ஆகஸ்ட் 17 2006
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
திரைவிமர்சனம் : அரண்
- மீனா [feedback@tamiloviam.com]
Save as PDF | Bookmark in Del.icio.us | | Printable version | URL |

ராணுவ வீரர்களைப் பற்றி ஒரு முன்னாள் ராணுவ வீரர் இயக்கியிருக்கும் படம். தன்னுடைய ராணுவ வாழ்க்கையில் தான் எதிர்கொண்ட, சந்தித்த மனிதர்களை மனதில் வைத்து இப்படத்தை இயக்கியுள்ளார் மேஜர் ரவி. தீவிரவாதிகள் எப்படி உருவாக்கப்படுகிறார்கள், அவர்கள் எப்படி இந்திய எல்லைக்குள் நுழைகிறார்கள், அவர்களது உண்மையான நோக்கம் என்ன என்றெல்லாம் கமல் தன் கம்பீரக் குரலில் எடுத்துச் சொல்ல ஆரம்பிக்கிறது படம்.

Jeeva,Gopikaகாஷ்மீர் எல்லைப்பாதுகாப்புப் படையின் கமாண்டோவான மேஜர் மகாதேவனின் (மோகன்லால்) தலைமையில் செயல்படும் கமாண்டோ படையில் பணிபுரிபவர் ஹவில்தார் ஜெய்குமார் (ஜீவா). மேஜர் எள் என்றால் எண்ணெயாக நிற்பவர் ஜீவா. மற்ற ராணுவத் தளபதிகளால் அடக்க முடியாத தீவிரவாதச் செயல்களை மோகன்லால் தலைமையிலான குழு திறமையாகப் பணிபுரிந்து அடக்கிக் காட்டுகிறது.

தன்னுடையத் திருமணத்திற்காக சொந்த ஊருக்கு வரும் ஜீவா தன்னுடைய பெற்றோர் பார்த்து முடிவு செய்த கோபிகாவைக் கரம் பிடிக்கிறார். இதற்கிடையே காஷ்மீரில் பெரும் பதட்டத்தை உருவாக்க நினைக்கும் ஒரு தீவிரவாதக் குழுவைப் பற்றிய நம்பிக்கையான செய்தி மோகன்லாலுக்குத் தெரியவருகிறது. தன்னுடைய பிரதம சீடனான ஜீவாவை திரும்ப அழைப்பதைத் தவிர வேறு வழியில்லை என்பதை உணரும் மோகன்லால் ஜீவாவை அழைக்கிறார். கல்யாண வாழ்க்கையை விட கொண்ட கடமைதான் பெரிது என்று எண்ணும் ஜீவா திருமணம் முடிந்து 3 நாட்களே ஆன நிலையில் மேஜரின் அழைப்பிற்கு மறு பேச்சு பேசாமல் கிளம்பிச் செல்கிறார்.

காஷ்மீரில் உள்ள ஒரு பிரபல மசூதியை தீவிரவாதிகள் வெடிவைத்து தகர்த்து விட்டு பழியை இந்துக்கள் மீது போட்டு அங்கே ஒரு மிகப்பெரிய இனக்கலவரத்தை உண்டாக்கப்போகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளும் மோகன்லால் அந்தச் சதியை முறியடிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுகிறார். இதற்கிடையே தங்கள் சதித்திட்டத்திற்கு உடன்பட மறுக்கு ஒரு காஷ்மீர் முஸ்லீம் குடும்பத்தினர் அனைவரையும் தங்கள் பிடியில் கொண்டுவரும் தீவிரவாதிகள் அவர்கள் ஒவ்வொருவரையும் சித்திரவதை செய்கிறார்கள். உள்ளூர் போலீஸ் அதிகாரியான பிஜுமேனன் மூலமாக இதைத் தெரிந்துகொள்ளும் மோகன்லால் அக்குடும்பத்தினரைக் காப்பாற்ற முயற்சி செய்கிறார். இந்த முயற்சியில் வெற்றி பெற்று மோகன்லாலும் ஜீவாவும் தீவிரவாதிகளை அழித்து காஷ்மீர் இனக்கலவரத்தைத் தடுத்தார்களா இல்லையா? இதற்கு அவர்கள் கொடுக்கும் விலை என்ன? இவைகளே அரணின் கிளைமாக்ஸ் காட்சிகள்.

