ஜூலை 29 2004
தராசு
வேர்கள்
மேட்ச் பிக்சிங்
காந்தீய விழுமியங்கள்
வானவில்
பருந்துப் பார்வை
கட்டுரை
பெண்ணோவியம்
முத்தொள்ளாயிரம்
சிறுகதை
க. கண்டுக்கொண்டேன்
கட்டுரை
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
 • கங்கை இல்லாத காசி
 • - பாஸ்டன் பாலாஜி
 • வார்த்தையல்ல, வாக்கியம்
 • - என். சொக்கன்
 • என்னை எழுதியவர்கள்
 • - சத்யராஜ்குமார்
 • சுய சாசனம்
 • - பாஸ்டன் பாலாஜி
 • கோடிட்ட இடங்கள்
 • - சித்ரன்
 • களம்
 • - நாகூர் ரூமி
  யுனிகோடில் தேடல்
  சென்ற இதழ்கள்
  க. கண்டுக்கொண்டேன் : ரப்பர், பனை வளர்ப்பார்! உடன் வாத்து கோழியும் வளர்ப்பார்!
  - ரமா சங்கரன்
  | Printable version |

  கும்பகோணம், தஞ்சை மாவட்டங்களில் அறுவடைக் காலங்களின் போது பக்கத்து ஊர்களுக்கு சாலைவழி  சென்றால் வைக்கோல் சாலைகளில் பரப்பி வைக்கப்பட்டு காய்ந்து கொண்டிருக்கும்.  தமிழகம் முழுதும் இந்த காட்சியை பார்க்கலாம். நான் ஒரு  தடவை கும்பகோணத்திலிருந்து திருவாரூர்- நன்னிலம் செல்லும் சாலையில் சன்னாநல்லூர் என்னும் ஊருக்குச் செல்ல வேண்டியிருந்தது. காரின் டயர்களில் வைக்கோல் சிக்கிக் கொண்டு நான்கு மணி நேரங்கள் அங்கேயே இருக்கும்படி நேர்ந்தது. ஆனால் மலேசியாவில்  இந்த பிரச்னை இல்லை. வைக்கோலை விவசாயிகள் கைகளால் உதறி,  தட்ட வேண்டியதில்லை.  சாலைகளில் காய வைப்பதில்லை. வைக்கோலிலிருந்து அவர்களுக்கு உரமும் கிடைக்கிறது. கைகளால் தட்டி வேலை செய்தால் ஒரு ஹெக்டார் நிலத்திற்கு 30 மணி நேரங்களுக்கு மேல் ஆகும். கிட்டத்தட்ட 172 பேர் வேலை செய்ய வேண்டும். அதே அளவு வைக்கோலை  பேலர் மூலம் (baler) மூன்று மணிக்குள்ளாகவே எடுத்து விடுகிறார்கள். இதன் மூலம் ஆண்டுக்கு 600டன்னுக்கு மேல் உரம் கிடைக்கிறது.  

  விவசாயிகளுக்கு அறுவடை முடிந்தபின் இந்தியாவில் பிரச்னை கிளம்புகிறது. வருமானத்திற்கு பெரும்பாலும் வழி இல்லை.  நமது ஊர்களில்  அடுத்த சாகுபடி வரும்வரை நிலங்கள் காய்ந்து கிடப்பதை நம்மில் பலபேர்  கிராமப்புறங்களில் பார்த்திருப்போம். ஆனால் மலேசியாவில் நெற்பயிர்  விளைந்து அறுவடை ஆனபின் அதில் கோழிப் பண்ணைகள் அமைக்கப்படுகின்றன; வாத்துகள் வளர்க்கப்படுகின்றன. சோளம் போடப்பட்டு அதிலிருந்து மனிதர்களுக்கு மட்டுமின்றி மாடுகளுக்கும் உணவு தயார் செய்யப்படுகிறது. நிலங்களில் மட்டுமில்லை. எண்ணெய் பனை, ரப்பர் தோட்டங்களில் கூட அப்படித்தான். குறுகிய காலத்தில் வளர்ந்து பலன் தரும் பைன்ஆப்பிள், மிளகாய், கேழ்வரகு பயிரிடப்படுகின்றன. கரும்பும், வாழையும்  பனை தோட்டங்களில் சீசன்களில் இடம் பிடிக்கின்றன. இப்படி 'கலப்பு விவசாயம்' (mixed farming) பரவலாக மலேசியாவில் அறிமுகப்படுத்தப்பட்டு விவசாயிகளை ஏழ்மையில் இருந்து விடுவிக்கிறது.

