50 லட்சம் மக்கள் தொகை கொண்ட நாடு, நார்வே. அங்கிருந்து ஓர் உலகத்தரமான பாடகி இசை உலகுக்கு கிடைத்துள்ளார். சிஸல். முழுப்பெயர் Sissel Kyrkjebø . சிஸலுக்குப் பிறகு வரும் எழுத்துக்களை Shear-shuh-buh என்று உச்சரிக்கவேண்டிய சிரமம் இருப்பதால் சிஸல் என்றே அழைப்போம். சிஸலின் முக்கிய அடையாளம் - அவர் டைட்டானிக் பின்னணி இசையின் குரலுக்குச் சொந்தக்காரர். புல்லாங்குழல் இசையில்தான் மயங்கிக் கிடக்கிறோமா என்று சடுதியில் நம்மை புரட்டிப்போடுகிற டைட்டானிக் பின்னணி இசையில் சிஸல் குரலுக்கும் புல்லாங்குழலுக்கு அப்படியொரு இணைத்தன்மை இருக்கும். வார்த்தைகளே இல்லாத அந்தப் பாடலை இல்லையில்லை பின்னணி இசையைப் பிரமாதப்படுத்தியிருப்பார் சிஸல்.
'மை ஹார்ட் வில் கோ ஆன்' என்கிற புகழ்பெற்ற டைட்டானிக் பாடலை முதலில் சிஸல்தான் பாடவேண்டியிருந்தது. ஆனால் செலின் டியான் சோனி நிறுவனத்தின் ஒப்பந்தப் பாடகர் என்பதால் சிஸலுக்கு அற்புதமான வாய்ப்பு பறிபோய்விட்டது. டைட்டானிக் ஆல்பத்தில் சிஸலின் பெயர் எங்குமே இருக்காது. ஆனாலும் மீடியா இவரை வளைத்துக்கொண்டது. டைட்டானிக் பின்னணி இசைக்கான குரலை உலகம் அறிந்துகொண்டது. குறிப்பாக அமெரிக்கர்கள் சிஸலை தலைக்குமேல் தூக்கி வைத்துக்கொண்டாடுகிறார்கள். இன்னொரு 50 லட்ச மக்கள் தொகை கொண்ட நாடான அயர்லாந்தின் பிரபல பாடகி என்யாவின் பாதிப்பு சிஸலிடமிருந்தாலும் இந்த ஒப்பீடு சிஸலுக்கு மேலும் பிராபல்யத்தையே தேடிக்கொடுத்திருக்கிறது.
இன்றைய சூழ்நிலையில் ராப் பாடல் பாடும் ஆசை இல்லாத பாடகர்களே இருக்கமுடியாது. குரலில் வெரைட்டி காண்பிக்க அதுவே மிகவும் உதவும். ஆனால் இன்றுவரை, தனக்கு ராப் பாடல் பாட சரியாக வராது என்கிறார் சின்னக்குயில் சிஸல். சிஸலின் முக்கியப் பாடல்களில் ஒன்றான 'செனன்டோ'வைக் கேட்டுப்பாருங்கள். சொக்கிப் போவீர்கள்.
திடீரென்று சிஸல் பற்றி பேசக்காரணம்? குட்டிக் குட்டி நாடுகளிலிருந்து எல்லாம் இதுபோன்ற திறமைகள் தோன்றி உலகப்புகழ் பெறுகிறார்கள். 6 கோடி மக்கள் தொகை கொண்ட தமிழ்நாட்டிலிருந்து ஏன் இதுபோன்ற சர்வதேசத் தரத்தில் ஒரு பாடகர் உருவாகவில்லை? ரஹ்மான்போல ஏன் எல்லோருக்கும் கடல்தாண்ட தைரியம் இல்லை? எது தடை? திறமையா, முயற்சியா?
|