Mohanlalதன்னுடைய கம்பீர நடிப்பால் மோகன்லால் பிரமாதப்படுத்துகிறார். பல காட்சிகளில் கண்களாலேயே பேசி சபாஷ் போட வைக்கிறார். தன்னுடைய உயர் அதிகாரியான பிரகாஷ்ராஜிடம் " எல்லா விஷயங்களையும் விரிவாகச் சொல்கிறேன் சார் - நான் உயிருடன் வந்தால்.." என்று அவர் கூறும் காட்சி ஒவ்வொரு ராணுவ வீரனின் மன உணர்வைத் தெள்ளத்தெளிவாகக் காட்டும். மோகன்லால் மற்றும் லக்ஷி இடையே உருவாகும் காதல், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தை - மனைவி குழந்தை இருவரையும் தீவிரவாதத்திற்கு பலிகொடுத்துத் தவிக்கும் மோகன்லாலின் மன நிலை என்று அனைத்துக் காட்சிகளிலும் பிரமாதப்படுத்துகிறார்.

ஹவில்தாராக வரும் ஜீவா ஆரம்பத்தில் கோபிகாவிடம் செய்யும் குறும்புகள் எல்லாம் கொஞ்சம் அமெச்சூர் தனமாக இருந்தாலும் படத்தின் பிற்பாதியில் தன்னுடைய பண்பட்ட - துடிப்பான நடிப்பால் சபாஷ் போட வைக்கிறார். சண்டைக்காட்சிகளில் பின்னியெடுக்கும் ஜீவா கிளைமாக்ஸ் காட்சியில் கண்கலங்க வைக்கிறார். தனக்குக் கொடுக்கப்பட்ட வேலையை நன்றாக புரிந்து கொண்டு செய்திருக்கிறார் கோபிகா. நாலே காட்சியில் வந்தாலும் நச்சென்று நம் மனதில் பதிகிறது அவரது நடிப்பு. மெடலை வாங்கிக்கொண்டு ராணுவவீரர்களின் நினைவுச்சின்னம் முன்பாக நின்று ஜீவாவின் நினைவில் அவர் பேசும் காட்சிகள் அபாரம். பிரகாஷ்ராஜின் திறமை வீணடிக்கப்பட்டிருக்கிறது இப்படத்தில். கஞ்சா கருப்பு மற்றும் ரமேஷ்கண்ணா இருவரும் காமெடி என்ற பெயரில் தீவிரவாதிகளை விட அதிகமாக டார்ச்சர் செய்கிறார்கள். ஒரு கட்டத்தில் கதையின் ஓட்டத்தை இக்காமெடி காட்சிகள் ரொம்பவுமே பாதிக்கின்றன.

திருவின் அபாரமான ஒளிப்பதிவும், சக்தியின் துடிப்பான சண்டைப்பயிற்சியும், பாலகிருஷ்ணாவின் ஷார்ப்பான வசனங்களும் படத்திற்கு பலம் சேர்கின்றன. ஜோஷ்வா ஸ்ரீதரின் பாடல்கள் ஓக்கே ரகம்.

காஷ்மீர் தீவிரவாதிகளும் அங்குள்ள மக்களும் தமிழில் பேசி நம்மைப் படுத்தாமல் இயல்பாக இந்தியிலேயே பேசுகிறார்கள். இதற்காகவே இயக்குனர் மேஜர் ரவிக்கு பாராட்டுகள். ஆனாலும் பக்காவாக தங்களிடம் மாட்டிய தீவிரவாதியை ஜீவாவிடம் ஒப்படைத்து "இவனை அடி" என்று மோகன்லால் கூறும் காட்சி ரொம்பவும் சினிமாத்தனம் நிறைந்தது. அதைப்போலவே ரகசியா சமாச்சாரம். இதைப்போன்ற சில குறைகளை தவிர்த்துப்பார்த்தால் அரண் நம் நினைவை விட்டு லேசில் நீங்க மறுக்கும் ஒரு அருமையான படம் என்பதில் சந்தேகம் இல்லை.

| | |
oooOooo
மீனா அவர்களின் இதர படைப்புகள்.   திரைவிமர்சனம் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |