ஆகஸ்ட் 03 2006
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
திரைவிமர்சனம் : இம்சை அரசன் 23-ம் புலிகேசி
- மீனா [feedback@tamiloviam.com]
Save as PDF | Bookmark in Del.icio.us | | Printable version | URL |

ஆதிகாலத்து உத்தமபுத்திரன் படத்தின் காமெடி வடிவம் தான் தற்போதைய இம்சை அரசன் 23-ம் புலிகேசி. சோழபுரம் பகுதியை ஆளும் குறுநில மன்னரான நாகேஷ் மனோரமா தம்பதிகள் குழந்தை பாக்கியம் இல்லாமல் தவிக்கிறார்கள். வெகுகாலத்திற்குப் பிறகு அவர்களுக்கு சுயபுத்தி, சொல்புத்தி என இருவேறு ஜாதக அம்சங்களுடன் கூடிய இரட்டை குழந்தை பிறக்கிறது. ராணியின் தம்பியும் தலைமை மந்திரியுமான நாசர் நாகேஷிற்குப் பிறகு தனக்குத்தான் அரியாசனம் என்ற கனவில் மிதப்பவர். பிறந்த குழந்தைகளால் எங்கே தன் ஆசை நிராசையாகிவிடுமோ என்ற எண்ணத்தில் - எக்காலத்திலும் நாடு தன் கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும் என்ற ஆசையில் சொல் புத்தியுள்ள குழந்தையை வைத்துக்கொண்டு சுயபுத்தி குழந்தையை ஆற்றில் விடச்சொல்கிறார்.

ஆற்றில் விடப்படும் சுயபுத்தி குழந்தையை அரண்மனை வைத்தியரான வெண்ணிற ஆடை மூர்த்தியின் மனைவி எடுத்து வளர்க்க ஆரம்பிக்கிறார். சொல் புத்தியுள்ள குழந்தை 23-ம் புலிகேசி என்ற பெயரில் மாமாவின் கட்டளைக்கு கீழ்படிந்து நாட்டை ஆள, சுயபுத்தி குழந்தை உக்கிரபுத்தன் பெயரில் ஏழை குடும்பத்தில் வளர்ந்து வீரனாக அறிவாளியாக உருவாகிறார்.

Nasser,Vadiveluநாசரின் பேச்சைக் கேட்டுக்கொண்டி வெள்ளையர்களுடன் கூட்டு வைத்து நாட்டு மக்களை வரிவசூல் செய்கிறேன் என்ற பெயரில் வாட்டி வதைக்கிறார் புலிகேசி. நாட்டில் நடக்கும் இத்தகைய அநியாயங்களைக் கண்டு உள்ளம் கொதிக்கிறார் புரட்சி வீரனான உத்தமபுத்தன். இந்நிலையில் ஒரே உருவ ஒற்றுமையுள்ள புலிகேசியும், உக்கிரபுத்திரனும் இடம் மாறும் சூழல் ஏற்படுகிறது.

புத்திசாலியான புது அரசர் தீட்டும் திட்டங்களால் நாட்டு மக்களின் வாழ்வு மேம்படுகிறது. மருமகனின் நடத்தையில் தோன்றிய திடீர் மாற்றம் மாமன் நாசருக்கு சந்தேகத்தைக் கிளப்புகிறது. ஒருகட்டத்தில் நடந்த ஆள் மாறாட்டத்தைக் கண்டுபிடிந்த்து விடுகிறார் நாசர். உக்கிரபுத்தனை போட்டுத்தள்ள நாசர் திட்டம் தீட்ட, நாசரின் திட்டத்திலிருந்து அரசனாக இருக்கும் உக்கிரபுத்திரன் நாட்டை எப்படி காப்பாற்றுகிறார் என்பதே கதை.

உக்கிரபுத்தன், புலிகேசி என்று இரட்டை வேடம் வடிவேலுவிற்கு. இரண்டிலும் வெளுத்து வாங்கியுள்ளார் என்றாலும் புலிகேசியாக அவர் செய்யும் இம்சை அப்பப்பா... அரசன் புலிகேசி அறிமுகமாகும் முதல் காட்சியிலேயே மாடிப்படி கைப்பிடியில் உட்கார்ந்து சறுக்கி விளையாடி காமெடியை ஆரம்பிக்கிறார் வடிவேலு. அதிலும் வேட்டைக்குச் சென்று தப்புத் தப்பாக அம்பு விடும் மன்னர் மீது கரடி காறித் துப்பும் காட்சியில் சிரித்து சிரித்து வயிறு புண்ணாவது நிச்சயம். தன்னைப் பற்றி பாடி பரிசு வாங்க வரும் புலவரை தலைகீழாக கட்டி தண்டிப்பது, ஜாதிச் சண்டைக்காக பெரிய மைதானம் கட்டி சண்டை போடும் காட்சியை கண்டு ரசிப்பது என புலிகேயின் இம்சைகள் ஒவ்வொன்றும் சூப்பர்.  மன்னரின் அமைச்சராக வரும் இளவரசு செய்யும் கொட்டங்கள் அருமை.

Vadiveluபுலிகேசி வடிவேலு இப்படி என்றால் உக்கிரபுத்தனாக வரும் வடிவேலுவோ சிவாஜி, ஜெமினி ரேஞ்சில் சண்டைக் காட்சிகளிலும் காதல் காட்சிகளிலும் கலக்குகிறார்.

சகுனித்தனம் செய்யும் மாமன் / மந்திரி கதாபாத்திரத்திற்கு நாசர் கனகச்சிதமாக பொருந்துகிறார்.  நாகேஷ் கொஞ்ச நேரமே வந்தாலும் மனதில் நிற்கிறார். மனோரமாவின் அழுகையை இயக்குனர் குறைத்திருந்தால் புண்ணியமாய் போயிருந்திருக்கும். அந்த அளவிற்கு அழுது தீர்க்கிறார். கதாநாயகிகளாக வரும் மோனிகா, தேஜாஸ்ரீ இருவரும் சில காட்சிகளில் தலையைக் காட்டி இரண்டு பாடல்களுக்கு ஆடிவிட்டு போகிறார்கள். அவ்வளவே. தளபதியாக வரும் ஸ்ரீமன் இயக்குனர் சொன்னதை அப்படியே செய்துள்ளார்.

மன்னர் காலப்படத்திற்கு தகுந்தவாறு ஆர்தர் வில்சனின் ஒளிப்பதிவும் சபேஷ் முரளியின் இசையும் மனதை அள்ளுகின்றன. முக்கியமாக கலை இயக்குனர் கிருஷ்ணமூர்த்தியின் ஆடை வடிவமைப்பும் செட்டுகளும் நம்மை அந்தக் காலத்திற்கே அழைத்துச் செல்லும் விதமாக அமைந்துள்ளன. பழமையின் டச் வேண்டும் என்பதற்காகவே புதுமைப்பித்தனை பாடல்கள் எழுதச் சொல்லி இருப்பார்கள் போலும். ஆடிவா பாடிவா, பஞ்சுமெத்தை கனியே, ஆசை கனவே போன்ற பாடல்களில் பழைய டச் நிறையவே தெரிகிறது.

அரசர் காலத்துப் படமாக இருந்தாலும் 9-5 வேலை பார்க்கும் அரசு ஊழியர்களது நடத்தை, வெளிநாட்டு குளிர்பான மோகம், ஆயுதபேர ஊழல் போன்ற பல தற்கால நிகழ்வுகளைக் காமெடியாகச் சொல்லியிருப்பது இயக்குனரது திறமைக்கு ஒரு நல்ல சான்று. இந்த நவீன யுகத்தில் மன்னர் கதையை அதுவும் முழுக்க முழுக்க காமெடி கலந்து எடுத்த தைரியத்திற்காகவே தயாரிப்பாளர் ஷங்கர் மற்ரும் இயக்குனர் சிம்புதேவனுக்கு ஸ்பெஷல் பாராட்டுகள்.

ரொம்ப நாட்களுக்குப் பிறகு ஒரு நல்ல தரமான காமெடி படத்தை குடும்பத்தோடு சேர்ந்து பார்க்கும் விதமாக அளித்துள்ள இயக்குனர் சிம்புதேவன் தமிழ் திரையுலகில் நிச்சயம் ஒரு பெரிய ரவுண்ட் வருவார்.

| | | |
oooOooo
மீனா அவர்களின் இதர படைப்புகள்.   திரைவிமர்சனம் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |