ஆகஸ்ட் 24 2006
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
கட்டுரை : காவல் தெய்வமாக ஒரு ராஜ நாகம்
- திருமலை கோளுந்து [golundhu1979@yahoo.com]
Save as PDF | Bookmark in Del.icio.us | | Printable version | URL |

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள் அடர்ந்த வனப்பகுதிகளாகவும், சாம்பல் நிற அணில்கள் நிறைந்த பகுதியாகவும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியில் நடுவே சென்பகத் தோப்பு என்ற இடத்தில் அமைந்திருக்கிறது பேச்சியம்மன் திருக்கோவில். கிராம மக்களின் காவல் தெய்வமாக இருந்து வரும் இக்கோவிலில் 15 அடி நீள அபூர்வமான ராஜ கருநாகம் வகையைச் சார்ந்த பாம்பு உள்ளே வந்து பெரும் பரபரப்பை அப்பகுதியில் ஏற்படுத்தியது. இது பற்றி விசாரித்தோம்.

KingCobraஸ்ரீவில்லிபுத்தூர் புறநகர் பகுதியில் சென்பகத் தோப்பு என்ற வனங்கள் நிறைந்த ஒரு பகுதி. இப்பகுதியில் இருக்கும் பேச்சியம்மன் கோவில் அப்பகுதி கிராம மக்களால் பெரிதும் நம்பிக்கையோடு வணங்கப்பட்டு வருகிறது. இக்கோவிலில் பூசாரியாக பணி புரியும் மாரிமுத்து பிள்ளையாகிய நான் வேலை பார்த்து வருகிறேன். எப்பொழுதும் போல அதிகாலையில் கோவிலை திறந்த எனக்கு பெரிய ஆச்சர்யம் காத்திருந்தது. கோவிலின் பிரதான சிலையான பேச்சியம்மன் சிலையின் சுமார் 15 அடி நீள பெரிய ராஜ கருநாகம் ஏறி நடனம் ஆடிக் கொண்டிருந்தது. கதவு திறக்கும் சத்தத்தைக் கேட்டதும் அப்படியே என்னைப் பார்த்து பெரிய அளவில் படம் எடுத்து ஆடியது. அனைத்தும் இறைவன் செயல் என்ற நம்பிக்கையில் அதனை வணங்கி விட்டு வெளியே வந்து பொது மக்களிடம் இதனை சொன்னேன். அந்த ராஜ கருநாகத்தைக் காண மக்கள் கூடிவிட்டனர். அதற்கு குடிப்பதற்கு பழம், பால், முட்டைகளை கொண்டு வந்து அதன் அருகே வீசி எறிந்தோம். பாலை ஒரு பாத்திரத்தில் வைத்து அதன் அருகே கம்பால் தள்ளிவிட்டோம். நாகமும் தனக்கு பக்தர்கள் அளித்ததை அவ்வப்பொழுது அருந்தியது. பக்தர்கள் பலர் அதனை வழிபட்டுச் சென்றனர். இந்தக் கோவில் நூற்றாண்டுகால வரலாற்றை உடையது. இக்கோவிலின் காவல் தெய்வமாக ஒரு ராஜ நாகம் உண்டு என்பதை எனது முன்னோர்கள் சொல்லி இருக்கிறார்கள். அதனை நாங்கள் இப்பொழுது தான் பார்த்தோம். ஒரு நாள் முமுவதும் பக்தர்களின் தரிசனத்திற்கு நாகம் வடிவில் வந்த பேச்சியம்மனை நாங்கள் யாரும் மறக்கவே முடியாது என்று சிலிர்ப்போடு சொல்கிறார்.

ஆனால் இந்த செயலை மாற்றுக் கோணத்தில் பார்ப்பதாக சொல்லும் உள்ளூர் திராவிட கழகத்தைச் சேர்ந்த மணியன், இது ஒரு தற்செயலான நிகழ்வு. இதனை இறைவனின் நேரடி தரிசனம் என்று பெரிது படுத்துவது பெரும் தவறு என்கிறார். ஸ்ரீவில்லிபுத்தூர் சென்பகத்தோப்பு பகுதியில் இருக்கும் பேச்சியம்மன் கோவில் பழமையான ஒரு கோவில் தான். அதனை நாங்கள் மறுக்கவில்லை. பெரும் தெய்வங்களுக்கு மத்தியில் இந்த சிறு தெய்வ கோவிலை பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட மக்கள் தான் அதிகமாக தரிசனம் செய்து வருகின்றனர். இக்கோவிலுக்குள் நாகம் வந்தது ஒரு சிறு சம்பவம். அதாவது அப்பாம்பு கோவிலுக்குள் வந்த நாளின் முதல் நாள்களில் கடுமையான மழை பொழிந்தது. அதனால் ஏற்பட்ட குளிரில், மழையால் அந்தப் பாம்பு தனக்கு கதகதப்பான ஒரு இடம் தேடி அலைந்திருக்கலாம். அப்படி அலைந்து வந்து இந்தக் கோவிலுக்குள் வந்திருக்கும். இது தான் நடந்தவை. அதனை பெரிது படுத்தி பாம்புக்கு பால், பழம் கொடுத்ததாகவும், அதனை அந்தப் பாம்பு குடித்தாகவும் சொல்வது எல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாத வாதம்.