  காய்கறி, பழங்கள், பூக்கள், இவைகளோடு பனைத்தோட்டங்களில் ஆடுமாடுகள், கோழி வளர்ப்பு உண்டு. விவசாயிகளின் ஆண்டு வருமானம் இதனால் கிட்டத்தட்ட இரு மடங்காகியிருப்பதை புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. கடந்த ஆண்டில் கலப்பு விவசாயத்தின் மூலம் மாத வருமானம் 580 மலேசிய ரிங்கிட்டிலிருந்து 1000 ஆக உயர்ந்துள்ளது. மலேசியாவில் விவசாயிகளின் செலவைக் குறைக்கவும், நாணயமாற்று  விகிடங்களால் ஏற்படும் சங்கடங்களைக் குறைக்கவும், விவசாயத்திற்காகத் தயாராகக் கிடைக்கும்  நிலத்தின் அளவு குறைவாக இருப்பதால் அதிக அளவு பயன் பெறவும் அரசாங்கம் மூன்றாம் தேசிய விவசாயக் கொள்கையை தற்போது கடைபிடித்து வருகிறது. 'காடுகள்  விவசாயம்' (agroforestry) முறையும் பிரபலமாகி வருகிறது. அதாவது காடுகளில் காணப்படும் மரங்களினூடே பிரம்பு, மூங்கில், மருந்து செடிகளைப் பயிரிட்டு பலன் காண ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு தற்போது வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

  எதிர்வரும் 2010 ஆம் ஆண்டிற்குள் விவசாயத்தை மலேசியாவில் பொருளியல் வளர்ச்சிக்கு பலம் சேர்க்கும்  புதிய என்ஜின் ஆக மாற்ற அப்துல்லா படாவியின் புதிய அரசு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. மலேசியா தன் விவசாயத்துறையில் கடந்த ஆண்டு 5% மேலாக வளர்ச்சி பெற்றுள்ளது. ஆனால் தொடர்ந்து பல புதுக் கொள்கைகளை வகுத்து விவசாயத்திலும்  ரப்பர், பனை தோட்டங்களிலும் உற்பத்திக்கு மட்டுமின்றி தொழிலாளிகளின் மேன்மைக்கும் அரசு பாடுபட்டு வருகிறது.  இந்தியாவில் கிராமப்புறங்களில் அதிகம் பேர் வேலை இல்லாமல் இருப்பது பிரச்னையை உண்டாக்குகிறது. ஆனால் மலேசியாவில் பிரச்னை நேர்மாறானது.  விவசாயத்தில் வேலை செய்ய ஆட்கள் கிடைப்பது கடினமாகி வருகிறது. அரசாங்கம் தலையிட்டு விவசாயிகளின் கூலியையும் அவர்கள் உற்பத்தித் திறனையும் முடிந்த அளவு சரிசமமாக நிலை நிறுத்த முயற்சிகள் எடுத்து வருகிறது. தற்போதைய அப்துல்லா அரசு  மீண்டும் மீண்டும் விவசாயத் தொழிலாளிகளுக்கு  வேலையில் பயிற்சி அளிப்பதை அரசாங்கம் வலியுறுத்தி வருகிறது. எதிர்வரும் பட்ஜெட்டில் இது கட்டாயமாக்கப்படும் வழிவகைகளை அரசு பரீசீலித்து வருகிறது. இந்தியாவில் விவசாயத் துறையில் தொழிலாளிகள் சம்பளம், பயிற்சி முறையை ஒழுங்குபடுத்துவதில் அரசு அவ்வளவு சிரத்தை காட்டவில்லை. அடிப்படை வசதிகளையும் உரிமைகளையும் வலுப்படுத்தவில்லை.  ஆனால் தொழில்நுட்பம், அறிவியல் ஆய்வுகளை விவசாயத்தில் மேம்படுத்த இந்தியா முயன்று வருகிறது. இந்தியாவில் 'ஏழ்மையை ஒழிக்கத் தொழில்நுட்பம்' என்னும் புதிய கொள்கையை முன்வைத்து இதன் மூலம் வெற்றி காண மைக்ரோசா·ப்ட், கேசியோ போன்ற உலக நிறுவனங்கள் முன்வந்துள்ளன.    இந்தியாவை முன்னுதாரணமாக  வைத்து தம் சாதனைகளை இதர நாடுகளில் மூலதனமாக்கவும் ஆர்வம் காட்டி வருகின்றன. ஆனால் விவசாயிகளின் ஏழ்மையைப் போக்க  ITC போன்ற உள்நாட்டு நிறுவனங்களே பணியாற்றி வருகின்றன.

  மலேசியா தன் பொருளியல் வளர்ச்சியில்  தொழில், வர்த்தகம், சர்வீஸ், கல்வி, பின் விவசாயம் என வரிசைப்படுத்தி அவற்றில் கணிணி தொழில்நுட்பம் வளம் பெறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. குறிப்பாக, விவசாயத்துறையில் இறக்குமதியாகும் உணவுப் பொருட்களின் அளவையும் மதிப்பையும் குறைக்க புதிய நூற்றாண்டில் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறது.    தனியார் அமைப்புகள் மலேசியாவின் உணவு உற்பத்தியில் பெருமளவில் முதலீடு செய்வதை அப்துல்லாவின் அரசு சவாலாக எடுத்துக் கொண்டு உழைத்து வருகிறது. குறிப்பாக உணவு உற்பத்தியில் பதிய  தொழில்நுட்பங்கள், மார்க்கெட்டிங் முறைகள், உயர்ந்த தரமான பேக்கிங், சுகாதாரம்  பற்றி கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று மலேசியா நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இவை அனைத்துமே இந்தியாவில் தனியார் நிறுவனங்களின் முதன்மைப் பொறுப்பாகி விட்டது.   தற்போது மலேசியாவில் ரப்பர் மற்றும் பனை எண்ணெய் உற்பத்தியில் மட்டும் தனியார் நிறுவனங்கள் தனிக்கவனம் செலுத்தி வருகின்றன. ஆனால் இப்போது மலேசிய தனியார் அமைப்புகள் கோழி, பன்றி, ஆடு, மாடு வளர்ப்பு, மூலிகைகள், பழங்கள் சாகுபடியிலும் பங்கேற்பதற்கு செப்டம்பர் மாதம் அறிவிக்கப்படவிருக்கும் புதிய பட்ஜெட் ஊக்கம் அளிக்கும்.  நான் கடந்த ஏப்ரல் கடைசி வாரத்தில் மலேசியா சென்றிருந்தபோதே பட்ஜெட் பற்றிய மூன்று நாள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போதே விவசாயத்துறை முன்னேற்றம் பற்றிய பல விவாதங்கள் நடைபெற்று கொண்டிருந்தன.

  மலேசியாவில் கிராமப்புறங்களை கவர்ச்சிகரமாக ஆக்க தனி அமைச்சே செயல்பட்டு வருகிறது. கிராம மக்கள் தங்கள் ஊர்களைப் பற்றி பெருமை கொள்வதும்  சொந்தம் கொண்டாடுவதும் அவசியம் என்பதை  அரசாங்கம் வலியுறுத்தி வருகிறது. இந்தியாவை விட மலேசியாவிற்கு வறுமை பல கோணங்களில் தீர்வு காண சிரமமான பல சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது.'இன்·ப்ரா' (Institute of Rural Advancement or Infra) எனப்படும்  அமைப்பின் மூலம் கிராமவாசிகள் தங்கள் ஊர்களிலேயே வேலைகளைத் தேட அரசாங்கம் உதவுகிறது. நவீன மலேசியாவிற்கு பொருந்தாத நகர்ப்புற வறுமையும் அங்கு உண்டு.   கோலாலம்பூர் போன்ற நகர்களில் கூட இன்றும் நகர்புறத்து வறுமையைக் காட்டும் தகரக்கூரை போட்ட வரிசை வீடுகளைக் கொண்ட 'கம்போங்' எனப்படும் குப்பங்களைக் காணலாம். கம்போங் மெடான், கம்போங் காந்தி என்னும் சுபாங்கில் அமைந்த குப்பங்களை நான் சில மாதங்களுக்கு முன் பார்த்து வந்தேன். இவர்களுக்காக குறைந்த செலவில் வீடமைப்பு பேட்டைகளையும் சொந்தத்தொழில் புரியும் வாய்ப்புகளையும் அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுக்க முன்வந்துள்ளது. சுயசார்பே வறுமையை ஒழிக்கும் என்பது மலேசிய அரசின் உறுதியான கொள்கை.  எனவே, மலேசிய அரசு இருவகையான ஏழ்மையையும் திறமையாக நிர்வகித்து வருகிறது.  இதனால்  அரசாங்கத்தைச் சார்ந்து விவசாயம் வலுப்பட்டுவிடும் என்ற நம்பிக்கையில் மக்கள் வறுமையை எதிர்த்து போராட முடிகிறது. ஆனால் இதே அளவு இந்தியாவில்  அரசாங்கம் நம் ஏழை விவசாயிகளுக்கு  வலுவூட்டுகிறதா ?

  PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
  உங்கள் கருத்து  
  (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
  Copyright © 2004 Tamiloviam - Authors
  Best viewed with IE 4.x and above, Netscape 7.x , Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
  | Privacy |