நெல்லுக்கிரைத்த நீர்வாய்க்கால் வழியோடி புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்- தொல்லுலகில் நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை (மூதுரை)
ஒருவர் இருந்தாலே மழை பொழியும் என்கிறார் ஔவை. ஆயிரம் இந்தியர்களுக்கு மேல் ஒரே இடத்தில் கூடினால் - இடி மழை மின்னலுடன் 'பொத்துகிட்டு ஊத்தியது வானம்'. நான்கு மணியளவில் ஆரம்பிக்க வேண்டிய 'சுதந்திர தின விழா' ஒரு மணி நேரம் தாமதமாகத் துவங்கியது.
'பாஸ்டன் பெருநகர இந்திய கூட்டமைப்பு' (India Association of Greater Boston) சார்பாக இந்தியாவின் சுதந்திர தின கொண்டாட்டங்கள் இன்று ஹாட்ச் ஷெல் அரங்கத்தில் நடைபெற்றது. '2005 இந்தியா தின'த்திற்காக நியு இங்கிலாந்து பகுதியில் இருக்கும் பல்வேறு இந்திய அமைப்புகள் நிகழ்ச்சிகளை வழங்கினார்கள்.
ஸஹேலி, AID, ஆஷா போன்ற தொண்டு நிறுவனங்களும், புகாரா, திவா போன்ற உணவகங்களும், நகை, துணிக்கடைகளும், வெஸ்டர்ன் யூனியன், ப்ருடென்ஷியல் போன்றவர்களும் ஸ்டால்கள் அமைத்திருந்தார்கள். விதவிதமான சுவையான உணவுவகைகள், இலவசப் பொருட்கள் என்று இந்தியன் ஸ்டாண்டர்ட் டைம் தொடக்கம் அலுக்கவில்லை.
அமெரிக்காவின் தேசிய கீதத்துடன் விழா தொடங்கியது. அதன் பின்பு இந்திய தேசிய கீதம் பாடினார்கள். கோவா, ஓடிஸி, கேரளாவின் மரபு நடனங்கள்; கிஸ்னா, ஸ்வதேஸ் பாலிவுட் பாடல்கள்; அஷ்டலஷ்மி, தசாவதார புராண இதிகாச நாடகங்கள் என்று பல்வேறு ரகங்களில் கண்ணுக்கு விருந்து தயார் செய்திருந்தார்கள்.
'பக்த பிரஹலாதா'வில் 'எங்கே நாராயணன்' என்று மேடையில் இருந்த ஹிரண்யகசிபு இடிமுழக்கியவுடன், வானில் இருந்து இடி மின்னலுடன் மழையும், ஸ்டேஜ் தூணில் இருந்து நரசிம்மரும் வெளிவந்தார்கள். மக்கள் கிளம்பிவிட்டார்கள்.
திருமூலர் :: இங்குநின் றான்அங்கு நின்றனன் எங்குளன் பொங்கிநின் றான்புவ னாபதி புண்ணியன் கங்குல்நின் றான்கதிர் மாமதி ஞாயிறு எங்குநின் றான்மழை போல்இறை தானே.
(திருமந்திரம் :: ஒன்பதாம் தந்திரம்)
மழை கொட்டியிருக்காவிட்டால், இன்னும் சிறப்பாக எல்லா நிகழ்ச்சிகளையும் அனைவரும் கண்டு கொண்டாடியிருக்கலாம்!
|