழித்தனர் விமர்சகர்கள். இப்போது சாதனா சர்கம் "கொஞ்சும் மைனாக்கல்லே..என் வீட்டில் இன்று தீபாவலிப் பண்டிகை" என்று பாடினாலும் கேட்டு ரசிக்கின்ற நிலமைக்கு போய்க்கொண்டுகிருக்கின்றோம். நல்ல தமிழ் இருக்கவேண்டிய பாடல்களில் நல்ல தமிழ் உச்சரிப்பைக் கொண்டு வாருங்கள். இல்லாவிடில் ஏற்கனவே தேய்மானத்தில் இருக்கின்ற திரைத்தமிழ், இல்லாமலேயே போய் விடும்.
அதுபோல தமிழே சிறிது நாளைக்கு நிலைத்து நிற்க வேண்டும் என்றால் அதனை அம்மதிப்பெண்களுக்காக வெறுத்து ஒதுக்காதீர்கள். தனியாகவோ அல்லது பாடமாகவோ பயிலுங்கள். தமிழோ அல்லது எந்த ஒரு தாய்மொழியும் அமிழ்து போன்ற நெல்லிக்கனி மாதிரி தான். முதலில் உண்ணக் கஷ்டம் ஆனால் பின்னர் அமுதம். இந்தி தேசிய மொழி - நிச்சயம் கற்க வேண்டும். ஆங்கிலம் உலக அறிவியல் மொழி - நிச்சயம் பயில வேண்டும். தமிழ் தாய் மொழி. தாயை மறந்தா தேசமும் அறிவியலும் ? தாய் வாழ வேண்டாமா ? உங்களுக்கே தமிழ் தகிடுதத்தம் என்றால், உங்கள் குழந்தைகளுக்கு ? அதுவும் தமிழ்நாட்டை விட்டுத் தொலைவில் சென்று விடுவீர்கள் என்றால் ? சிந்தியுங்கள்.
|