Tamiloviam
செப் 04 2008
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
சிறுகதை : மாற்று
- நிலா
  Printable version | URL |

"ஏம்மா, வேற வழியே இல்லையா? அண்ணா யுனிவர்சிடில எம்.சி.ஏ கிடைக்கறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா?" ஆனந்தி ஏமாற்றமாய்க் கேட்டாள்

"எனக்கு மட்டும் உன்னைப் படிக்க வைக்கணும்னு ஆசையில்லையா, ஆனந்தி? வருஷத்துக்கு ஒரு லட்சம் ஆகும்னு சொல்றாங்க. நான் எங்க போவேன் சொல்லு" பூமதி மகளிடம் வருத்தத்தோடு சொன்னாள்

ஆனந்தியின் முகம் இருண்டது. "பி.எஸ்.ஸில கோல்ட் மடல் வாங்கிருக்கேன். எனக்கு வந்த கதியைப் பாருங்க" குரல் தழுதழுத்தது.

இருபத்தைந்து வயதில் கணவரை ஒரு விபத்தில் இழந்தபின் தன்னையும் தன் தம்பியையும் தனி ஆளாய் சமையல் வேலை செய்து வளர்த்த தன் தாயின் சிரமம் ஆனந்திக்குப் புர்¢யாமலில்லை. ஆனால் தான் மட்டும் எம்.சி.ஏ. முடித்துவிட்டால் ஒட்டு மொத்த குடும்பத்தின் தலை எழுத்தே மாறிவிடுமே என்ற ஆதங்கமும், தன் அறிவுக்கும் திறமைக்கும் தகுதியான வாய்ப்பை இழக்க நேரிடுகிறதே என்ற ஏமாற்றமும் அவளை அலைக்கழிக்கின்றன.

"ஏம்மா, சண்முகம் சித்தப்பா பெரிய பணக்காரர்தானே, அவர்கிட்ட உதவி கேட்டுப் பாக்கட்டா?"

பூமதிக்கு அந்த யோசனை உசிதமாகப் படவில்லை. "சொந்தக்காரங்க கிட்ட உதவி கேட்டுப் போறது அவ்வளவு நல்லதாப் படலை, ஆனந்தி."

ஆனந்தி அம்மாவின் ஆட்சேபனையைப் பொருட்படுத்தவில்லை. அவளுடைய இலக்கு மேற்படிப்பில்தானிருந்தது. அப்பாவின் ஒன்றுவிட்ட தம்பிதான் இந்த சண்முகம். குடும்ப விழாக்களில் அவ்வப்போது பார்த்திருக்கிறாள். கஷ்டப்பட்ட குடும்பத்திலிருந்து படித்து முன்னேறியவர் என்பதால் அவருக்குத் தன் நிலைமை புரியும் என்ற நம்பிக்கை இருந்தது.

உறவுக்காரர்களிடம் அவரது மொபைல் எண்ணைப் பெற்று அவரை அழைத்து, "சித்தப்பா, நான் ஆனந்தி பேசறேன் - பூமதி அவங்களோட மக" என்ற போது சண்முகம் மறுமுனையில் திகைப்பது புரிந்தது.

"எப்படிம்மா இருக்க?" சுதாரித்து சம்பிரதாயமான கேள்வியை வீசினார் சண்முகம்

"நல்லாருக்கேன், சித்தப்பா. பி.எஸ்.ஸில கோல்ட் மடல் வாங்கிருக்கேன். அண்ணா யுனிவர்சிடில எம்.சி.ஏ கிடைச்சிருக்கு."

"வெரி குட்... கங்கிராஜுலேஷன்ஸ்"

"அது விஷயமா உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்..." என இழுத்தாள்

"ஓ..." சில விநாடிகள் யோசித்தவர், "என்னை ஆ•பீஸ்ல வந்து பாக்கமுடியுமா?" என்று கேட்டுவிட்டு விபரங்கள் தந்தார்.

'ஷன் பிக்ஸல்ஸ்' என்ற அவரின் கணினி நிறுவனம் சிறியதாய் இருந்தாலும் அழகாய் அலங்கரிக்கப் பட்டிருந்ததில் செல்வச் செழிப்பு தெரிந்தது. அங்கே வேலை செய்தவர்களின் ஆங்கில அறிவும் தன்னம்பிக்கையும் அவளுக்குள் ஒரு தாழ்வு மனப்பான்மையைத் தோற்றுவித்தன. சண்முகத்தின் அறைக்குள் அழைக்கப்பட்ட போது ஆனந்திக்கு அவரிடம் எப்படி விஷயத்தை ஆரம்பிப்பது என்ற தயக்கம் இருந்தது.

"சொல்லும்மா... நான் உனக்கு எப்படி உதவி செய்யமுடியும்?" என்று நேரடியாக விஷயத்துக்கு வந்தார் சண்முகம்.

"வருஷத்துக்கு ஹாஸ்டல் •பீஸோட சேத்து ஒரு லட்சமாகும் போலருக்கு, சித்தப்பா. அம்மாவால முடியாது. அதான் உங்ககிட்ட உதவி கேக்கலாம்னு..."

"ம்ம்ம்" என்று யோசனையாய் நெற்றியைத் தேய்த்தார். அவரையே டென்ஷனாய்ப் பார்த்துக் கொண்டிருந்தாள் ஆனந்தி

"உனக்கு ஏம்மா நான் உதவி செய்யணும்?"

இப்படிக் கேட்பாரென அவள் எதிர்பார்த்திருக்கவில்லை. அம்மா சொன்னது சரிதான். அவமானத்தில் முகம் சிவந்தது.

"ஸாரி, சித்தப்பா" என்றவாறு தடுமாறி எழுந்தாள்

"ஏன் எழுந்திட்டே? ஒரு கேள்விதானேம்மா கேட்டேன்? பதில் சொல்லாம கிளம்பறது சரியா?"

ஆனந்திக்கு அவர் என்ன எதிர்பார்க்கிறார் என்று புரியாமல் குழப்பமாக இருந்தது.

"கடனாக் குடுத்தா போதும் சித்தப்பா. நான் வேலைக்குப் போனதும் எல்லாத்தையும் திருப்பிக் கொடுத்திடறேன்"

"எதை நம்பி உனக்குக் கடன் கொடுக்கிறது, ஆனந்தி?" தேள் கொட்டியது போல நிமிர்ந்தாள் ஆனந்தி.

சண்முகம் தொடர்ந்து, "என் பிள்ளைகளைப் பாத்துக்கறதுக்கு ஆள் தேடிக்கிட்டிருக்கேன். நீ ஏன் அந்த வேலையை எடுத்துக்கக் கூடாது?" என்றார்

'பணம் கேட்கிறோம் என்பதற்காக ஆயா வேலை பார்க்கச் சொல்கிறார், மனிதர்!' சுருக்கென எழுந்த கோபத்தைக் கஷ்டப்பட்டு அடக்கியது அவருக்குப் புரிந்திருக்க வேண்டும்.

"குழந்தைகளைப் பாத்துக்கறது அவ்வளவு கேவலமான வேலையாம்மா, ஆனந்தி?"

"அப்படி, இல்லை சித்தப்பா. எனக்கு மேல படிக்கணும்" சுயபச்சாதாபத்தில் கண் கலங்கியது

"நான் படிக்க வேண்டாம்னு சொல்லலையே?"

"படிச்சிக்கிட்டே எப்படி சித்தப்பா வேலை பாக்க முடியும்?"

"அமெரிக்கவில எல்லாம் பசங்க 15 வயசிலேயே வேலைக்குப் போகுது தெரியுமா?"

"அங்க சிலபஸ் கம்மியா இருக்குமா இருக்கும்" ரோஷத்தோடு கூறினாள்

சண்முகம் பெரிதாகச் சிரித்தார். "என்னை அவ்வளவு விபரம் தெரியாதவன்னு நினைச்சியா, ஆனந்தி? யுஎஸ்ல பன்னெண்டு வருஷம் இருந்திருக்கேன். இங்கே யுனிவர்சிடில கெஸ்ட் லெக்சர் கொடுக்கிறேன். காம்பஸ் இன்டர்வியூ போறேன். எனக்கும் ஓரளவு தெரியும்மா காலேஜ் படிப்புப் பற்றி"

ஆனாலும் ஆனந்திக்கு சமாதானமாகவில்லை. "நான் +2 வரைக்கும் தமிழ் மீடியத்தில படிச்சேன், சித்தப்பா. நான் மற்றவங்களை விடக் கஷ்டப்பட்டுப் படிக்கணும்"

"நானும் தமிழ் மீடியம்தான். இதே அண்ணா யுனிவர்சிடிதான்" என்றவர் தொடர்ந்து, "உனக்கு வேலை பாக்கக் கஷ்டமா இருக்கோன்னு எனக்கு சந்தேகமா இருக்கு" என்றார்

ஆனந்தியின் தன்மானம் தாக்கப்பட, தானாகக் குரலுயர்ந்தது. "நான் வேலைக்கெல்லாம் பயப்படறவ இல்லை"

"அப்புறம் ஏன் நான் கொடுக்கத் தயாரா இருக்கற வேலையோட விபரத்தைக் கூடக் கேக்க மாட்டேங்கறே?"

ஆனந்தி தலையைக் குனிந்து கொண்டாள்

"எங்க அப்பாவும் அம்மாவும் விவசாயக் கூலி. நான் எப்படிப் படிச்சேன்னு நினைக்கறே? காலேஜ் படிக்கும்போது வீக் எண்ட்ல பெட்ரோல் பங்க்ல வேலை பார்த்தேன்; வார நாட்கள்ல காம்பஸ் உள்ளயே இருந்த ஜெராக்ஸ் கடையில ஹெல்பரா இருந்தேன். ஆனாலும் 80% மார்க் வாங்கினேன். என் படிப்பு நான் சம்பாதிச்சது. அதனால்தான் அது மேல எனக்கு மதிப்பிருக்கு. மனமிருந்தா மார்க்கமுண்டு ஆனந்தி. அப்புறம் உன் இஷ்டம்"

அவர் அவ்வளவு சொன்ன பின்னும் வேலை பற்றிய விபரம் கேட்காமலிருப்பது மரியாதையாக இருக்காது என எண்ணியவளாய், "பகல்ல நான் காலேஜ் போயிட்டேன்னா பசங்களை யார் பாத்துக்குவாங்க, சித்தப்பா?"

"மூத்தவளுக்கு 6 வயசாகுது. சின்னவனுக்கு நாலு. ரெண்டு பேரும் ஸ்கூல் போறாங்க. சித்தி பி.எச்.டி பண்றா. பசங்களைக் கிளப்பி, ஸ்கூல்ல கொண்டு போய் விட்டுட்டுக் கூட்டிட்டு வர்றதுக்கு ஒரு லேடி இருக்காங்க. ஆனா சாயந்தரம் அவங்களை ஹோம் வொர்க் செய்ய வைச்சு சாப்பிட வைச்சு தூங்க வைக்கணும். சித்தி இருந்தா அவ ஹெல்ப் பண்ணுவா. ஆனா நாங்க ரெண்டு பேருமே எப்ப வருவோம்னு சொல்ல முடியாது. நார்மலா சித்தி சமையல் செஞ்சு ஃப்ரிஜ்ஜில வைச்சிருவா. ஆனா அதிலயும் கொஞ்சம் ஹெல்ப் தேவைப்படும்"

'ம்ஹ¤ம்... சமையல் வேலை வேறு செய்யணுமா?' என மனதுக்குள் கறுவிக்கொண்டு, "நான் அம்மாகிட்டே கேட்டுட்டு சொல்றேன், சித்தப்பா" என்று சாக்கு சொன்னாள்

"மாதம் நாலாயிரம் ரூபாய் சம்பளம் தர்றேன். வீட்ல தங்றதுனால ஹாஸ்டல் செலவு இல்லை. இதை வைச்சு நீ தாராளமா காலேஜ் •பீஸ் கட்டலாம். அம்மாகிட்ட எடுத்துச் சொல்லு"

'இந்த வேலைக்கு நாலாயிரம் ரூபாயா' என கண நேரம் மனதுக்குள் வியந்தவளுக்கு ஒரு சந்தேகம் வந்தது.

"இந்த சம்பளம் கொடுத்தா எவ்வளவோ பேர் வருவாங்களே, சித்தப்பா... எதுக்கு எனக்குத் தர்றீங்க?"

"புத்திசாலித்தனமான கேள்வி. ஐ லைக் இட். நாங்க இல்லாதப்ப பசங்களைப் பொறுப்பா பாத்துக்கணும். என்னதான் சம்பளம் கொடுத்தாலும் அடுத்தவங்களைவிட சொந்தக்காரங்க நல்லா பாத்துக்குவாங்கன்னு நம்பிக்கைதான்"

அவர் சொன்ன காரணம் அவளுக்குச் சரியென்றே பட்டது. ஊருக்குப் போய் ஆலோசித்துச் சொல்வதாக சொல்லிவிட்டெழுந்து கொண்டதும், "இந்த உலகத்திலே இலவசம்னு ஒண்ணுமேயில்லை. அதை நல்லா ஞாபகம் வைச்சுக்கோ, ஆனந்தி. ஒருத்தர் உனக்கு ஏதாவது இலவசமா தர்றாருன்னா அவருக்கு அதில ஏதாவதொரு ஆதாயம் இருக்கும். யோசிச்சு செய்" என்று கூறி அனுப்பி வைத்தார் சண்முகம்

பூமதி கேள்வி ஏதும் கேட்கவில்லை. ஆனந்தியின் முகத்தைப் பார்த்ததுமே புரிந்துவிட்டது. 'வேண்டாமென்று சொன்னால் கேட்டாதானே!'

"அந்தாள் என்னை ஆயா வேலை பாக்கச் சொல்றாரும்மா" ஆனந்தி கோபமாகச் சொன்னாள். பூமதி பதிலேதும் சொல்லாமல் தன் வேலையைத் தொடர்ந்தாள். சொன்ன பேச்சைக் கேட்காமல் தண்டமாய் ஐநூறு ரூபாய் செலவு வைத்துவிட்டாளென்ற ஆதங்கம் அவளுக்கு. தாயின் மௌனத்தைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்தாள் ஆனந்தி:

"பிள்ளைங்களைப் பாத்துக்கணுமாம். அவருக்கும் அவர் பொண்டாட்டிக்கும் நேரமில்லையாம். அவர் வீட்லயே தங்கிக்கலாம். நாலாயிரம் ரூபாய் சம்பளம் தர்றதா சொல்றார். பணம் குடுத்தா என்ன வேணும்னாலும் செய்வேன்னு நினைச்சுட்டார் போலிருக்கு" சினத்தில் தேவைய்¢ல்லாத சிந்தனைகளெல்லாம் தோன்றி வார்த்தைகளாகக் கொட்டின

"ஆயா வேலைக்கு நாலாயிரமா? இந்த ஊருலன்னா நானே போயிருப்பேன்" பூமதி அதிசயத்தில் வாய் பிளந்தாள்

"அதுவும் முழு நேரம் கூட இல்லைம்மா. அவர் வீட்ல தங்கி காலேஜுக்குப் போகலாமாம். சாயங்காலம் மட்டும் பாத்துக்கிறதுக்கே இவ்வளவு பணம். அப்ப எவ்வளவு பணம் வச்சிருப்பாங்க! ஆனா படிப்புக்குப் பணம் கொடுக்கறதுக்கு மனசில்லை, பாருங்க" வெறுப்புடன் சொன்னாள் ஆனந்தி

"வீட்ல தங்கிக்கிட்டு காலேஜுக்குப் போகலாம்னா சொன்னாரு?" பூமதி சண்முகத்தின் யோசனையை ஆராயலானாள்

"ஆமாம்மா... ஹாஸ்டல் •பீஸ் இல்லை, நான் குடுக்கற சம்பளத்தில நீ காலேஜ் •பீஸ் கட்டிறலாம்- அது இதுன்னு ஆசை காட்றாரு. வேலைக்கு வேற ஆளே கிடைக்கலை போலருக்கு"

"நீ அவங்க வீட்லருந்து படிச்சா பாதுகாப்பாத்தானிருக்கும்" பூமதிக்கு சண்முகம் சொன்னதில் தவறேதும் இருப்பதாய்த் தோன்றவில்லை. மகளின் கோபம் அதிகபட்சமாகத் தெரிகிறது அவளுக்கு

"விட்டா நீங்களே போய் அங்க வேலைக்குச் சேத்துவிட்ருவீங்க போலருக்கு? உங்களுக்கு பாரமா இருந்தா சொல்லிருங்க. நான் எங்கேயாவது போய் பிழைச்சுக்கறேன்" ஆனந்தி பொரிந்து தள்ளினாள்.

வங்கி மேலாளரைப் பார்ப்பதற்கு பல முறை நடக்க வேண்டியிருந்தது. கடைசியாக அவரது அலுவலக அறையில் அவரெதில் அமர்ந்திருந்தபோது ஊரிலிருந்த சாமிகள் அனைத்திற்கும் ஆனந்தி ஏகப்பட்ட வேண்டுதல்களைச் செய்திருந்தாள்.

"எதை நம்பிம்மா உனக்குக் கடன் கொடுக்கறது?"

மறுபடியும் அதே கேள்வி.

"நாலு லட்சம் வரைக்கும் உத்தரவாதம் எதுவும் தேவையில்லைன்னு பேப்பர்ல படிச்சேனே, சார்" தயங்கிச் சொன்னவளை தடிமனான மூக்குக் கண்ணாடி வழியே பார்வையை தழைத்துப் பார்த்தார் மேலாளர். அவளது புத்திசாலித்தனம் அவரைக் கவர்ந்தாலும்,

"அதெல்லாம் பேப்பர்ல போடறதுக்கு நல்லாருக்கும்மா. நடைமுறைக்கு சரிவராது. நான் உனக்கு லோன் சாங்ஷன் பண்றேன்னே வச்சிக்குவோம். நீ பாட்டுக்கு படிப்பு முடிஞ்சதும் கல்யாணம் பண்ணிக்கிட்டுப் போயிட்டேன்னா எனக்கில்ல தலைவலி?" என்று யதார்த்தம் பேசினார்.

"அப்படியெல்லாம் போக மாட்டேன், சார். நான் வேலைக்கு வந்துதான் குடும்பத்தைப் பாக்கணும்; தம்பியைப் படிக்க வைக்கணும்" ஆனந்தி பொறுப்பாகப் பதில் சொன்னாலும் மேலாளர் சமாதானமாகாதது அவர் முகக்குறிப்பில் தெளிவாகத் தெரிந்தது.

"எனக்கு உதவி செய்ய விருப்பம்தான்மா. ஆனா..." நெற்றியைப் பரபரவென்று தேய்த்தவர்,

"சரி, ஒண்ணு செய்யேன், எம்.எல்.ஏகிட்டருந்து ஒரு ரெகமண்டேஷன் லெட்டர் வாங்கிட்டு வாயேன். நீ லோனைத் திரும்பக் கட்டலைன்னா பழி அவர் மேல போயிரும்" என்ற யோசனையை வழங்கினார்

எம்.எல்.ஏ வைகை வேந்தன் அவளது விண்ணப்பத்தை அக்கறையோடு கேட்டார்.

