|
பாடல் 29
உறையூரைச் சேர்ந்த சோழன் கிள்ளியின் போர் யானை, அபூர்வமான ஒன்று.
அதிகாலையில் உறையூரிலிருந்து கிளம்பிய அந்த யானை, முதலில் காஞ்சி நகருக்குச் சென்றது, அதை ஒரு காலால் மிதித்தது. (அதாவது, அந்த நாடு சோழனுக்கு உரிமையானது !)
அடுத்ததாக, நீர் அலைகள் தத்திக் குதிக்கும், குளிர்ச்சியான உஜ்ஜயினி நகருக்குச் சென்று, அதை இன்னொரு காலால் மிதித்தது.
அதன்பின்னர், கடலைக் கடந்து, இலங்கை - ஈழத்தையும் ஒரு காலால் மிதித்தது.
இப்படியாக, எல்லா நாடுகளையும் தன் காலால் மிதித்து, வெற்றி கண்டபின், உறையூர் நகருக்குத் திரும்பியது அந்த யானை !
அந்தக் காலத்தில் அரசர்கள் வெவ்வேறு நாடுகளுக்குப் பயணம் செய்து, அந்நாட்டு மன்னர்களுடன் போரிட்டு, வென்று, தங்களின் ராஜாங்கத்தை விரிவுபடுத்திக்கொள்வார்கள் - சோழன் கிள்ளி, காஞ்சி, உஜ்ஜயினி, இலங்கை ஆகிய பகுதிகளை வென்றவன். அந்தச் செய்தியை, இந்தப் பாடல் சோழனின் யானையைக் குறிப்பிட்டு உணர்த்துகிறது !
கச்சி ஒருகால் மிதியா, ஒருகாலால் தத்துநீர்த் தண்உஞ்சை தான்மிதியாப் பிற்றையும் ஈழம் ஒருகால் மிதியா வருமே,நம் கோழியர்கோக் கிள்ளி களிறு.
(கச்சி - காஞ்சி நகரம், மிதியா - மிதிக்கும் தத்து - தத்திக் குதிக்கும் தண் - குளிர்ச்சியான உஞ்சை - உஜ்ஜயினி நகரம் பிற்றை - பின்னர் கோழியர் - உறையூரைச் சேர்ந்தவர்கள் கோ - அரசன் களிறு - ஆண் யானை)
பாடல் 30
'வீரப் போர்' என்று நாம் வெகு சாதாரணமாய்ச் சொல்லிவிடுகிறோம், ஆனால் அதில் பல உயிர்கள் பலியாவதும், மேலும் பலருக்கு ஊனங்கள் ஏற்படுவதும், வீரத்தின் இன்னொரு பக்கத்தை எடுத்துக்காட்டுவதாய் அமைகிறது.
ஆனால், அந்தக் காலத்தில், ஒரு அரசனின் புகழைச் சொல்லும்போது, அவன் செய்த போர்களின் பிரம்மாண்டத்தையும், அதில் மரணமடைந்த (எதிரி நாட்டு) வீரர்களின் எண்ணிக்கையையும் தவறாமல் சொல்வார்கள் !
வெறுமனே எண்ணிக்கையைச் சொல்லிவிட்டால் போதுமா ? அந்தப் போர்க் களத்தின் கொடூரங்களை, ஒவ்வொரு காட்சியாய், கேட்பவருக்கு அச்சம் தரும்வகையில் வர்ணித்து விவரித்தால்தான், அந்தப் புகழ்ச்சி முழுமையடைவதாக அர்த்தம் - அதைக் கேட்பவர்கள் எல்லோரும், 'ஐயோ ! இந்த அரசனிடம் ஏதும் வம்பு வைத்துக்கொள்ளக்கூடாது, இவனைப் பகைத்துக்கொண்டால், நாளைக்கு நம்முடைய நிலைமையும் இப்படிதான் ஆகிவிடும் !', என்று பயந்து நடுங்கவேண்டுமென, புலவர்களோ, அல்லது அந்த அரசர்களோ விரும்பியிருக்கிறார்கள் !
'பரணி' வகைப் பாடல்கள், முற்றிலும் இந்த வகையில் அமைந்தவையே - பிரபலமான உதாரணம் : கலிங்கத்துப் பரணி !
இந்த முத்தொள்ளாயிரப் பாடல், சோழனின் போர்க்களம் ஒன்றை நடுக்கமூட்டும்முறையில் விவரிக்கிறது !
நள்ளிரவு நேரம் - 'செம்பியர்' வம்சத்தில் வந்த சோழன் போரிட்ட களத்தில், இப்போது பேய்கள்தான் நிறைந்திருக்கின்றன. பொழுதுபோகாமல், விளக்கு கொளுத்தி விளையாடிக்கொண்டிருக்கின்றன அந்தப் பேய்கள் !
போர்க் களத்தில் ஏது விளக்கு ?
அந்தக் களத்தின் தரையெங்கும், சோழனால் கொல்லப்பட்ட பகை நாட்டு மன்னர்களின் தலை சிதறி, வெறும் மண்டையோடுகள்தான் இறைந்து கிடக்கின்றன - அந்த வெண்ணிற ஓடுகளில், அவர்களின் சிதைந்த மூளையை எண்ணையாய் நிரப்பி, அவர்களுடைய குடலையே திரியாய் அமைத்து, விளக்கு எரிக்கின்றன அந்தப் பேய்கள் !
சோழன் போரிடும் களங்கள் மாறலாம், எதிரிகள் மாறலாம், ஆயுதங்கள் மாறலாம், போர் நுணுக்கங்கள் மாறலாம், இப்படி எதுவேண்டுமானாலும் மாறச் சாத்தியமுண்டு - ஆனால், ஒரே ஒரு விஷயம்மட்டும் மாறுவதே இல்லை - சோழனின் போர்க் களங்கள் அனைத்திலும், இரவானால் இந்தக் காட்சிதான் - கும்மிருட்டில், மண்டையோட்டில் மாமிசத்தை நிரப்பி, விளக்கு எரிக்கும் பேய்கள் !
முடித்தலை வெள்ளோட்டு மூளைநெய் ஆகத் தடித்த குடர்திரியா மாட்டி எடுத்தெடுத்துப் பேஎய் விளக்குஅயரும் பெற்றித்தே; செம்பியன் சேஎய் பொருத களம்.
(வெள்ளோடு - வெள்ளை நிற (மண்டை) ஓடு, குடர் - குடல் திரியா மாட்டி - திரியாகச் செய்து / கொளுத்தி பேஎய் - பேய் அயரும் - செய்யும் / (விளக்கு) ஏற்றும் பெற்றித்தே - அப்படிப்பட்டது செம்பியன் - சோழ பரம்பரையைக் குறிக்கும் சொல் சேஎய் - சேய் பொருத - சண்டையிட்ட)
|