தனது ஒரே சொந்தமான அப்பா இறந்த பிறகு லண்டன் வேலையை உதறிவிட்டு சென்னையில் சொந்தமாக தொழில் தொடங்க வருகிறார் வினய். அதுவரை அப்பாவுக்கு அனுப்பிய 60 லட்சத்தை வைத்து தொழில் தொடங்கலாம் என்ற நினைப்பில் வங்கிக்குச் செல்பவர் அதிர்கிறார். ஏனென்றால் அவரது கணக்கில்இருப்பது வெறும் 15 ஆயிரம். அதிரும் வினய் பணம் எங்கே போனது என்று ஆராய ஆரம்பிக்கிறார்.
அப்போதுதான் தெரியவருகிறது அப்பாவின் இரண்டாவது குடும்பம். சித்தி மாளவிகா மற்றும் தங்கை லேகா என அப்பாவின் மற்றொரு குடும்பத்தைப் பார்த்து மனம் நொந்து போகும் வினய் தொழிலைத் தொடங்க குடும்பச் சொத்தான வீட்டை விற்க முயல்கிறார். அதனை விற்க முயலும்போது தடையாக வருகிறார் லேகா. தான் அமெரிக்கா சென்று படிக்க பணம் வேண்டி லோக்கல் தாதா கிஷோரின் துணையுடன் வீட்டை விற்க முயல்கிறார் லேகா. வினய் அதைத் தடுக்க முயலும் போது ஏற்படும் கைகலப்பில் எதிர்பாராத விதமாக கிஷோரின் மனைவி இறந்துபோக, கிஷோரின் கோபம் வினய் மீது திரும்புகிறது. இடையில் தனது வீட்டில் குடியிருக்கும் பாவனாவுடன் காதல் வேறு. தாதாவின் கொலைவெறி - தங்கையின் கோபம் எல்லாவற்றையும் வினய் எப்படி சமாளிக்கிறார் என்பதே மீதிக்கதை.
முதல் படத்திலேயே நடிக்கத் தெரிந்த பிள்ளை என்று பெயர் வாங்கிய வினய் இந்தப் படத்திலும் தன் யதார்த்த நடிப்பால் கவர்கிறார். வீராதி வீரனாக வரும் நாயகனாக இல்லாமல் சராசரி இளைஞனுக்குரிய கனவு, ஆசைகளுடன் உலா வருகிறார். கிளைமாக்ஸ் தவிர வேறு எந்த இடத்திலும் பிசிறடிக்காத நடிப்பு அருமை.
படம் முழுக்க கோபமாகவே வரும் லேகா வாஷிங்டனுக்கு நடிக்க நிறைய வாய்ப்பு. கொடுத்த வேலையை நிறைவாகச் செய்துள்ளார். அம்மாவின் சடலம் பார்த்து முதலில் அழாமல் தைரியமாக இருக்கும் லேகா தனியாக அமர்ந்து உடைந்தழும் காட்சியில் மனதை நெகிழவைக்கிறார்.
லேகாவே கதை முழுவதையும் ஆக்ரமிப்பதால் பாவனாவிற்கு பெரிதாக வேலை ஒன்றும் இல்லை. பார்பி பொம்மை போல் வந்து போகிறார். ஆனாலும் வேறொரு விஷயமாக வீட்டுக்கு வரும் வினய் தான் தன்னை பெண் பார்க்க வந்திருக்கும் மாப்பிள்ளை என்று சந்தானம் சொல்வதை நம்பி வினய்யிடம் எனக்கு மணிரத்னம் பிடிக்கும் என்றெல்லாம் பேசுவதும் பிறகு அவர் யார் என்பது தெரிந்து அசடு வழிவதும் சூப்பர். இவரது தங்கையாக வரும் சரண்யாவின் சுட்டித்தனங்களும் சூப்பர். சொந்தக் குரலில் பேசியுள்ள பாவனா வசன உச்சரிப்பில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்.
காமெடியில் விவேக்கும் சந்தானமும் கலக்குவார்கள் என்று பார்த்தால் ஏமாற்றுகிறார்கள். சந்தானமாவது கொஞ்சம் தேவலை - பாவனா மண்டியில் வேலை பார்க்கும் சந்தானம் கமிஷனுக்கு ஆசைப்பட்டு பாவனாவுக்கு எதிராக மாறும் காட்சிகள் கலகலப்பூட்டுகின்றன - சிரிக்க முடிகிறது. ஆனால் விவேக் ஏமாற்றுகிறார் - இவருக்கு என்ன ஆச்சு என்று யோசிக்க வைக்கும் அளவிற்கு ஆபாச டயலாக்குகளை அள்ளி வீசுகிறார்.
காது சவ்வை கிழித்தெடுக்காத சைலண்ட் வில்லனாக வரும் கிஷோர் ஓக்கே. எந்தப்படத்திலும் இல்லாத விதமாக வில்லனுக்கும் காதல் கதை சொல்லி அவரையும் செண்டிமெண்ட் ஆளாக காட்டியிருப்பது புதுமை. ஆனாலும் வில்லத்தனத்தில் புதுசாக ஒன்றும் செய்யவில்லை..
லேகாவின் அம்மாவாக வரும் மாளவிகா, தாதாவிடம் உதவி கேட்டு உதை வாங்கும் ஹனீஃபா என சின்னச் சின்ன கதாபாத்திரங்களும் நினைவில் நிற்பது திரைக்கதையின் பலம். பரபரவென்று முதல்பாதி நகர்ந்தாலும் இரண்டாம் பாதி படுத்துகிறது.
பாலசுப்ரமணியத்தின் ஒளிப்பதிவும் விஜயனின் எடிட்டிங்கும் படத்திற்கு பலம். வித்யாசாகரின் இசையில் பாடல்கள் ஓக்கே. " இரண்டு சிங்கங்க பொறக்கணும். ஒன்ணு மதுரையை ஆளட்டும். இன்னொன்னு சென்னையை ஆளட்டும்..." பட்டுக்கோட்டை பிரபாகரின் வசனம் சூப்பர். மொத்தத்தில் அறிமுக இயக்குனர் கண்ணன் முதல் படத்திலேயே தனது முத்திரையை பதித்துள்ளார். தொடரட்டும் அவரது ஜெயம்..
|