கலைப்புலி எஸ்.தாணுவின் பிரம்மாண்டமான தயாரிப்பில் சுசிகணேசனின் இயக்கத்தில் விக்ரமின் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளிவந்துள்ள படம் 'கந்தசாமி'. சுவிஸ் வங்கியில் பதுக்கி வைத்துள்ள இந்தியர்களின் கருப்புப்பணத்தை வெளியில் கொண்டு வந்தாலே போதும்,பாமர மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து ஏழை-பணக்காரன் என்ற பாகுபாடு இல்லாமல் செய்து விடலாம் என்ற செய்திதாள்களை அலங்கரிக்கும் சமீபகாலச் செய்தியே கதைக்கரு.ஒரு புறம் கருப்புபண்த்தைப் பதுக்கி வைக்கும் பணக்கார வர்க்கம் இன்னொரு புறம் அன்றாட பிழைப்பிற்கே அல்லாடும் ஏழை வர்க்கம்,அடுத்தவர்களை ஏமாற்றி சம்பாதிக்கும் பணமுதலைகளிடமிருந்து பணத்தைப் பிடுங்கி அப்பாவி மக்களின் தேவைகளுக்குப் பணம் கொடுத்து உதவும் சூப்பர் ஹீரோவின் கதை தான் கந்தசாமி. வசதி படைத்தவர்கள் ஒரு கிராமத்தையோ,ஒரு குடும்பத்தையோ தத்தெடுக்கலாம். ஒன்றும் முடியவில்லையென்றால் கஷ்டப்படும் ஒருவருக்கு நம்மால் முடிந்த உதவிகளைச் செய்தாலே போதும் என்பது படம் உணர்த்தும் நல்ல செய்தி.
சிபிஐ அதிகாரியான விக்ரம் தன் அதிகாரபலத்தினாலும் ஆள்பலத்தினாலும் அநியாய வழியில் பணம் சேர்க்கும் பணக்காரர்களிடமிருந்து பணத்தைப் பிடுங்கி ஏழைகளுக்கு வழங்கும் ராபின்ஹூட்.சென்னையில் வசிக்கும் ஏழை மக்கள் தங்கள் பிரச்சினைகளைத் துண்டுச் சீட்டில் எழுதி கந்தசாமி கோவில் மரத்தில் கட்டி விடுகிறார்கள். அவர்களது கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டு பிரச்சினைகள் நிவர்த்தி செய்யப்படுகின்றன. பிரச்சினை தீர்ந்தவர்கள் கடவுள் கந்தசாமியே தங்கள் குறைகளைத் தீர்த்தவர் என்று நம்புகிறார்கள்.இவற்றைச் செய்தது 'சாமியா? ஆசாமியா?'என்ற பின்னணியைக் கண்டுபிடிக்க வருகிறார் போலீஸ் அதிகாரி பிரபு.
கருப்புப்பணமுதலைகளுக்கு எமனாகவும் ஏழைகளுக்குக் கடவுளாகவும் மிளிரும் விக்ரம் ஒரு சமயம் பணக்காரர் ஆசிஷ் வித்யார்த்தியின் வீட்டிற்கு ரெய்டிற்குச் சென்று சொத்து விவரங்களைக் கண்டறிகிறார். இந்த அதிர்ச்சியில் ஆசிஷ்ஷிற்குப் பக்கவாதம் வந்து விடுகிறது. இதைக் கேள்விப்படும் அவரது மகள் ஸ்ரேயா விக்ரமைத் தன் காதல் வலையில் விழ்த்திப் பழிவாங்கத் துடிக்கிறார் ஆனால் விக்ரம் ஸ்ரேயாவின் எண்ணத்தை உணர்ந்து விலகியே செல்கிறார். விடாமல் துரத்தும் ஸ்ரேயா ஒரு கட்டத்தில் விக்ரம் மேல் உண்மையாகவே காதல் கொள்ள விக்ரம் அவரை ஏற்றுக் கொண்டாரா? விக்ரமின் அவதாரம் எதற்காக? விக்ரமின் லட்சியம் நிறைவேறியதா? என்ற பல கேள்விகளுக்குப் படத்தின் இறுதியில் விடை கிடைக்கிறது.
தேசிய விருது நாயகனின் நடிப்புபசிக்கு அசத்தலான தீனி. விக்ரம் இந்தத் திரைப்படத்திற்காகக் கடுமையாகப் பயிற்சி எடுத்திருக்கிறார் என்பது படத்தைப் பார்த்தாலே தெரிகிறது. ஏழைப்பெண்ணின் பணத்தை அபகரிக்கும் மன்சூரலிகானுடன் விக்ரம் சேவல் உடையில் பறந்து பறந்து அடிக்கும் காட்சியும் அதன் பின்னணி இசையும் சும்மா அதிருதுல்ல என்பது போன்ற அசத்தலான ஆரம்பம். ஸ்ரேயாவிடம் காதல் களியாட்டங்கள் நடத்துவதிலும் சரி,வில்லன்களைப் புரட்டி எடுப்பதிலும் சரி,ஐஸ்வர்யாராய் போல் பெண் வேடமிட்டு ஆடுவதிலும் சரி மனிதர் கலக்குகிறார். மற்ற படங்களின் கதாப்பாத்திரச்சாயல் சிறிதுமில்லாமல் தன் உடல்மொழி,கண்கள்,ஆக்ஷன், நடிப்பு என்று பலவிதப் பரிமாணங்களில் அசத்துகிறார் சீயான் விக்ரம். ஸ்ரேயாவின் கவர்ச்சியும் படத்தின் பலம். பாடல்கள் வந்து விட்டால் போதும் ஸ்ரேயா கவர்ச்சியாக வளைந்து நெளிந்து ஆடத் தொடங்கி விடுகிறார். அவர் உடுத்தியிருக்கும் உடைகள் எந்த நேரத்தில் அவிழ்ந்து விடுமோ என்று பயமாக இருக்கிறது. குறிப்பாக,'மியாவ் மியாவ் பூனை' பாடலைக் கூறலாம்.ஸ்ரேயா விக்ரமைப் பார்த்து 'போடா' என்று உச்சரிக்கும் போது அவரது உதடுகளும் கண்களும் சேர்ந்து நடித்திருக்கின்றன. கவர்ச்சிப்பதுமையாக மட்டும் வந்து போகாமல் நடிக்கவும் செய்திருக்கிறார் என்பது ஆறுதல்.தேங்காய்க்கடை தேனப்பனாக ஓரிரு காட்சிகளில் வந்தாலும் வடிவேலு வெடிவேலுவாய்த் திரையரங்கை அதிரச் செய்கிறார். போலீஸ் அதிகாரியாக பிரபு கனக்கச்சிதம். இவர் சிரித்துக் கொண்டே கந்தசாமியைத் தேடும் விதம் அழகு. 'போக்கிரி' வில்லன் முகேஷ் திவாரியில் வில்லத்தனம் ரசிக்கத்தகுந்தது. ஆசிஷ் வித்யார்த்தியின் வில்லத்தனத்தில் எந்த மாற்றமும் இல்லை. வை.ஜி.மகேந்திரன்,தெலுங்கு நடிகர் கிருஷ்ணா,மன்சூரலிகான்,வினோத்ராஜ் ஆகியோரும் தங்கள் பங்களிப்பைச் செவ்வனே செய்துள்ளனர். இயக்குனர் சுசிகணேசனும் சில காட்சிகளில் வந்து போகிறார்.
ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவு அற்புதம். பாடல் காட்சிகளும் படமாக்கப்பட்ட இடங்களும் அவ்வளவு அழகு. தேவிஸ்ரீபிரசாத்தின் இசை அமர்க்களம். 'மேங்கோ மாமியா''மியாவ் மியாவ் பூனை','எக்ஸ்கியூஸ்மீ','பம்பரக்கண்ணாலே','அலேக்கா' என்ற அனைத்துப் பாடல்களையும் மீண்டும் மீண்டும் கேட்டு ரசிக்கலாம். பேருந்திற்குள் ஒரு பாடல்,குளியலறையில் ஒரு பாடல்,மெக்ஸிகோவில் ஒரு பாடல் என்று ஒவ்வொரு பாடலுக்கும் ஒவ்வொரு லொகேஷன். வசனங்களும் பளிச். ஜெண்டில்மேன்,அந்நியன்,சிவாஜி,ரமணா போன்ற எத்தனையோ படங்கள் தொட்ட கதை தான். இருந்தாலும் படம் வலியுறுத்தும் செய்தியும் ஒளிப்பதிவும் இசையும் சுசிகணேசனின் இயக்கமும் படத்துடன் கட்டிப் போடுகின்றன. சுசிகணேசனின் கற்பனைக்கும் இயக்கத்திற்கும் தோள் கொடுத்த எஸ்.தாணுவைப் பாராட்டியே ஆக வேண்டும். இவர் பணத்தை வாரி இறைத்து படத்தை ஆடம்பரமாக இழைத்துள்ளார்.
படத்தின் தொடக்கத்திலிருந்து இறுதி வரை எந்த சஸ்பென்ஸோ பரபரப்போ இல்லாததும் சில இடங்களின் லாஜிக் மீறல்களும் படத்தின் மிகப்பெரிய குறைகள். மேலும்,படத்தைப் பார்க்கும் போது ஏழைகளுக்குப் பண உதவிகள் செய்வது அவர்களைச் சோம்பேறியாக்காதா? மீன் பிடித்துத் தருவதை விட மீன் பிடிக்கக் கற்றுத் தருவதல்லவா சிறந்தது என்ற நியாயமான கேள்விகள் எழாமல் இல்லை. ஒவ்வொரு காட்சியையும் அவ்வளவு நீளமாகப் படம் பிடித்திருக்கத் தேவையில்லை. நறுக்கென்று சுருங்கச் சொல்லி விளங்க வைத்திருக்க வேண்டிய விஷயத்தை மூன்றேகால் மணி நேரம் இழுத்திருப்பதும் படத்திற்குப் பின்னடைவே. படம் முடிந்து வெளியில் வரும் போது பைவ் ஸ்டார் ஹோட்டலுக்குச் சென்று உண்டும் வயிறு நிறையாதது போன்ற ஒரு உணர்வும் திருப்தியின்மையும் உண்டாவதை மறுக்க முடியவில்லை. சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படம் என்பதோடு மட்டுமின்றி படம் வலியுறுத்தும் செய்திக்காகவும் படத்தை எடுத்த விதத்திற்காகவும் பார்க்கலாம். பாராட்டலாம். கந்தசாமி அனைத்துத்தரப்பு இதயங்களையும் வெல்லும் சாமி.
|