"நம்ம தொகுதில ஒரு பொண்ணு இவ்வளவு நல்லா படிக்கறது பெருமையா இருக்கும்மா. உன்னை மாதிரி தகுதியானவங்களுக்கு உதவி செய்யறதுக்குதான் நம்ம கட்சி இருக்கு, தலைவர் இருக்காரு" என உணர்ச்சிவசப்பட்டார்

ஆனந்திக்கு ஆறுதலாக இருந்தது. 'இவர் ஒருவராவது புரிந்து கொண்டாரே!'

"ரொம்ப நன்றி, சார். ஒரு லெட்டர் கொடுத்தீங்கன்னா பாங்க் மானேஜர் லோன் தர்றதா சொன்னாரு சார்" பணிவாகக் கேட்டாள்

"லோனெல்லாம் எதுக்கும்மா. கட்சி நிதிலருந்து உனக்கு அம்பதாயிரம் தர ஏற்பாடு செய்றேன்" பெருமிதத்தோடு சொன்னார் எம்.எல்.ஏ

ஆனந்தி அவரது பெருந்தன்மையை மனதுக்குள் மெச்சிக் கொண்டாள். "ரொம்ப நன்றி, சார். ஆனா லெட்டர் போதும், சார். பணம் வேண்டாம்" என்றாள்

"கட்சி கொடுக்கற பணத்தை வேண்டாம்னு சொல்லாதம்மா... வாங்கிக்க. அப்புறம் மத்ததெல்லாம் பாக்கலாம்." அவரது குரலில் சற்று கடுமை இருந்தது இம்முறை.

நன்றி சொல்லிவிட்டு வெளியேறினாள். மனம் துவண்டிருந்தது. ஐம்பதாயிரத்தில் ஒரு செமஸ்டரை ஓட்டலாம். அதன் பின்பு மீண்டும் இப்படித்தானே யாரிடமாவது போய் நிற்கவேண்டும்?

அடுத்த நாள் எம்.எல்.ஏ ஆளனுப்பி வரச் சொன்னார். மகளைத் தனியே அனுப்ப விருப்பமில்லாமல் பூமதியும் உடன் சென்றாள்.

"இந்த சனிக்கிழமை தலைவர் கலந்துக்கிற கூட்டத்தில உனக்கு நிதி தர்றதா முடிவு செஞ்சிருக்கோம்மா, ஆனந்தி. சந்தோஷம்தானே?"

ஆனந்தி அரைகுறையாய்த் தலையாட்டினாள்

"நிதி வாங்கிட்டு தலைவர் கால்ல கண்டிப்பா விழணும், தெரியுதா? அப்புறம் ஒரு ரெண்டு நிமிஷம் தலைவரையும் கட்சியையும் பற்றிப் பேசணும். நல்லா உருக்கமா இருக்கணும், தெரியுதா?" சற்று அதட்டலாய்ச் சொன்னார் வைகை வேந்தன்

இம்முறை ஆனந்திக்குக் கண் கலங்கியது. 'இந்த ஐம்பதாயிரம் என் நடிப்புக்கு இவர்கள் தரும் சன்மானம்!'

சித்தப்பா சொன்னது நினைவுக்கு வந்தது. 'இந்த உலகத்திலே இலவசம்னு ஒண்ணுமேயில்லை'

அடுத்த நாள் காலை பழைய பெட்டி ஒன்றுடன் சண்முகத்தின் அலுவலகத்துக்குள் நுழைந்தவளை சற்று விநோதமாகப் பார்த்த ரிசப்ஷனிஸ்ட், "மே ஐ ஹெல்ப் யூ?" என்றாள் இயந்திரத்தனமாய்.

"சண்முகம் சார் வீட்ல வேலையில சேர வந்திருக்கேன், மேடம்" என்றாள் ஆனந்தி பணிவாக.

oooOooo
                         
 
நிலா அவர்களின் இதர படைப்புகள்.   சிறுகதை பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2008 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |