இங்கு அப்படித் தான் இருக்கிறது. ஒரு படம் வெற்றி பெற்றால் அந்த இயக்குனர் ஒரே நாளில் அனைவராலும் அறியப்படுகிறார்.
இயக்குனர் பிரபு சாலமன் சமீபத்தில் அனைவராலும் கவனிக்கப்படும் இயக்குனர்களில் ஒருவராகி இருக்கிறார். தனது புது படத்திற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவரிடம் பேசுவதற்கு வாய்ப்பு கிடைத்தது. அவரிடம் பதிவு செய்யப்பட்ட நேர்காணல் :-
தமிழோவியம் : நீங்கள் இயக்கி சமீபத்தில் வெற்றி பெற்ற கொக்கி படம் ஒர் மாறுபட்ட முயற்சி என்று சொல்லலாமா?
பதில் :- கொக்கி படம் வெற்றி அடையும் என்று எதிர்பார்த்த ஒன்று தான். ஏனெனில் அப்படத்தில் யாதார்த்தத்தை கையாண்டிருந்தோம். படத்தில அடுத்து என்ன என்பது இருந்ததால் அப்படம் வெற்றி அடைந்தது. அதே போல் கதைக்கான களமும் முற்றிலும் புதிது. நகைச்சுவை என்று எதுவுமே அப்படத்தில் கிடையாது. நாட்டில் நடக்கும் சம்பவங்களைப் பார்த்து தான் அப்படத்தின் கதையை அமைத்து இயக்கினேன். குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட அப்படம் அனைவரையும் காப்பாற்றியது என்பது உண்மை. இது தவிர ஒரு மாறுபட்ட முயற்சிக்கும் மக்கள் அதரவு கொடுக்கிறார்கள் என்பதுவும் இதில் இருந்து உணர்ந்து கொண்டேன்.
தமிழோவியம் :- அடுத்து என்ன மாதிரியான படத்தை எடுக்கத் திட்டமிட்டு இருக்கிறீர்கள்?
பதில் :- விளையாட்டை மையமாகக் கொண்டு ஒரு படத்தை எடுக்கலாம் என உள்ளேன். இதற்கு அலோசனை நடக்கிறது.
தமிழோவியம் :- சமீபகாலமாக தமிழ் சினிமாவில் தாதாக்கள் அதிகரித்து வருவது பற்றி உங்களின் கருத்து என்ன?
பதில் :- தமிழ் சினிமாவில் தாதாக்கள் பற்றிய படங்கள் அதிகமாக வருகிறது என்பது உண்மை தான்.
தமிழோவியம் :- ரசிகர்கள், பொது மக்கள் விரும்புவதால் தான் இது போன்ற படங்கள் வருகிறதா?
பதில் :- இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். ஏனெனில் நகரங்களில் இருக்கும் ஆபாசம், தாதாக்கள் போன்றவற்றை குறைந்த அளவில் தான் காட்டப்படுகின்றன. இதனை ரசிகர்கள் விரும்புவதால் இது போன்ற கதைகள் உள்ள படங்கள் வருகின்றன. ஆனால் இதனையே தொடர்ந்து செய்து கொண்டிருந்தால் அதனை மக்கள் புறக்கணித்து விடுவார்கள். அதனால் இயக்குனர்கள் மாறு கோண திசையில் சிந்திக்கத் தொடங்குவார்கள் என நினைக்கிறேன்.
தமிழோவியம் :- கிங், கண்ணோடு காண்பதெல்லாம், கொக்கி போன்ற படங்களை வித்தியாசமாக நீங்கள் இயக்கி இருக்கிறீர்கள். இந்த வித்தியாசத்திற்கான விதை எங்கு கிடைக்கிறது?
பதில் : நாம் வாழும் சமூகத்தில் தான் எல்லாமே கிடைக்கிறது. சினிமாத் துறையில் வித்தியாசமாக சிந்தித்து படம் எடுத்தால் தான் இங்கு நிலைக்க முடியும். அதற்கான தேடலை நாம் தேடிக் கொண்டே இருக்க வேண்டும். அப்படி தேடுபவர்கள் தான் வெற்றியை தனதாக்க முடியும்.
தமிழோவியம் :- உலக தரத்திற்கு இன்றைய தமிழ் சினிமா ரசிகர்களின் ரசனை மாறி இருக்கிறதா?
பதில் :- கண்டிப்பாக மாறி இருக்கிறது. கொக்கியை ரசிக்கும் ரசிகர்கள் இங்கு தான் இருக்கிறார்கள். ஆறுவை ரசிக்கும் ரசிகர்கள் இங்கு தான் இருக்கிறார்கள். ரசிகர்கள் ரசனை காளத்திற்கு ஏற்ப மாறுகிறது. அதனால் ஒவ்வொரு காட்சியிலும் இயக்குனர்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்து, சிந்தித்து எடுக்கிறார்கள். இதற்கு உதாரணமாக பல படங்களை நாம் சொல்லலாம்.
தமிழோவியம் :- சினிமா ஒரு பிரமிப்பூட்டும் சாதனமா?
பதில் :- இங்கு அப்படித் தான் இருக்கிறது. ஒரு படம் வெற்றி பெற்றால் அந்த இயக்குனர் ஒரே நாளில் அனைவராலும் அறியப்படுகிறார். தோல்வி அடைந்தால் கதை அவ்வளவு தான். அதே போல் தமிழ் சினிமாவில் முன்பு போல் இல்லாமல் பல நுட்பங்களை ரசிகர்கள், பொது மக்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள். அதற்கு காரணம் நமது மீடியாக்களின் அபார வளர்ச்சி என்று நினைக்கிறேன். அதே போல இது வரவேற்கத் தக்க ஒன்று தான்.
தமிழோவியம் :- தமிழ் சினிமா இளைஞர்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்கிறது என்ற குற்றச்சாட்டு இருக்கிறதே?
பதில் :- சினிமா தோன்றிய காலத்தில் இருந்து இந்த குற்றச்சாட்டு இருக்கத் தான் செய்கிறது. ஆனால் இதில் உண்மையில்லை என்பது தான் என் கருத்து. மாறாக தமிழ் சினிமா இளைஞர்களை விழிப்புணர்வு அடையச் செய்கிறது. தவறான பாதைக்கு அழைத்துச் செல்கிறது என்பது எல்லாம் நிராகரிக்க வேண்டிய குற்றச்சாட்டுக்கள்.
தமிழோவியம் :- தமிழ் சினிமாவிற்கு தமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்கு என்ற அறிவிப்பு பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பதில் :- தமிழை, தமிழ் சினிமாவை பாதுகாக்கும் முயற்சி. இதனால் பல தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். இதனை நாம் வரவேற்க வேண்டும். வாழ்த்துக்கள்.
|