இந்தக் கூட்டணி வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் அதிகமான இடங்களை கைப்பற்றி தி.முக.விற்கு ஒரு மரண அடியைக் கொடுக்கும்.
ம..தி.மு.க. கட்சியின் மாநில கொள்கை விளக்க அணிச் செயலாளர் நாஞ்சில் சம்பத். தடையற்ற, தடங்கலற்ற பேச்சுக்கு சொந்தக்காரர். இவரது பேச்சைக் கேட்பதற்கு பிற கட்சியினரிடையேயும் அதிக ஆர்வம் உண்டு. வார்த்தைகளை தகுந்த இடத்தில் ஏற்றி, இறக்கி பேசுகின்ற இவரது பேச்சை கேட்கும் அனைவரையும் கட்டிப் போடும் பேச்சாளர். கடந்த 13 ஆண்டுகளாக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வை.கோ.விற்கு வலது கரமாக இருந்து வருபவர். கட்சியின் 13ம் ஆண்டு விழாவை முன்னிட்டு தென்மாவட்டங்களில் பொதுக் கூட்டங்களில் பேசி வரும் இவரிடம் பேட்டி எடுக்க வாய்ப்பு கிடைத்தது. இனி.
தமிழோவியம் :- இன்றைய தமிழக அரசினை பற்றிய உங்களின் மதிப்பீடுகள் என்ன?
பதில் :- இன்றைய தேதி வரை தமிழகத்தை ஆட்சி செய்யும் தி.மு.க. ஒரு மைனாரிட்டி அரசு. இதனை நீங்கள் முதலில் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். பாட்டாளி மக்கள் கட்சி, காங்கிரஸ் போன்ற கட்சிகளின் தயவில் தான் இந்த அரசு செயல்பட்டு வருகிறது. இந்த ஆட்சியாளர்கள் நூறு நாள்கள் சாதனைகளை சொல்லி புலங்காகிதம் அடைகிறார்கள். ஆனால் அதில் உண்மைகள் இல்லை. பிரமாண்டமான ஒரு மாயத் தோற்ற வாக்குறுதிகளை அள்ளிவிட்டு ஜெயித்த மைனாரிட்டி தி.மு.க. அதனை முழுமையாக செயல்படுத்த முடியாமல் திணறுகிறது. ஆட்சியில் அமர்ந்த உடனே அனைவருக்கும் தொலைக்காட்சி என்றார்கள். ஆனால் சமத்துவபுரத்துக்கு மட்டுமே என்று சொல்கிறார்கள். இரண்டு ஏக்கர் நிலம் உறுதி என்றார்கள் அதிலும் மண் விழுந்து விட்டது. கேஸ் அடுப்பு பற்றிய பேச்சையே காணவில்லை. இதனை எல்லாம் வைத்து பார்க்கும் பொழுது இது ஒரு தோல்வியை நோக்கி பயணம் செய்கின்ற உடைந்த கப்பல் என்று தான் நான் சொல்வேன். இந்த அரசு விரைவில் வீழ்ந்சியை சந்தித்து வீழும். அல்லது வீழ்த்தப்படும்.
தமிழோவியம் :- இந்த ஆட்சியில் நல்லதே நடக்கவில்லை என்கிறீர்களா?
பதில் :- ஒரு சில விசயத்தை தவிர எதுவும் நடக்கவில்லை. சிறையில் இருக்கும் கைதிகளுக்கு சிக்கன் போடுவதாக சொல்லி பெருமை அடித்துக் கொண்டார்கள். ஆனால் குற்றம் எதுவும் செய்யாத அப்பாவி மக்கள் கிச்சன் குனியா நோயால் அவதிப்படுகின்றார்கள். இது தான் இந்த ஆட்சியின் லட்சணம்.
தமிழோவியம் :- ம.தி.மு.க. ஒரு கவர்ச்சியில் உருவான இயக்கம் இல்லை. தி.மு.க.வின் புறக்கணிப்பால் உருவான இயக்கம். இந்தக் கட்சி இன்று சில எம்.எல்.ஏக்களையும், எம்.பிக்களையும் பெற்று இருக்கிறது. இந்த நிலை உங்களுக்கு திருப்தியை தருகிறதா?