மும்பையில் எப்படி கடல் நீர் இனித்த செய்தி, பிள்ளையார் பால் குடித்ததாக வந்த செய்தி எப்படி ஒரு வடிகட்டிய பொய்யோ, அதே போல் தான் கோவிலுக்குள் வந்து பாம்பு பொதுமக்களுக்கு தரிசன காட்சி கொடுத்தது என்பதுவும் பொய். பொதுவாக நமது மக்களுக்கு அவ்வப்பொழுது எதையாவது பரபரப்பாக ஒரு சம்பவத்தை செய்தியாக கொடுக்க மீடியாக்கள் திட்டம் போட்டு செயல்பட்டு வருகின்றன. அதனால் தான் கடல் நீர் இனித்த செய்தியையும், பிள்ளையார் பால் குடித்த செய்தியையும், பாம்பு தரிசன செய்தியையும் பிரதானமாக வெளியிட்டு வருகின்றன. இது மக்களை கவனத்தை திசை திருப்புகிற செய்தியாகத் தான் நாம் பார்க்க வேண்டும் என்கிறார்.

இறைவன் மீது நம்பிக்கை கொள்வது இன்று அசைக்க முடியாத ஒன்றாகிவிட்டது. அதிலும் கிராம மக்கள் அதிகமான நம்பிக்கையோடு இருக்கிறார்கள்;. ஏனெனில் இறை பயம் தான் அவர்களை ஒரு கட்டுப்பாடோடு, ஒரு ஒழுக்கத் தன்மையோடு வாழ வழி சொல்கிறது. பாரம்பரியமிக்க ஒரு கோவிலுக்குள் 15 அடி நீள பிரமாண்டமான ஒரு ராஜ கருநாகம் வந்ததை படித்த வர்க்கம், திராவிட கழகத்தினருக்கு வேண்டுமானால் பெரிதாக தெரியாமல் இருக்கலாம். ஆனால் சாதாரண மக்கள் அதனை ஒரு அழமான நிகழ்வாகவே பார்க்கிறார்கள். பாம்பைப் பார்த்து வணங்கி விட்டு, தங்களால் முடிந்த பால், பழத்தை போட்டு விட்டு செல்கிறார்கள். இதற்கு மேல் அவர்கள் ஒன்றும் செய்வதில்லை. இன்றைய காலக்கட்டத்தில் எதன் மீதாவது ஒரு நம்பிக்கை வைத்து அதற்கு பயப்பட்டு செல்ல வேண்டிய நெருக்கடி இருக்கிறது. அதற்கான ஒரு பாதையாக இறை வழிபாடு இருக்கிறது. அந்த வழிபாட்டில் கடல் நீர் இனிப்பது, பிள்ளையார் பால் குடிப்பது, நாகங்கள் வருகை பெரும் பரவசங்களை ஏற்படுத்துகிறது. இதனை நாம் ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழியே இல்லை. ஊரோடு ஒத்து வாழ் என்பது தானே இயல்புத் தன்மை. பொதுவாக பெரும் தெய்வங்களை மட்டுமே எதிர்த்து வந்த திராவிட கழகத்தினர் தற்பொழுது சிறு தெய்வ வழிபாடுகளையும் விமர்சனம் செய்வது அவர்களது தோல்வி மனப்பான்மையை காட்டுகிறது. அதே போல் இன்று திராவிட கொள்கை உயிரோடு இருக்கிறதா என்பது எனது பிரதான கேள்வி என்கிறார் கல்லூரி பேராசிரியையான  அன்னபூரணி.

பொதுவாக ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பத் தோப்பு பகுதி வனங்கள் உள்ள பகுதி தான். அப்பகுதியில் பாம்புகள் இருப்பது ஒன்றும் பெரியதல்ல. ஆனால் கோவிலுக்குள் வந்த நாகம். ராஜ கருநாகம் வகையை சேர்ந்தது. அதுவும் சுமார் 15 அடி நீள பாம்பு மழை, இரை பற்றாக்குறையால் கோவிலுக்குள் வந்திருக்கலாம். அல்லது எலி போன்ற இரையை விரட்டி வரும் பொழுது கோவிலுக்குள் வந்திருக்கலாம். இது போன்ற ராஜ நாகத்தை பார்ப்பது கடினம் தான். அதுவும் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் இது போன்ற இடங்களில் இப்பாம்பு இருப்பது ஆபத்தானது. அதனால் தான் இந்த பாம்பை பிடித்து ஏதாவது சரணாலயத்தில் விட்டு விடலாம் என திட்டம் போட்டோம். ஆனால் இப்பகுதி மக்கள் அந்தப் பாம்பை பிடிக்கக் கூடாது, அடிக்கக் கூடாது என்று சொல்லி தடுத்து விட்டனர். அந்தப் பாம்பு இரவு வரை இருந்து விட்டு, இப்பொழுது எந்தப் பக்கம் போனதோ தெரியவில்லை என்று கவலையோடு பேசுகிறார் வனத் துறையை சேர்ந்த முக்கிய அதிகாரியான ஒருவர்.

|
oooOooo
திருமலை கோளுந்து அவர்களின் இதர படைப்புகள்.   கட்டுரை பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |