செப்டம்பர் 15 2005
தராசு
வ..வ..வம்பு
முச்சந்தி
உள்ளங்கையில் உலகம்
திரையோவியம்
கேள்விக்கென்ன பதில் ?
இந்து மதம் என்ன சொல்கிறது ?
திரைவிமர்சனம்
அடடே !!
அமெரிக்க மேட்டர்ஸ்
தொடர்கள்
தொடர்கள்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
அமெரிக்க மேட்டர்ஸ் : பி.ஏ.கிருஷ்ணனுடன் மற்றும் சுந்தர ராமசாமியுடன் ஒரு சந்திப்பு
- பாஸ்டன் பாலாஜி
| Printable version | URL |

பி.ஏ.கிருஷ்ணனுடன் ஒரு மாலை

PA Krishnanஆஸ்தான இலக்கிய சந்திப்புகள் நிகழும் ட்ரைவ்-இன்னில்தான் பி.ஏ.கிருஷ்ணனை முதல் முறை சந்தித்தேன். அப்பொழுது நான் 'புலி நகக் கொன்றை'யை கேள்வி மட்டுமே பட்டிருந்தேன். இரா. முருகன், 'நேசமுடன்' வெங்கடேஷ், ஐகரஸ் பிரகாஷ் ஆகியோர் வழிநடத்த, நான் கொஞ்சமாய் வாய் பார்த்து, நிறைய அசட்டுக் கேள்விகளைக் கேட்டு, இனிமையாக சென்ற உரையாடல். அஸ்ஸாம் அனுபவங்கள், சத்யஜித்ரே திரைப்படங்கள், உலக இலக்கியம் என்று பல விஷயங்களை எளிமையாக எடுத்து வைத்தவிதம், என்னுடைய விமானத்தை கிட்டத்தட்ட தவறவிட வைத்தது.

மீண்டும் பி.ஏ.கிருஷ்ணனை பாஸ்டனில் சந்திக்கும் வாய்ப்பு ஆகஸ்ட் இருபத்தெட்டு கிடைத்தது. கூடவே மாதவன், ராஜேஷ் சந்திரா, நவன், நம்பி ஆகியோரும் கலந்து கொண்டனர். இந்த முறை 'புலி நகக் கொன்றை'யை முழுதாகவும், அவரே எழுதிய அதன் ஆங்கில மூலம் 'டைகர் க்ளா ட்ரீ'யை கொஞ்சம் படிக்கவும் முடிந்திருந்தது.

நாவல் என்பது முழுமையான வாழ்க்கையை சொன்னாலும், முழுமையடையாத எண்ணத் தேக்கத்தை எவ்வாறு வாசகனிடம் ஏற்படுத்த வேண்டும், தமிழ் சிறுகதைகளின் உலகளாவிய தரம், திரைப்படங்களின் சீரழிவும் சலனத்தை ஏற்படுத்தும் அரிய சினிமாக்களும், ஆங்கிலக் கவிதையுலகமும் தமிழ் களமும், இலக்கியத்தின் பயன், புத்தகங்களுக்கும் வாசகனுக்கும் இருக்கவேண்டிய உறவு, மார்க்ஸ¤ம் கம்யூனிஸமும் லெனினும் என்று சமூக அக்கறையுடன் அலுக்காத வகையில் உரையாடினார். திணறடிக்காமல், எங்கள் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்த பிஏ கிருஷ்ணனுக்கு எங்களின் நன்றி.

சுந்தர ராமசாமி க. நா. சு.வை நினைவு கூறும்போது எழுதியமாதிரி, பிஏ கிருஷ்ணன் அன்று குறுகிய நேரத்தில் ஏகமாகச் சொன்ன ஆசிரியர்களுடைய பெயர்களை எல்லாம் அவரை வழியனுப்பியபின் நினைவுகூர முடியாமல் போனதில் எனக்கு வருத்தமும் ஏமாற்றமும் ஏற்படுகிறது. அவர் சொன்ன விஷயங்களை அவரே எடுத்துக் கொண்டு போய்விட்ட மாதிரி இருந்தது.சுந்தர ராமசாமியுடன் ஒரு சந்திப்பு

'திண்ணை' கோபால் ராஜாராமின் வீட்டில் இன்று (செப்டம்பர் 18, ஞாயிறு) சுந்தர ராமசாமியை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

Sudara Ramasamyநெடிய தேகம். பார்த்தவுடன் மயக்கும் வசீகரம். வாஞ்சையானப் புன்னகை. நட்புடன் இறுகத்தழுவி இறுக்கத்தை உடனடியாக நீக்குகிறார். வயது வித்தியாசத்தையும் அனுபவ அறிவையும் எழுத்து சாதிப்புகளையும் மறக்கடிக்கும் எளிமை. வெள்ளை தாடி ஐம்பத்தைந்து வருட வாசக தன்வயமாக்கலை காட்டுகிறது. கருத்துக்களை முன் வைப்பதில் கண்ணியம் கலந்த காத்திரம். பதில்களைக் கோர்வையாக விவரிப்பதில் அவரைப் படிப்பதையொத்த அனுபவம். இளைஞனின் ஆர்வத்துடன் புதிய எழுத்தாளர்களையும் மறந்து போன புத்தகங்களையும் கவனிக்கப்படாத படைப்புகளையும் கண்கள் விரிய விவரிக்கிறார். தான் பேசுவதை விட மற்றவர்களின் பேச்சை உன்னிப்பாக கவனித்து விவாதத்தையும் மதிப்பீடுகளையும் செழுமையாக்குகிறார்.

யேல் பல்கலைக்கழகத்தின் தமிழ் அடையாளமான அண்ணாமலை அவர்களும் கலந்து கொண்டு தனித் தமிழ், மணிப்பிரவாள நடை, க்ரியா அகராதி தயாரித்த அனுபவங்கள், வையாபுரிப் பிள்ளை, தேவநேயப் பாவாணர் என்று பல கருத்துக்களையும் விவாதங்களையும் தெளிவாகப் பகிர்ந்துகொண்டு மிகுந்த பலனை அளிக்கும் எதிர்வினைகளை முன்னிறுத்தினார்.

எழுத்தாளர்களையும் பெரியோர்களையும் சந்தித்த அனுபவத்தை சுராவின் புத்தகத்தைக் குறித்த குறிப்புடன் முடிக்கிறேன்:

"இன்று வரையிலும் புத்தகங்கள் வியப்பாகவே இருக்கின்றன. வெட்டித் துண்டாடப்பட்ட காகிதங்கள். ஒவ்வொரு பக்கத்திலும் எறும்புச் சாரிகள். காகிதங்களை இணைக்கச் சில தையல்கள். அதற்கு மேல் ஒரு சட்டை. இலேசாகவோ அல்லது கட்டியாகவோ. அந்த இணைப்பிலிருந்து ஒரு பெரும் வியப்பு எப்படித் தோன்ற முடியும்? புத்தகங்களைப் பார்க்கும்போது ஏன் ஒரு பரபரப்பு ஏற்படுகிறது? புத்தம் புதிய புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் கடைக்குள் நுழையும்போது ஏன் நாடித் துடிப்பு வேகம் கொள்கிறது? ஏன் ஒரு பேராசை மனத்தில் விம்முகிறது? பெண்களின் அழகுகள் சகஜமான பின்பும்கூடப் புத்தகங்களின் அழகுகள் ஏன் சகஜமாக மறுக்கின்றன? புத்தகங்கள் கோடிக்கணக்கில் உற்பத்தியான பின்பும் எப்படி அவை புதுமையும் புதிரையும் வனப்பையும் தக்கவைத்துக் கொள்கின்றன?

புத்தகங்கள் (எழுத்தாளர்களும்தான்) அளிக்கும் வியப்பு விளக்கத்திற்கு அப்பாற்பட்டது என்றுதான் நினைக்கிறேன்."

(ஆளுமைகள், மதிப்பீடுகள்/பக்.383)

கோபால் ராஜாராமின் விருந்தோம்பலும், செவிக்கு உணவோடு சுவையான அறுசுவை பதார்த்தங்களுடன் கூடிய உணவும், விடைபெறுவதற்கு முன் தேர்ந்தெடுத்து கொடுத்த சில புத்தகங்களும் சந்திப்பின் உவகையை திக்குமுக்காட வைத்தது.

PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2005 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |