மஹாபாரத யுத்த களம். கர்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் இடையே போர் நடக்கிறது. பகவான் கிருஷ்ணர் ரத சாரதியாக இருந்து அர்ஜுனனின் ரதத்தைச் செலுத்துகிறார். அர்ஜுனன் கர்ணனின் ரதத்தைத் தாக்க அம்பை ஏவுகிறான்.அதன் காரணமாக கர்ணனின் ரதம் 35 அடி தள்ளிப் போய் விழுகிறது. சுதாதரித்துக் கொள்ளும் கர்ணன், அர்ஜுனனின் ரதத்தைத் தாக்க அம்பு விடுகிறான். அர்ஜுனனின் ரதம் 30 அடி தள்ளிப் போய் விழுகிறது.
உடனே அர்ஜுனனின் கர்வம் விழித்துக்கொண்டது. " நான் அடித்தால் அவன் ரதம் 35 அடி தள்ளிப் போய் விழுந்தது. ஆனால் அவன் அடித்தால் என்னுடைய ரதம் 30 அடிதான் தள்ளிப் போனது. ஆகவே கர்ணனை விட நானே பலசாலி! " என்று எண்ணினான்.
எண்ணியதோடு மட்டுமல்லாமல். ரதத் தட்டிலே உட்கார்ந்திருந்த கிருஷ்ணரின் முதுகில் ஒரு தட்டு தட்டி, அவரைக் கூப்பிட்டான். திரும்பின கிருஷ்ணரைப் பார்த்து, " பார்த்தாயா கிருஷ்ணா! நான் விட்ட பாணத்தால் கர்ணனின் ரதம் 35 அடி தள்ளிப் போய் விழுந்தது. ஆனால் அவனது பாணத்தால் என் ரதம் 30 அடி தான் தள்ளிப் போனது. பார்த்தாயா என் பராக்கிரமத்தை? " என்று கூறினான்.
அதைக் கேட்ட பகவான் "அப்படியா அர்ஜுனா?" என்று கேட்டுவிட்டு ஒரு சின்ன சிரிப்பை உதிர்த்தார். அர்ஜுனனின் கர்வத்தை உடனே சரி செய்யாவிட்டால் அவனைப் பிடிக்க முடியாது என்ற எண்ணம் அவரது எண்ணத்தில் தோன்றியது. உடனே அர்ஜுனனின் தேர் கொடியில் இருந்த அனுமாரைக் கீழே கூப்பிட்டார். இறங்கி வந்த ஆஞ்சனேயரிடம், தான் ஒரு முக்கிய விஷயம் பேச வேண்டியிருப்பதாக் கூறினார். உடனே அனுமார் அவருடன் கிளம்பத் தயாரானார். இதைப் பார்த்து திகைத்த அர்ஜுனனிடம், " நான் அனுமாரிடம் ஒரு முக்கியமான விஷயம் பேசவேண்டும். அதனால் நாங்கள் இருவரும் போர்களத்தை விட்டு சற்று வெளியே செல்கிறோம். நாங்கள் திரும்பி வரும் வரையில் நீயே உன் ரதத்தைச் செலுத்திக் கொள் அர்ஜுனா!!" என்று கூறிவிட்டு அனுமாருடன் நடக்கத் தொடங்கினார் பகவான்.
கிருஷ்ணர் கிளம்பிய சற்று நேரத்திற்கெல்லாம் அர்ஜுனனுக்கும், கர்ணனுக்கும் இடையே போர் மீண்டும் துவங்கியது. மறுபடியும் கர்ணனின் தேர் மீது அர்ஜுனன் அம்பை ஏய்தான். கர்ணனின் தேர் 35 அடி தள்ளிப் போய் விழுந்தது. பதிலுக்கு கர்ணனும் பாணப் பிரயோகம் செய்தான். ஆனால் இந்த முறை அர்ஜுனனின் தேர் 150 அடி தள்ளிப் போய் விழுந்தது. அது மட்டுமல்லாமல், ரதம் ஒரு பக்கம் - அர்ஜுனன் ஒரு பக்கம் - அவனது கிரீடம் ஒரு பக்கம், பாணங்கள் ஒரு பக்கம் என்று அனைத்தும் ஒவ்வொரு பக்கத்தில் போய் விழுந்தன. ஒவ்வொன்றையும் ஓடிப் போய் எடுக்கிறான் அர்ஜுனன். அவனது முகத்தில் பயம் தெரிய ஆரம்பித்தது.
அப்போது அவனது முதுகில் யாரோ தட்டினார்கள். அதிர்ந்து போய்த் திரும்பினான் அர்ஜுனன். அங்கே பகவான் கிருஷ்ணர் சிரித்துக் கொண்டு நின்றிருந்தார்.
" கிருஷ்ணா! நீ இங்கே என்ன செய்து கொடிருக்கிறாய்? " என்று அதிர்ச்சி விலகாமல் கேட்டான் அர்ஜுனன்.
" அர்ஜுனா! உன் பராக்கிரமத்தைத் தான் நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன்!!" என்றார் பகவான்.
நடுங்கிப் போனான் அர்ஜுனன். மகா பராக்கிரமசாலியான ஆஞ்சனேயர் கொடியில் இருக்கும்போது, ரத சாரதியாக பரமாத்மா - விச்வாத்மா உட்கார்ந்திருக்கும்போதே கர்ணனின் பாணம் தன்னுடையத் தேரை முப்பது மைல் தள்ளியிருக்கிறதே? அப்படியானால் யார் பராக்கிரமசாலி? " என்ற எண்ணம் அர்ஜுனனின் மனதில் தோன்றியது.
இதை உணர்ந்துகொண்ட பகவான் அர்ஜுனனை நோக்கி, " அர்ஜுனா! பாண்டவர்களாகிய நீங்கள் அனைவரும் நல்லவர்கள் என்பதற்காகவே நான் உங்கள் பக்கம் இருக்கிறேன். நான் இருக்கும் வரையில் உங்களுக்கு ஒன்றும் ஆகாது! ஆனால் இங்கே நடப்பவை எல்லாம் உங்களால் தான் நடக்கிறது என்ற எண்ணம் உன் மனதில் தோன்றியதால் அதை மாற்றவே நான் இப்படிச் செய்தேன். நீ உண்மையான பலவானா? ஒவ்வொரு கணமும் உன்னைக் காக்கும் நான் இல்லாவிட்டல் உன் நிலை என்ன? அதை மறந்து, 'பார்த்தாயா என் பராக்கிரமத்தை ' என்கிறாயே?.. " என்றார்.
அர்ஜுனனின் மனம் தெளிவடைந்தது. அவன் உண்மையை உணரும்படிச் செய்துவிட்டார் பகவான்.
இதிலிருந்து நாம் உணரவேண்டிய கருத்து இதுதான். பகவானோடு கூடவே இருந்து, அவனோடு கூடவே பழகி, அவனுடைய பெருமைகளை உணர்ந்த அர்ஜுனனுக்கே விவேகம் வரவில்லையே! அப்படியானால் நம் கதி? " நான் தான் செய்தேன்!!" என்ற அகங்காரம் அர்ஜுனனுக்கே வந்ததே! நமக்கும் இந்த எண்ணம் வரலாம்.. வரும்.. அப்போது நாம் இந்தக் கதையைச் சற்று எண்ணிப் பார்க்கவேண்டும். கதையை நினைத்துக் கொண்டு ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.
|