|
கடந்த ஞாயிறு (ஆகஸ் 8 2004) அன்று மாலையில் நியுஜெர்சி தமிழ்ச்சங்கம் ஏற்பாடு செய்திருந்த இசை மற்றும் இலக்கிய நிகழ்ச்சிகள் சிறப்பாக நடந்தேறியது. நியுஜெர்சி தமிழ்ச்சங்க தலைவர் K.சிவராமன் வரவேற்புரை அளிக்க, தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்சி இனிதே தொடங்கியது.
முதல் நிகழ்ச்சியாக, கலைமாமணி திரு.சுந்தரம் குழுவினரின் நாதஸ்வர நிகழ்ச்சி நடைபெற்றது. புரியாத பாடல்களை வாசித்து யாரையும் நெளிய வைக்காமல் தெரிந்த பாடல்களையே வாசித்து அசத்தினார்கள். குறிப்பாய் சின்னஞ் சிறு கிளியே பாடல் மிக அருமையாக இருந்தது. திரு.சுந்தரம் அவர்கள் தனக்கு கலைமாமணி விருதாய் கிடைத்த வெள்ளி நாதஸ்வரத்தில் வாசித்து அசத்தினார்.
நாதஸ்வர நிகழ்ச்சியை தொடர்ந்து சாகித்ய அகாடமி விருது பெற்ற சிறந்த எழுத்தாளர் / பேச்சாளர் பிரபஞ்சன் அவர்கள் 'கதைகள் நிறைந்த உலகம்' என்ற தலைப்பில் பேசினார். ஜென் கதையில் தொடங்கி, ரஷிய, இத்தாலிய நாட்டு கதைகள் என்று ஒரு அலசு அலசினார். குறிப்பாய் ஒரு ரஷிய நாட்டுக் கதை அந்த நாட்டின் அரசியல் நிலமையையே எப்படி மாற்றியமைத்தது என்பதை விளக்கினார். பிறகு முல்லை, மருதம், நெய்தல், பாலை இப்படி நிலங்களுக்கு கூட பூக்களின் பெயரையே வைத்த தமிழர்களின் பண்பாட்டைப் பற்றி விளக்கினார்.
சனிப்பெயர்ச்சி பற்றி அவர் கூறிய நகைச்சுவை சம்பவம்:
"ஒரு புதுமணத்தம்பதிகள் தெருவில் நடந்து செல்கிறார்கள், அப்போது அந்தப் பெண்ணை ஒரு கல் தடுக்கிறது. கணவன் உடனே 'சனியனே ! என் மனைவியின் காலையா தடுக்கிறாய்' என்று கோபப்படுகிறான். ஆறு மாதங்கள் கழித்து மீண்டும் அதேக்கல் அந்தப் பெண்ணின் காலை தடுக்கிறது, ஆனால் இப்போது 'சனியனே ! பார்த்து வரக்கூடாது' என்று கோபப்படுகிறான். 6 மாதத்தில் சனி எப்படி இடம் பெயர்ந்தது பார்த்தீர்களா?"
அவரைத் தொடர்ந்து ஆல் இந்தியா ரேடியோ மதுரையில் பணியாற்றி வரும் திரு. சுந்தர ஆவுடையப்பன் 'மகிழ்ச்சியான வாழ்க்கை' எப்படி வாழ வேண்டும் என்று பேசினார். அவர் பேசிய ஒவ்வொரு வார்த்தைக்கும் அரங்கில் சிரிப்பொலி எழுந்தது. உலகில் பலதரப்பட்ட மக்கள் இருந்தாலும் பலதரப்பட்ட சூழ்நிலைகளில் இருந்தாலும் எல்லாவற்றிலும் நகைச்சுவை இருக்கிறது என்பதை பல நகைச்சுவை சம்பவங்கள் சொல்லி மகிழ்வித்தார்.
நிகழ்ச்சியின் இறுதியாய் நர்த்தகி நடராஜின் பரதநாட்டியம் இடம்பெற்றது. நாட்டியமும், முக பாவங்களும் மிக அழகாக இருந்தன.
அருமையான இரவு உணவோடு நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது.
|