பதில் :- கண்டிப்பாக. எனக்கு முழு திருப்தியைத் தராவிட்டாலும், மேலும் வளர்ச்சியடைய ஒரு ஏணிப்படியாக இருக்கிறது. சில கட்சிகளுக்கு விழுப்புரத்தை தாண்டினால் உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். ஆனால் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு சென்னை முதல் கன்னியாகுமரி வரை தொண்டன் இருக்கிறான். இது எங்களுக்கு கிடைத்த பெருமை. இன்று தி.மு.க. அ.தி.மு.க. விற்கு மாற்றாக விளங்கும் ஒரே இயக்கம் எங்கள் இயக்கம். இதனை சிலர் மறுக்கலாம். ஆனால் உண்மை. இந்தக் கட்சி உருவாக தன்னுடைய உயிரையே கொத்த உத்தமர்களை கொண்ட கட்சி ம.தி.மு.க. இந்தக் கட்சியை வளர்க்க நாங்கள் பட்ட துன்பங்கள், துயரங்கள், இடர்பாடுகள், சிக்கல்கள் எல்லாம் ஒன்று இரண்டல்ல. அவைகள் ஓராயிரங்கள். அதனை சொற்களில் வெளிப்படுத்த முடியாத காவியங்கள். அதனை வரலாறு என்றும் மறக்காது. மறுக்காது.
தமிழோவியம் :- ம.தி.மு.க. ஆரம்பத்தில் இருந்தே இலங்கைப் பிரச்சினையில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக இருக்கிறது. இதனை வெளிப்படையாக வை.கோ.வும் நீங்களும் பேசியும் வருகிறீர்கள். இதனால் அதிகமான துன்பங்களையும், சிக்கல்களையும் சந்தித்துள்ளீர்கள் இல்லையா?
பதில் :- உண்மை தான் அதற்காக தமிழனுக்கு குரல் கொடுக்காமலா இருக்க முடியும். இலங்கைத் தமிழருக்கு மட்டுமல்ல, உலகில் எங்கு தமிழனுக்கு சிக்கல் என்றாலும் அதனை அறிந்த உடன் குரல் கொடுப்பவர் வை.கோ. இதனை யாரும் மறுக்க முடியாது. இலங்கையில் தனி ஈழம் தான் ஒரே தீர்வு. இது வந்தே தீர வேண்டும். ம.தி.மு.க. இப்படி சொல்வதால் இதனை ஒரு தீவிரவாதிகளுக்கு, பயங்கரவாதிகளுக்கு ஆதரவான இயக்கம் என்று சொல்லிவிட முடியாது. நாங்கள் அனைத்து தீவிரவாத குழுக்களையும் ஆதரிக்க வில்லை. மாறாக தன்னுடைய சுய வாழ்வுரிமைக்காக போராடுகின்ற போராளிகளுக்குத் தான் ஆதரவு கொடுக்கிறோம்.
தமிழோவியம் :- இப்படி நீங்கள் சொன்னாலும் ம.தி.மு.க.வை பயங்கரவாதத்திற்கு ஆதரவான இயக்கமாக சித்தரிக்கும் முயற்சி இங்கே நடக்கிறதே?
பதில் :- உண்மை தான் எங்கும் எதிர்கருத்து இருப்பவர்கள் இருக்கத் தான் செய்வார்கள். அதே போல தமிழகத்திலும் விடுதலைப்புலிகளுக்கு எதிரான வர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள். ஆனால் பெரும்பாலன மக்கள் யார் பக்கம் இருக்கிறார்கள் என்பதைத் தான் நாம் பார்க்க வேண்டு;ம். பெரும்பாலான 99 சதவீத தமிழர்கள் தனி ஈழம் தான் நிரந்தர தீர்வு என்று சொல்கிறார்கள். பொது மக்களிடம் கேட்டுப் பாருங்கள் சொல்வார்கள். சோ போன்றவர்களை எல்லாம் நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள கூடாது. தமிழீழ மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தால் கூட கைது செய்ய முயற்சி இங்கே இப்பொழுது நடக்கிறது. நாங்கள் தீவிரவாதத்தையோ, பயங்கரவாதத்தையோ என்றுமே ஆதரித்ததில்லை. ஆனால் ஈழத்தமிழரை ஆதரித்தால் அது குற்றமா?
தமிழோவியம் :- இன்றைய எதிர்கட்சியான அ.தி.மு.க.வுடன் ம.தி.மு.க. இணைந்து பணியாற்றுவது எப்படி இருக்கிறது. கூட்டணிக்குள் கருத்து வேறுபாடு என்றெல்லாம் செய்திகள் வருகிறதே?
பதில் :- கருத்து வேறுபாடு, கொள்கை வேறுபாடு என்பது அனைத்து கூட்டணி கட்சிகளுக்கும் பொதுவாக இருக்க வேண்டும் என்று விதிகள் கிடையாது. அ.தி.மு.க.வின் கூட்டணியில் ம.தி.மு.க. இருக்கிறது. இனியும் இருக்கும். இதனை சீர்குலைக்க தலைவர் வை.கோ. அவர்கள் சொன்னது போல் ம.தி.முக., அ.தி.மு.க.வுடனான உறவை சீர்குலைக்க முயற்சி நடக்கிறது. இது நடக்காது.
தமிழோவியம் :- கடந்த சட்டமன்றத் தேர்தலில் ம.தி.மு.க. தி.முக.வுடன் கூட்டணி தொடர்ந்திருந்தால் ம.தி.மு.க. அதிக இடங்களை பிடித்திருக்கும் என்று சொல்லப்பட்டது. அதனை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பதில் :- அப்படி நடந்திருக்காது. மாறாக தோற்கடிக்கப்பட்டிருப்போம். ம.தி.முக.வை நம்ப வைத்து கழுத்தை அறுத்திருப்பார்கள். அப்படி இரண்டு முறை தி.மு.க. எங்களை கழுத்தை அறுத்திருக்கிறது. ம.தி.மு.க. அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைந்திருப்பதை தொண்டர்கள் முதல் தலைவர்கள் வரை வரவேற்கிறார்கள். இது உணர்வுப் பூர்வமான கூட்டணி. இந்தக் கூட்டணி வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் அதிகமான இடங்களை கைப்பற்றி தி.முக.விற்கு ஒரு மரண அடியைக் கொடுக்கும்.
தமிழோவியம் :- இந்த உணர்வுப் பூர்வமான கூட்டணி நீண்ட காலம் நீடிக்காது என்று விமர்சனம் இருக்கிறதே?
பதில் :- அ.தி.மு.க.வும், ம.தி.மு.க.வும் தி.முக.வில் இருந்து பிறந்தவைகள். இரண்டு கட்சிகளையும் ஒழிக்க திட்டம் போட்டது தி.முக. அதையும் தாண்டி இந்தக் கட்சிகள் இன்று வளர்ந்துள்ளன. ம.தி.மு.க. முதன் முதலில் அ.தி.மு.க.வோடு கூட்டணி வைத்த போது ம.தி.முக. சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சென்றார்கள். 2006ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் கூட்டணி வைத்த போது முதன் முறையாக ம.தி.மு.க. சார்பில் சட்டமன்ற உறுப்பினர்கள் சென்றார்கள். இவை எல்லாம் உணர்வுப் பூர்வமானவைகள். இதனால் இக்கூட்டணி தொடரும்.
தமிழோவியம் :- தமிழகத்தின் அடுத்த முதல்வராக ஸ்டலினை நியமித்துவிட்டு இன்றைய முதல்வர் கருணாநிதி அமெரிக்க போகப் போவதாக செய்திகள் வருகிறது. இதனைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் ?
பதில் :- தி.முக. என்ற கட்சி வளர அண்ணா எவ்வளவு தியாகம் செய்திருப்பார். ஆனால் அவரது தியாகத்தை இன்றைய முதல்வர் கருணாநிதி குழி தோண்டி புதைத்து விட்டார். இன்றைய தி.முக. ஒரு கம்பெனியாக மாறிவிட்டது. அண்ணாவால் உருவாக்கப்பட்ட கொள்கைகள் அனைத்தும் காணாமல் போய்விட்டது. தற்பொழுது கருணாநிதியின் கவலை எல்லாம் ஸ்டாலினை முதல்வராக்கி பார்க்க வேண்டும் என்பது தான். கருணாநிதிக்கு கட்சி, கட்சி தலைவர்கள், தொண்டர்களை விட தனது குடும்ப உறுப்பினர்கள் தான் முக்கியமாக போய் விட்டது. இல்லை என்றால் கிளப் வைத்துக் கொண்டு, இதில் கேளிக்கை நடனங்கள் நடத்தி பணம் சம்பாதித்துக் கொண்டிருந்த பேரன் தயாநிதியை அரசியலுக்கு கொண்டு வந்து மத்திய அமைச்சராக்குவாரா?
தமிழோவியம் :- பொதுச் செயலாளர் வை.கோ. வன்முறையை தூண்டும் விதமாக பேசுகிறார் என்று அவரை கைது செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் காரர்கள் சொல்வதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பதில் :- காங்கிரஸ் காரர்கள் சொல்வதைக் கேட்டு வை.கோ.வை கைது செய்தால் என்ன ஆகும் என்பதை முதல்வர் நன்கு தெரிந்து வைத்திருப்பார். அதனால் கைது செய்ய மாட்டார்கள் என நம்புகிறோம். அதனையும் மீறி கைது செய்தால் ஜனநாயக முறைப்படி எங்களது எதிர்ப்பை தெரிவிப்போம்.
|