ஆகஸ்ட் 24 2006
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
திரைவிமர்சனம் : வேட்டையாடு விளையாடு
- மீனா [feedback@tamiloviam.com]
Save as PDF | Bookmark in Del.icio.us | | Printable version | URL |

எத்தனையோ தடைகளைத் தாண்டி ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுக்கிடையே வந்திருக்கும் கமல் - கெளதம் படம் வேட்டையாடு விளையாடு. கதை ஆங்கிலப்படமான Silence of the lamb இன் தழுவல் என்று இயக்குனர் கெளதமே கூறியுள்ள நிலையில் அந்தப்படத்திலிருந்து தமிழுக்குத் தகுந்தவாறு சில பல மாறுதல்களைச் செய்துள்ளார் இயக்குனர்.

Kamalநேர்மையான போலீஸ் அதிகாரி பிரகாஷ்ராஜ். ஒருநாள் அவரது செல்ல மகள் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடக்கிறார். இந்த சோகம் தாங்க இயலாமல் அமெரிக்கா செல்லும் பிரகாஷ்ராஜும் அவரது மனைவியும் அங்கே இதைப்போன்றே கொடூரமான முறையில் கொலை செய்யப்படுகிறார்கள். இந்தக் கொலைகளுக்கான காரணம் புரியாமல் திண்டாடுகிறது தமிழக காவல் துறை. இந்தக் கொலைகளுக்கான காரணத்தைக் கண்டுபிடிக்க அமெரிக்கா செல்கிறார் டெப்டி கமிஷ்னர் ராகவன் (கமல்).

நியூயார்க்கில் நடந்த சில கொலைகளுக்கும் தமிழ்நாட்டில் நடந்த பிரகாஷ்ராஜ் மகள் கொலைக்கும் சில ஒற்றுமைகள் இருப்பதைக் கண்டுபிடிக்கும் கமல் தனது தேடுதல் வேட்டையை தீவிரமாக்குகிறார். இடையே அடுத்த அறையில் தற்கொலைக்கு முயலும் ஜோதிகாவை காப்பாற்றுகிறார். கமல் தனது மனைவி இழந்ததை சொல்ல, ஜோதிகா தன் கணவன் தன்னை விவாகரத்து செய்ததை சொல்கிறார்.

ஒருகட்டத்தில் தமிழகத்திலிருந்து மருத்துவம் படிக்க வந்திருக்கும் இரண்டு மாணவர்கள்தான் நடந்த கொலைகள் அனைத்திற்கும் காரணம் என்று கமல் கண்டுபிடிக்கிறார். அவர்களை கைது செய்ய முயலும்போது அவர்கள் கமலை தாக்கிவிட்டு இந்தியாவுக்கு தப்பிவிடுகின்றனர்.

கொலைகாரர்கள் இருவரையும் தேடிக்கொண்டு சென்னைக்கு வருகிறார் கமல். தப்பிய கொலையாளிகளை பிடித்தாரா ? ஜோவுடன் சேர்ந்தாரா என்பதே படத்தின் க்ளைமாக்ஸ்.

ராகவனாகவே வாழ்கிறார் கமல். காக்கிச்சட்டையில் மீண்டும் ஒருமுறை கம்பீரமாக வருகிறார். 40+ இருப்பதாக யதார்தமாக சித்தரிக்கப்பட்டுள்ள இந்தக் கதாபாத்திரத்திற்கு கமலைத் தவிர வேறு யாராவது நடித்திருந்தால் இந்த அளவிற்கு கம்பீரத்தையும், பண்பட்ட தோற்றத்தையும், இயல்பான நடிப்பையும் காட்டியிருக்க முடியுமா என்பது சந்தேகம் தான்.

தன் சைக்கோ கணவனின் கொடுமைகளிலிருந்து விடுதலை பெற அவனை விவாகரத்து செய்யும் ஜோ kamal, jyothikaஅழுகையுடன் அறிமுகமாகிறார். கமல் திடீரென தன் காதலை ஜோவிடம் சொல்ல, அவருக்கு பதில் சொல்ல முடியாமல் ஜோ திணறும் இடத்தில் அற்புதமான நடித்திருக்கிறார். கமலின் மனைவியாக இரண்டு காட்சிகளிலும் ஒரு பாடலிலும் மட்டுமே வந்தாலும் கொடுத்த வேலையைக் கச்சிதமாக செய்துள்ளார் கமாலினி முகர்ஜி. குறைந்த நேரமே வந்தாலும் மனதில் நிறைந்து நிற்கிறார். இதே நிலைதான் பிரகாஷ்ராஜிற்கும். வில்லன்களாக வருபவர்களில் காக்க காக்க ஹீரோவின் தோழராக வருபவர் பிரமாதப்படுத்துகிறார்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் இரண்டு பாடல்கள் மனதில் நிற்கிறது. பாடல்களை விட பின்னணி இசை அருமை. ரவிவர்மனின் காமெராவும் ஆண்டனியின் எடிட்டிங் சிறப்பாக இருக்கிறது.

படத்தின் கதையில் ஏகப்பட்ட ஓட்டைகள் - தொய்வுகள். கிட்டத்தட்ட இடைவேளையின்போதே கொலைகாரன் யார் என்று கண்டுபிடித்துவிட்ட பின்பும் கதையை வளவளவென்று நகர்த்தியிருக்கும் விதம் கொஞ்சம் எரிச்சலை ஏற்படுத்துகிறது. மேலும் தன்னுடைய கதையை விலாவாரியாக வில்லன் விவரிப்பதும், கதை சொல்லி முடித்த உடனே காயம்பட்டு கமல் கிடக்கும் அறையில் தீவைத்துவிட்டு போவதும், ஏதோ பக்கத்து ஊருக்கு போவதைப்போன்று எல்லா பாதுகாப்புகளையும் மீறி சர்வசாதாரணமாக இந்தியா வருவதும், தமிழக காவல்துறை கண்ணில் டன் கணக்கில் மண்ணைத்தூவிவிட்டு தொடர்ந்து கொலைகளைச் செய்து கொண்டு போய்க்கொண்டிருப்பதும்.....

காக்க காக்க படத்தின் சாயல் இதில் நிறையத் தெரிகிறது. படத்தில் வசனங்களோடேயே லேசாக இழையோடும் நகைச்சுவையைத் தவிர வேறு நகைச்சுவை காட்சிகள் ஒன்றும் கிடையாது. முடியை முன்னால் தொங்க விட்டுக்கொண்டு மரணமில்லா பெரு வாழ்வு தரும் மருத்துவ ஆராய்சியில் ஈடுபட்டுள்ளதாக காட்டுக்கூச்சல் போடுவது ஏன் என்று தெரியவில்லை. அதைப் போலவே அவர்கள் இருவரும் ஏன் இத்தனை சைக்கோவாக மாறினார்கள் என்பதற்கான காரணத்தையும் இன்னும் தெளிவாக சொல்லியிருக்கலாம். மேலும் சைக்கோதனமான கொலைகளும் கொடூரமான கற்பழிப்புக் காட்சிகளும் கொஞ்சம் அதிர்வை ஏற்படுத்துகின்றன.

கிரைம் சப்ஜெக்ட் - நாயகன் கமல்  என்பதால் எதிர்பார்ப்புகள் அதிகம். மக்கள் எதிர்பார்ப்புகளை ஒரளவிற்கு நிறைவேற்றியுள்ளார் இயக்குனர் கெளதம். தொழில்நுட்ப ரீதியாக படம் ஓக்கே என்றாலும் கதை - திரைக்கதை அமைப்பில் நாம் இவரிடமிருந்து எதிர்பார்ப்பது இதை விட மேலாக.

| | |
oooOooo
மீனா அவர்களின் இதர படைப்புகள்.   திரைவிமர்சனம் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |