தமிழ் மாதமான ஆவணி மாதம் பிறந்து விட்டாலே மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூல உற்சவ விழா கலை கட்டத் தொடங்கி விடும். கடந்த ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய இந்த ஆவணி மூல உற்சவ விழாவில் சிவபெருமானின் 64 லீலைகளை நிகழ்த்திக் காட்டுவது தான் இந்த ஆவணி மூல உற்சவ விழாவின் முக்கிய அம்சமாகும்.
இப்படி நிகழ்த்தப்படும் சிவபெமானின் லீலைகளில் 59வது லீலையான நரியை பரியாக்கிய லீலை பிரசித்தமானது. மதுரையை ஆண்ட மன்னனான அரிமார்த்தன பாண்டியன் தனது படையை வலுப்படுத்த குதிரைப்படையை அதிகரிக்க திட்டமிட்டார். அதற்காக குதிரைகளை வாங்கி வர தனது அமைச்சரான மாணிக்கவாசகரை அழைத்து ஆலோசனை செய்தார். மாணிக்கவாசகர் தீவிர சிவபக்தர். மன்னன் அவரிடம் போதுமான குதிரைகளை வாங்கி வர பொற்காசுகளை கொடுத்து அனுப்பினார். மன்னன் அரிமார்த்தன பாண்டியனிடம் பொற்காசுகளை பெற்றுக் கொண்டு குதிரைகளை வாங்கி வர அமைச்சரான மாணிக்கவாசகர் புறப்பட்டு செல்கிறார். அப்படி அவர் சென்று கொண்டிருக்கும் பொழுது வழியில் ஒரு சிவன் கோவில் சிதிலமடைந்து கிடக்கிறது.அதனை கண்டு கவலை கொண்ட மாணிக்கவாசகர் அந்தக் கோவிலை எப்படியாவது புதுப்பிக்க வேண்டும் என நினைத்தார். அதற்காக குதிரை வாங்கி வர மன்னன் தன்னிடம் அளித்த பொற்காசுகளை வைத்து அந்த சிவன் கோவிலை செப்பனிட்டு அக்கோவிலின் திருப்பணிக்கே மன்னன் கொடுத்த பொற்காசுகளை செலவு செய்து விடுகிறார். குதிரை வாங்க பணம் இல்லாததால் வருத்த மடைந்த மாணிக்கவாசகர் தனக்கு தானே சமாதானம் சொல்லிக் கொண்டார். தன்னால் பூஜிக்கப்படுகின்ற சிவபெருமான் தன்னை கை விட மாட்டார் என்ற நம்பிக்கையில் தனது மன்னனைக் காண அரண்மனை வந்தார்.
அமைச்சரின் வருகையை ஆவலோடு எதிர்பார்த்திருந்த மன்னன் குதிரையில்லாமல் அமைச்சர் வருவதைக்கண்டு வருத்தப்பட்டதோடு கோபத்தோடு அமைச்சரை பார்த்து குதிரைகள் எங்கே என்று கேள்வி கேட்டான். மன்னனின் கோபத்தை கண்ட அமைச்சர் மாணிக்கவாசகர் மன்ன குதிரைகள் வாங்க பொற்காசுகளைக் கொடுத்து விட்டேன். குதிரைகள் ஆடி மாதத்தில் வந்து சேரும் என பொய் சொல்லி, அப்போதைக்கு தப்பித்துக் கொண்டார். பின் ஆடி மாதமும் வந்தது. குதிரைகளின் வரவை எதிர்பார்த்த மன்னன் ஏமாற்றம் அடைந்தான். பின் இதனை பற்றி தீவிரமாக விசாரித்ததில் அமைச்சர் மாணிக்கவாசகர் குதிரைகள் வாங்க கொடுத்த பணத்தை சிவபெருமான் கோவில் திருப்பணிக்கு செலவு செய்ததை மன்னன் அறிந்தான். இதனால் கோபம் கொண்டு அமைச்சர் மாணிக்கவாசகரை சிறையில் அடைத்தான்.
தனது பக்தன் சிறையில் அடைக்கப்பட்டதை சிவபெருமானால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. தனது பக்தனை காக்க சில நரிகளை பரியாக்கி(குதிரைகளாக்கி) மதுரைக்கு கொண்டு வந்தார். குதிரைகள் வருவதை அறிந்த மன்னன் மகிழ்ந்து போனான். அமைச்சர் மாணிக்கவாசகரை சிறையில் அடைத்தது தவறு என்பதை உணர்ந்து அவரை விடுதலை செய்து அவரிடம் மன்னிப்பு கேட்டதாக சொல்லப்படுகிறது. இது தான் நரியை பரியாக்கி சிவபெருமான் தனது பக்தனை காப்பாற்றிய கதை. இதனை தான் மறக்காமல் மதுரையில் ஆண்டு தோறும் கொண்டாடப்படுகிறது.
இந்த நரியை பரியாக்கிய லீலை சிவபெருமானின் 59வது லீலையாக நிகழ்த்தப்பட்டது. இதில் அவனுப்பானடி என்ற இடத்தில் இருந்து நரி ஒன்றை ஒரு கூண்டில் அடைத்து கொண்டு வந்து விழா நடந்தது. பின்னர் நரியை அதன் உரிமையாளரிடம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியால் சிவபெருமானின் உள்ளமும், மாணிக்கவாசகரின் ஆத்மாவும் பெரும் மகிழ்ச்சி அடையும் என்று இன்றுவரை பக்தர்களால் நம்பப்படுகிறது. இந்த நிகழ்ச்சியினை ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
இதற்கு அடுத்த நாள் லீலையாக புட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் நடந்தது. புட்டு என்பது தென் மாவட்டங்களில் இன்றும் விரும்பி சாப்பிடப்படும் ஒரு உணவுப் பொருள். பாண்டிய மன்னன் மதுரையை ஆட்சி செய்து கொண்டு இருக்கிறார். அப்பொழுது ஒரு நாள் பெருமழை பெய்து மதுரை வைகை ஆற்றில் பெரு வெள்ளம் ஓடுகிறது. அப்படி ஓடி வரும் பெரு வெள்ளம் அதன் கரைகளை உடைத்து ஊருக்குள் வந்து விடும் அபாயம் ஏற்படுகிறது. அப்பொழுது பாண்டிய மன்னன் ஓர் கட்டளை இடுகிறார். அதாவது வீட்டிற்கு ஒருவர் வந்து கரையை அடைக்க வேலை செய்ய வேண்டும் என்கிறார். மன்னனின் ஆணைப்படி வீட்டிற்கு ஒருவர் சென்று அனையை அடைக்க உதவுகிறார்கள். அப்பொழுது புட்டு விற்கும் கிழவி ஒருவர் தனது வீட்டில் ஆண் வாரிசுகள் இருந்தால் அவர்களை அனுப்பி மன்னனின் ஆணையை நிறைவேற்றலாம். தனது வீட்டில் ஆண் வாரிசுகள் இல்லாததை நினைத்து வருந்தினார். வயதான இந்த கிழவியின் வேதனையை போக்க சிவபெருமான் மனித ரூபம் எடுத்து கிழவியின் வீட்டின் சார்பில் மண் எடுக்கச் செல்கிறார். அங்கு செய்த கடும் வேலை காரணமாக வேலை செய்து கொண்டிருக்கும் பொழதே உறங்கி விடுகிறார். அப்பொழுது வலம் வந்த பாண்டிய மன்னன் சிவபெருமானை பிரம்பால் அடித்து வேலை செய்யும் படி பணிக்கிறார். அப்படி பிரம்பால் மன்னன் சிவபெருமானை மட்டும் அடிக்கும் பொழுது மனிதர்கள் உட்பட அனைத்து உயிர்களும் வலியால் துடிக்கின்றன. இது என்ன அதிசயம் என்று உணர்ந்த மன்னன் சிவபெருமானின் காலில் விழுந்து வணங்கி தன்னை மன்னித்தருளும் படி சிவபெருமானிடம் வேண்டுகிறான். இந்த நிகழ்ச்சியைத் தான் புட்டுக்கு மண் சுமந்த கதையாக அன்று முதல் இன்று வரை கொண்டாடப்படுகிறது.
எட்டாம் நாள் நிகழ்ச்சியாக நடைபெற்ற இந்த புட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் நிகழ்ச்சியில் அதிகாலையில் கோவில் நடை சாத்தப்பட்டன. இதன் பின் உற்சவரான மீனாட்;சி அம்மன் பிரியாவிடையுடன் சுவாமி பல்லக்கில் புட்டுத் தோப்பு என்ற பகுதிக்கு வந்தார். இந்த நிகழ்ச்சியை வைகை ஆற்றுக்குள் மண்ணை வெட்டி ஒரு பாத்திரத்தில் சுமந்து வந்து பட்டர்கள் நிகழ்த்திக் காட்டினர். இந்த நிகழ்ச்சியில் அலங்காரத்தில் காட்சியளித்த அம்மனை ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து தரிசனம் செய்வதைக் காண கோடி கண்கள் வேண்டும் என்கிறார்கள் மதுரை வாசிகள்.
|