ஆகஸ்ட் 24 2006
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
கட்டுரை : புதுமைப்பித்தனின் பூமத்திய ரேகை
- திருமலை கோளுந்து [golundhu1979@yahoo.com]
Save as PDF | Bookmark in Del.icio.us | | Printable version | URL |

தகுதியானவாகளை, தகுதியான நேரத்திலேயே நாம் பாராட்டினால் நாம் வளர்வோம். தகுதியில்லாதவர்களை, தகுதியில்லாத நேரத்திலேயே நாம் பாராட்டினால் நாம் வீழ்வோம்.

புதுமைப்பித்தனின் பூமத்திய ரேகை கட்டுரை தொகுப்பை வெளியிட்டு சிறப்புரை ஆற்றிய எழுத்தாளர் பொன்னீலன் அவர்களின் பேச்சு :-


BoomathiyaRegaiஇந்த விழாவில் கலந்து கொண்டு முன் வரிசையில் அமர்ந்திருக்கும் எஸ்.எஸ்.ஆர்.லிங்கம், மணியம் போன்றவர்களை பார்த்தால் வயதானவர்களாகத் தான் நமக்குத் தெரியும் ஆனால் மிகப் பெரிய சாதனையாளர்கள். புதுமைப்பித்தன் நினைவுகளை போற்றும் பொழுது தான், பேசும் பொழுது தான் மனிதனுக்குள்ளே, படைப்பாளிக்குள்ளே இருக்கின்ற ஆற்றலை நாம் புரிந்து கொள்ள முடிகிறது. புதுமைப்பித்தனை நாம் மேலும் படிக்க படிக்கத் தான் நாம் ஆழ்ந்து போகிறோம். இந்த லிங்கமும், மணியணும் 1958ம் ஆண்டிலேயே பள்ளி மாணவர்களை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு புதுமைப்பித்தன் புத்தகங்களை படிக்கக் கொடுத்து, அந்த புத்தகங்களில் இருந்து கேள்விகளை எடுத்து அந்த மாணவர்களுக்கு தேர்வு வைத்தார்கள். அந்த தேர்வுத் தாள்களை முக்கியமானவர்களிடம் கொடுத்து திருத்தி அதில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் கொடுத்தார்கள். இவ்வாறு புதுமைப்பித்தன் சிந்தனைகளை, போதனைகளை வளர்க்க பலர் போட்டி போட்டுக் கொண்டு செயல்பட்டார்கள். யாருக்கும் இந்த பாக்கியம் கிடைக்காது. ஏன் செய்கிறோம்? எதற்கு செய்கிறோம் என்பது தான் பிரச்சினை. தகுதியானவாகளை, தகுதியான நேரத்திலேயே நாம் பாராட்டினால் நாம் வளர்வோம். தகுதியில்லாதவர்களை, தகுதியில்லாத நேரத்திலேயே நாம் பாராட்டினால் நாம் வீழ்வோம். தமிழ்நாடு ஏன் வீழ்ந்து கிடக்கிறது. தகதியற்றவர்களை எல்லாம் நாம் பாராட்டுகிறோம். மேடையில் உட்கார்ந்தால் போதும் போட்டு தாக்கிடுவான். பொன்னீலனா அவனது மீசையே கவிதை பாடும் என்பான். இந்த இலக்கிய கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கும் கவிஞர் திலகபாமாவை நான் பாராட்டுகிறேன்.

தமிழை நேசிப்பவர்கள் ஒரு காலமும், ஒரு காலமும் விழ்ந்து விட மாட்டார்கள். இங்கே பேசிய ஒருவர் BoomathiyaRegaiதிலகபாமாவின் கருத்தை படித்து விட்டு, அக்கரத்தோடு வேறுபடுகிறேன் என்று சொல்லிவிட்டு அந்த அம்மா கருத்தையே சொல்லிக் கொண்டிருந்தார். யதார்த்தம் என்பது என்ன? பகவத் கீதையில் ஒரு வாசகம் வரும். அசைவில்லாதது போல, அந்த ஆற்றங்கரையில் ஓங்கி நிற்கும் அந்த அரசமரத்திற்குள்ளேயே பிரமாண்டமான மாறுதல்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. அந்த அரசமரத்திற்குள்ளே நடக்கின்ற பிரமாண்டமாறுதல்களை எவர் உணர்கிறாரோ அவர் யதார்த்தத்தை உணர்வார். காலை என்பது வேறு, மாலை என்பது வேறு என்பது தான் சத்தியம். என்பது தான் உண்மை. சமூகமும், மனிதர்களும், விலங்குகளும், மரங்களும், செடிகளும் எல்லாம் கனம் தோறும் மாறிக்கொண்டே இருக்கின்றன. மாற்றங்களை காண்பவனே ஞானி. ஞானம் என்பது ஸ்தம்பித்திருக்கின்ற இந்த பிரபஞ்சத்திற்குள்ளே கனம் தோறும் ஏற்படுகின்ற மாறுதல்களை காண்பது. இந்த மாறுதல்களை பாரதி தன்னுடைய காலத்திலேயே உணர்ந்தான். அதனால் தான் பாரதி காலத்தையும் கடந்து நிற்பதை நாம் உணர்கிறோம். காலத்தை மிஞ்சி நிற்பது என்பது காலத்தை தாண்டி நிற்பது என்று நாம் ஒப்புக் கொள்வது. ஜீவா சொல்வார்.

BoomathiyaRegaiஜீவாவை நீங்கள் ஒரு அரசியல்வாதியாகத் தான் பார்த்திருப்பீர்கள். நான் அவரை ஒரு இலக்கியவாதியாக பார்த்திருக்கிறேன். நாளை வெறிச்சோடியன, மேதியனை மேதத்தகு ஆற்றலார்ந்த சிறு துணுக்குகளை கருத்துக்களை,எவர் இலக்கியத்தில் ஆட்கொண்டு வாழ்வின் மீட்சியத்தில் உதவுவார்களோ, அவர் தான் இலக்கியவாதி. அவர் தான் யதார்த்தவாதி. அவர்களைத் தான் இலக்கிய உலகம் போற்றும். இவர்கள் இல்லை என்றால் இலக்கிய உலகம் யாரையும் அங்கீகரிக்காது. இல்லை என்று அழுபவர்கள் ஒரு வகை, இருக்கிறது என்று கூத்தாடுவது ஒரு வகை. இது சிக்கலாகிவிட்டது என்று சொல்லப்படுவது ஒரு வகை. இப்படி ஆயிரம் வகைகள் இருந்தாலும் யதார்த்தம் என்பது இன்று தொடங்கி, நாளை உலகத்தில் பரிணாமித்து, உலகளவில் போகிற புதிய தத்துவம். புதிய வாழ்க்கை முறை. புதிய பரிணாமம். இந்த பரிணாமத்திற்குத் தான் இலக்கியம் செல்கிறது. இதைத் தெளிவாகச் சொன்னவர் யார்? புதுமைப்பித்தன். சில இலக்கியம் வெளிப்படையாகப் பேசும், சிலது வெளிப்படையாகப் பேசாது. ஆனால் மனிதனுடைய வாழ்க்கையின் வளர்ச்சியை, எழுச்சியை, வீழ்ச்சியை, வீச்சை சொல்லாதது இலக்கியமே அல்ல.

ஒரு சாதாரண பெண்ணின் இலக்கியத்தை உங்களிடம் சொல்கிறேன். சில வருடங்களுக்கு முன் நான் கேட்டது. BoomathiyaRegaiஅப்படியே என் செவிகளில் இன்னும் ரிங்காரமிட்டுக்கொண்டிருக்கிறது. அதிகாலை ஒரு பெண் தனது விட்டிற்கு முன்னால் வந்து பார்க்கிறாள். ரோஜா செடி ஒன்று அருமையாக வளர்ந்து ஒரு பூ பூத்து இருக்கிறது. அதிகாலை. நல்ல பனி நேரம் அது. அந்த ரோஜா செடியில் ஆங்காங்கே பனித்துளி ஒட்டிக் கொண்டிருக்கிறது. அந்த ரோஜாவை நான் பார்த்திருந்தால் எனது பேத்திக்கு பிடிங்கிக் கொடுத்திருப்பேன். இதுவே ஒரு இளைஞன் பார்த்திருந்தால் அந்த ரோஜாவிடம் எனது காதலியின் ஒரு கண் சிமிட்டலுக்கு நீ எல்லாம் தூள், தூள் என்று சொல்லியிருப்பான். ஒரு கணவன் அந்த ரோஜாவை பார்த்திருந்தால் எனது மனைவி என்னை காலையில் எழுந்திருடா என்று சொல்வாளே, அதற்கு ஈடாகுமா உன் அழகு என்று சொல்லியிருப்பான். ஆனால் அந்த பெண் ரோஜாவைப் பார்த்து ஒரு பாட்டு பாடுகிறாள். அழகிய மலரே, இந்த அதிகாலை நேரத்திலே என்னைப் போல நீயும் கண் கலங்கி நிற்கிறாயே. வண்டு உன்னிடமும் வரதட்சனை கேட்டதோ? என்று பாடுகிறாள். பனித்துளி ரோஜாவின் இதழ்களில் இரண்டு துளி விழுந்து கிடக்கிறது. அது அந்தப் பெண்ணிற்கு கண்ணீர் போலத் தெரிகிறதாம். யார் யாருக்கு என்னென்ன இருக்கிறதோ, அது தானே தெரியும். அதனால் தான் வாழ்க்கையில் அதிகமான நம்பிக்கை தேவை இல்லை என்று புதுமைப்பித்தன் சொன்னார். புதுமைப்பித்தன் தனது படைப்புக்களில் நம்பிக்கை வறட்சியை சொல்லி இருக்கிறார். அதே சமயம் நம்பிக்கையையும் சொல்லி இருக்கிறார்.

அவருடைய கதை மகாமசானம். பயங்கரமான கதை. எது மகாமசானம்? இன்றைக்கு உருவாகி வருகின்ற நவீன நகரங்களில் இருக்கிறதே அவை மகாமசானங்கள். மனித நேயமில்லை. ரோட்டிலே ஒருவன் செத்துக் கிடக்கிறான். அவனை யாரும் கவனிப்பதில்லை. ஒரு காக்கை இறந்தால் மற்ற காக்கைகள் எப்படி ஒன்று கூடி கத்துகின்றன. ஒரு மாடு இறந்தால் மற்ற மாடுகள் அதனைப் பார்த்து எப்படி அலறுகின்றன. ஆனால் ஒரு மனிதன், தன்னைப் போலவே பிறந்த ஒரு சக மனிதன் செத்துக் கொண்டிருந்தால் யாரும் பார்க்காமல், மனச்சாட்சியில்லாமல் இருக்கிறான். அங்கு மனசாட்சியின் ரூபமாக புதுமைப்பித்தன் யாரை முன்வைக்கிறார்? ஒரு குழந்தையை முன் வைக்கிறார். அந்தக் குழந்தையை அவர் முன்வைப்பதற்கு காரணம் மனித இனத்தின் நம்பிக்கை. புதுமைப்பித்தன் தன்னைத் தானே எழுதுகிறார். ஜெயகாந்தன் தன்னைத் தானே படிக்கிறார்.

கவிதை என்பது வருங்காலத்தை நோக்கியது. கவிதை என்பது மானிடன் வளர்ச்சியை நோக்கியது. இலக்கியம் என்பது மக்களின் வருங்காலத்து, சகோதரத்துவமான, சமத்துவமான வாழ்வை நோக்கியது. அது இல்லாமல் இருக்க முடியாது. நான் மாணவனாக இருக்கும் பொழுது சினிவாசராகவர் அவர்களிடம் நான் செல்வேன்.என்னை 25,30 வயது நண்பர் போல பாவித்து வாங்க, வாங்க என்று அழைத்து இலக்கியத்தை பற்றிச் சொல்லிக் கொடுப்பார். புதுமைப்பித்தன் பாணியல் சொன்னால் இலக்கியம் எல்லா இடங்களிலும் நிரம்பி இருக்கிறது. புதுமைப்பித்தனின் ஒவ்வொரு சிறுகதைகளின் வரியும் ஒரு கவிதை. அவரது கதைகளில் ஒரு வரியை விட்டுவிட்டு மற்றொரு வரிகளை படிக்க முடியாது. அவரது படைப்புக்களில் அடிப்படையாக என்ன இருக்கிறது? நான் நினைக்கிறேன் இரண்டு கருத்து இருக்கிறது என்று. இந்த உலகம் கெட்டுப் போய் இருக்கிறது. திருப்தியாக இல்லை. வாழ்க்கையில் துன்பம் இருக்கிறதா? ஒவ்வொரு தனி மனிதனையும் மாற்று. உலகம் மாறிவிடும். தனிமனிதனை மாற்றி உலகத்தை மாற்றுவதற்கு பாரதி சொல்வார். தனி மனிதன் தன்னை தூய்மைப்படுத்திக் கொள்வதன் மூலம்  சமூகம் மேன்மை அடையும் என்று பாரதி சொல்வார். 
  
முதல்வராக இருந்த செல்வி ஜெயலலிதாவை எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவரை மாதிரியான சக்தி வாய்ந்த பெண்ணை நான் பார்த்ததில்லை. இப்படி ஜெயலலிதா முதல்வராக ஆகிவிட்டால் எனது மனைவி திருந்தி விடுவாளா? நான் சேரில் உட்கார்ந்து கால் மேல் கால் போட்டுக் கொண்டு எழுதிக் கொண்டிருக்கிறேன். பேப்பர் கீழே விழுந்து விடுகிறது. நான் என் மனைவியை, ஏய் இங்க வா, நான் பெண் விடுதலையைப் பற்றி எழுதிக் கொண்டிருக்கிறேன். அந்தப் பேப்பர் கீழே விழுந்துவிட்டது. அதனை எடுத்துக் கொடு என்பேன்.அவளும் மறுப்பேதும் சொல்லாமல் எடுத்துக் கொடுப்பாள். இது தான் இன்றைய நிலைமை. இந்த மாதிரியான ஒரு உலகம் இருக்கிறது. இந்த உலகத்தை மாற்றுவதற்கு சமூகத்தோடு சேர்ந்து போராட வேண்டும். சமூகமே ஒன்று சேர், சமூகமே போராடு என்று ஒரு வகை இருக்கிறது. சமூகத்தை சேர்த்தால் ஒன்றும் செய்ய முடியாது. சமூகமே ஒன்று சேராதே, தனி மனிதனை முதலில் மாற்ற வேண்டும் என்று ஒரு வகை இருக்கிறது. இந்த இரண்டு பாதைகளிலும் ஒரு மோகம் இருக்கிறது. இதில் புதுமைப்பித்தன் எந்தப் பக்கம் நிற்கிறார். அவர் தனி மனிதனை குற்றம் சொல்லாதீர், தனி நபர்களை குறை சொல்லாதீர். சமூகத்தைப் பாரடா என்பது தான் புதுமைப்பித்தன் பார்வை. 
 
புதுமைப்பித்தனிடம் இருக்கக் கூடிய கலை என்பது, வெறும் கொள்கை, வருங்கால சிந்தனை, இதல்ல. வருங்கால சிந்தனை, வருங்கால ஆசையை, லட்சியத்தை, நம்பிக்கையை காணும் படியான, தொட்டு உணரும் படியான, நுகர்ந்து பார்க்கும் படியான படிமங்களாக மாற்றி, அதை புத்தகத்தில் தந்தால் தான் அது நம்மை பாதிக்குமே தவிர வாய் வழியே சொன்னால் பாதிக்காது. இலக்கியம் என்பது கூர்மையான ஊசி போல. அது நமது ஆன்மாவிலேயே தைத்து, அதுக்குள்ளே இருக்கும் சாரத்தை உடலிலே இறக்கி நம்மை உருமாற்றம் செய்ய வேண்டும்.

புதுமைப்பித்தன் காலத்திலேயே பாரதி பெண் விடுதலையை சொல்லி இருக்கிறார். பாரதியை நான் அதிகமாக விரும்புபவன். பாரதி பெண் விடுதலையைப் பற்றி கவிதை எழுதினாரே தவிர, தன் மனைவியை சரியாக மதித்ததில்லை. பாரதி தனது மனைவியை அடித்தார் என்று கூட நான் படித்திருக்கிறேன். பாரதிக்கு வாழ்க்கையில் தனது மனைவியை பற்றிய சிந்தனையே இல்லை. அது ஒரு குறை. ஆனால் புதுமைப்பித்தன் மனைவியை அதிகமாக நேசித்த முதல் படைப்பாளி. அவரைப் போல் மனைவியை நேசித்த படைப்பாளியை நான் பார்த்ததில்லை. மனைவிக்கு அவர் எழதிய கடிதங்களை படித்த பொழுது மனைவி மீது அவரது பிரியம் இருக்கிறதே அது பிரமாதமானது.

இலக்கியவாதி சிந்தித்து எழுதுவான். இலக்கியவாதி சிந்தித்து எழுதத் தொடங்கி விட்டால் அவன் சாமியாட்டக்காரன் மாதிரித் தான் இருப்பான். ஆண் ஆதிக்கத்தை புதுமைப்பித்தன் மாதிரி எதிர்த்தவர்கள், சாடியவர்கள், சாதித்தவர்கள் யாரும் இருக்க முடியாது. சாவவிமோசனம் கதை இருக்கிறதே என்ன மாதிரியான கதை. ஆண் பெண் சமத்துவம் வர வேண்டும் என்பதற்காக, ஆண் ஆதிக்கம் ஒழிய வேண்டும் என்பதற்காக அவரது படைப்பைப் போல் இன்னும் வரவில்லை. இனியும் வரப்போவதில்லை. அதனால் தான் நாம் மீண்டும், மீண்டும் புதுமைப்பித்தனிடம் செல்கிறோம் என்று ஆழமாக பேசினார்.

| |
oooOooo
திருமலை கோளுந்து அவர்களின் இதர படைப்புகள்.   கட்டுரை பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |