ஆகஸ்ட் 17 2006
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
கட்டுரை : டிவியே போ போ போ
- மீனா [feedback@tamiloviam.com]
Save as PDF | Bookmark in Del.icio.us | | Printable version | URL |

திருவிழாக்கள், பண்டிகைகள் எல்லாம் வரும் நாட்களில் சுற்றமும் நட்பும் கூடி மகிழ்ந்து களித்திருப்பதுதான் நமது நாட்டின் பழக்கமாக ஒரு காலத்தில் இருந்து வந்தது. விருந்தோம்பலுக்கு புகழ் பெற்றவர்கள் தமிழர்கள் என்று உலகமே போற்றும் வண்ணம் வீட்டிற்கு வந்த விருந்தினர்களை நன்கு உபசரிப்பது நம் தமிழ் பண்பாடு. ஆனால் இவை எல்லாம் மலையேறி வெகுகாலம் ஆகிவிட்டது என்று நித்தம் நினைக்கும் அளவிற்கு நம் பண்பாடும் பழக்கவழக்கங்களும் நாள் தோறும் சீரழிந்து வருவது மிகவும் வேதனையான விஷயமாகும்.

தீபாவளி, பொங்கல், நவராத்திரி என்று நமக்கு பண்டிகைகளுக்கு பஞ்சமே கிடையாது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட தீபாவளி என்றால் அதிகாலையில் அனைவரும் எழுந்து குளித்து, புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து, நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் இனிப்புகளைப் பரிமாறிக்கொண்டு உற்சாகமாகக் கொண்டாடும் நிலை இருந்து வந்தது. ஆனால் இன்றோ தீபாவளி, பொங்கல் போன்ற எந்தப் பண்டிகை நாளானாலும் தொலைக்காட்சிப் பெட்டியின் முன்பாக விடிகாலை அமர்ந்தால் நடுஜாமம் வரை எழுந்திருக்காத ஒரு நிலை. இதில் பட்டாசாவது, பொங்கலாவது, உறவினர்களாவது, நண்பர்களாவது...

தொலைக்காட்சியில் ஏதாவது ஒரு மெகாத் தொடர் வந்து கொண்டிருக்கும் வேளையில் நாம் நம்முடைய உறவினர்கள் வீட்டிற்குச் செல்வதைப் போன்ற மாபெரும் தவறு ஒன்றுமே இருக்காது. வந்தவர்களை வா என்று கூப்பிட ஒருவரும் இருக்கமாட்டார்கள். எல்லோரும் தொலைக்காட்சி பெட்டியின் முன்பாக லயித்திருப்பார்கள். அப்போது அவர்களிடம் நாம் கேட்கும் கேள்விகளுக்கும் ஓரிரு வார்த்தைகளில் மட்டுமே பதில் கிடைக்கும் - அதுவும் தொலைக்காட்சியைப் பார்த்தபடியே.....

தொலைக்காட்சிப் பெட்டியில் வரும் நிகழ்சிகளால் நம் வாழ்க்கை சீரழிவதற்கு ஒரு சிறந்த உதாரணம் இந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று ஒரு தனியார் தொலைக்காட்சியில் இடம் பெற்ற நிகழ்சிகள். காலை முதல் ஆரம்பித்து இரவு வரை சினிமா சம்மந்தப்பட்ட நிகழ்சிகளாகவே போட்டுத் தள்ளிவிட்டார்கள். வருத்தப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் அதில் ஒரே ஒரு நிகழ்சியில்தான் கொஞ்சமாக சுதந்திரத்தைப் பற்றி பேசினார்கள். மற்ற அனைத்து நிகழ்சிகளும் நட்சத்திர பேட்டி, சினிமா போன்றவைதான்.

இப்படி எல்லா பண்டிகை மற்றும் சுதந்திர தினம், குடியரசு தினம், காந்தி ஜெயந்தி போன்ற நாட்களில் எல்லாம் வெறும் சினிமா சம்மந்தப்பட்ட நிகழ்சிகளையே போட்டுக்கொண்டிருந்தால் நம் எதிர்காலத் தலைமுறையினருக்கு அந்தந்த நாட்களின் பெருமை எவ்விதம் புரியும்? சினிமா சம்மந்தப்பட்ட நிகழ்சிகளை மட்டுமே இத்தகைய நாட்களில் ஒளிபரப்புவதை நிறுத்திவிட்டு அந்தந்த நாட்களின் பெருமையை இளைய தலைமுறையினர் உணரும் படி பொருத்தமான நிகழ்சிகளை ஒளிபரப்ப சம்மந்தப்பட்ட தொலைக்காட்சி நிறுவனங்கள் முன்வரவேண்டும். சினிமாவே வேண்டாம் என்று சொல்வது இக்கட்டுரையின் நோக்கமல்ல.. ஆனால் வெறும் சினிமா சம்மந்தப்பட்ட நிகழ்சிகள் மட்டும் வேண்டாம் - மற்ற நிகழ்சிகளுக்கும் முக்கியத்துவம் கொடுங்கள் என்று தான் சொல்கிறோம்.

 மேலும் நம் மக்களும் தொலைக்காட்சிப் பெட்டியின் முன் நாள் முழுவதும் முடங்கிக் கிடப்பதை விட்டுவிட்டு உற்றார் உறவினர்கள் நண்பர்களுடன் பண்டிகை மற்றும் விசேஷ நாட்களில் ஓரிரு வார்த்தைகளாவது பேச முன்வரவேண்டும். வந்தாரை வரவேற்று அவர்கள் அகமும் முகமும் குளிர பேசி, விருந்தோம்பி அவர்களை அனுப்பி வைக்கும் பண்பு மீண்டும் நம் மக்களிடையே திரும்ப வேண்டும்.


 

| | |
oooOooo
மீனா அவர்களின் இதர படைப்புகள்.   கட்டுரை பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |