Tamiloviam
செப்டெம்பர் 20 2007
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
திரைவிமர்சனம் : அம்முவாகிய நான்
- மீனா [feedback@tamiloviam.com]
| | Printable version | URL |

Parthiban,Bharathiதமிழ் சினிமாவின் வழக்கமான பார்முலாவாகிய காதல் - மோதல் - தாதா இவைகளை விட்டுவிட்டு ஒரு வித்தியாசமான கதையை விரசமின்றி அருமையாகச் சொல்லியுள்ளார் அம்முவாகிய நான் படத்தின் இயக்குனர் பத்மாமகன். கிட்டத்தட்ட அரங்கேற்றம், தப்புத்தாளங்கள் போன்ற படங்களின் சாயலில் அம்முவாகிய நான் இருந்தாலும் அந்தப்படங்களிலிருந்து ஆங்காங்கே சற்று வித்தியாசப்படுகிறது.

இரண்டு முறை தேசிய விருதை நழுவவிட்ட எழுத்தாளர் பார்த்திபன், இந்த முறையாவது அந்த விருதை பெற்றுவிட வேண்டும் என்று முடிவு செய்கிறார். பெண்களுக்கு எதிரான அநீதிகளைக் கண்டு பொங்கி தன் எழுத்துக்களால் அதற்கு விடுவு காணத் துடிக்கும் பார்த்திபன் விபச்சாரப் பெண்களின் கண்ணீர்க் கதையை காவியமாக்க ஒரு விபசார விடுதிக்கு வருகிறார். அங்குள்ள பெண்களிடம் பழகி அவர்களது வாழ்க்கையைப் பற்றி தெரிந்து கொள்ள நினைக்கும் பார்த்திபன் அங்கு அம்முவைச் சந்திக்கிறார்.

பிறந்ததும் தாயை இழந்த அம்முவை அவரது தந்தையே விபச்சாரியிடம் விலைக்கு விற்று விடுகிறார். விபசார விடுதியில் வளர்ந்த அம்மு வயது வந்த பிறகு விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுகிறார்.

அம்முவைப் பார்த்த உடனேயே பாத்திபனுக்கு அவரைப் பிடித்து விடுகிறது. அம்முவின் மீது அவருக்கு ஏற்படும் காதல் விபசாரியாக இருந்தாலும் பரவாயில்லை, இவள் தான் என் மனைவி என்ற முடிவிற்கு வரத் தூண்டுகிறது.

முதலில் இக்காதலை மறுக்கும் அம்மு பார்த்திபன் தன் மீது கொண்டுள்ள ஆழமான அன்பை உணர்ந்தி திருமணத்திற்கு சம்மதிக்கிறார். தன் வீட்டு பத்திரத்தை விபசார விடுதித் தலைவி சாதனாவிடம் கொடுத்து விபச்சாரத்திலிருந்து சாதாரண குடும்ப வாழ்க்கைக்கு அம்முவை கூட்டிச் செல்கிறார் பார்த்திபன்.

அம்முவைக் காதலிக்கும் போது தனக்குக் கிடைத்த அனுபவங்களை வைத்து அம்முவாகிய நான் என்ற நூலை எழுதி முடிக்கும் பார்த்திபன் அதை தேசிய விருதுக்கு அனுப்பி வைக்கிறார். அங்கே தேர்வுக்கமிட்டியில் கையெழுத்து போட்டு அங்கீகாரம் கொடுக்க வேண்டிய அந்தஸ்தில் இருக்கிற மகாதேவன் தான் கொடுக்கப்போகும் விருதுக்கு விலையாக அம்முவை கேட்கிறார், அதுவும் பார்த்திபனுக்கு தெரியாமல் அம்முவிடமே.

தன் கணவனின் படைப்பிற்கு சரியான அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்ற தவிப்பில் மகாதேவனிடம் செல்கிறார் அம்மு. ஒரு காலத்தில் விலைமாதுவாக இருந்தாலும் தற்போதைய குடும்ப வாழ்க்கை காரணமாக மகாதேவன் தொடும்போது கூனிக் குறுகும் அம்மு முடிவில் என்ன ஆனார்? பார்த்திபனுக்கு விருது கிடைத்ததா என்பதுதான் படத்தின் கிளைமாக்ஸ்.

தன்னுடைய வழக்கமான வளவளா பேச்சைக் குறைத்து மிக அழகான, நேர்த்தியான நடிப்பைக் கொட்டியிருக்கிறார் பார்த்திபன். இமேஜ் பார்க்கிற ஹீரோக்கள் மத்தியில் விபச்சார விடுதியில் மனைவி தேடும் மகாபுருஷனாக நடிக்க அசாத்திய தைரியம் வேண்டும். அது பார்த்திபனிடம் நிறையவே இருக்கிறது. அம்முவிடம் தன் காதலைக் கூறி கல்யாண ஆசையை வெளிப்படுத்தும் இடத்தில் நடிப்பில் அசத்துகிறார்.

அம்முவாக புதுமுகம் பாரதி. புதுமுகம் என்று சொல்லவே முடியாத அளவிற்கு பண்பட்ட நடிப்பு. வாழ்க்கையில் முதன்முறையாக ஒரு போலீஸ் அதிகாரியிடம் மரியாதை கிடைக்கும் போது கலங்கும்  போதும் குடும்ப வாழ்க்கையின் மகத்துவம் புரிந்து கொஞ்சம் கொஞ்சமாக மனம் மாறும் போதும் ஆஹா சொல்ல வைக்கிறார். ஒரு விபச்சாரியாக ஆம்பளைத் துணை இல்லாம நான் துங்கியதே கிடையாது என்று முதலில் அலட்சியமாக சொல்பவர் திருமணத்துக்கு பின் ஒரு சராசரி குடும்பப் பெண்ணாக மாறி கணவன் அல்லாத இன்னொருவன் தொடும் போது கூனிக் குறுகி விட்டுரு என்று கதறுவது அருமை.

முதலில் பார்த்திபனோடு பாரதியை அனுப்ப பார்த்திபனின் வீட்டுப் பத்திரத்தை வாங்கிக் கொள்ளும் விபச்சார விடுதித் தலைவி சாதனா பார்த்திபனோடு பாரதி சந்தோஷமாக இருக்கிறார் என்று தெரிந்ததும் தான் பார்த்திபனிடம் விலையாக வாங்கிய வீட்டு பத்திரத்தை திருப்பித் தரும் காட்சியில் நெகிழ வைக்கிறார்.

மகாதேவனின் வில்லத்தனத்தில் புதிதாக ஒன்றும் இல்லை. சுருளியின் வசனங்களும், சபேஷ் முரளியின் இனிய இசையும் எம்.எஸ். பிரபுவின் கேமராவும் படத்திற்குப் பலம்.

படத்தில் காமெடி இல்லவே இல்லை. ஓரிரு இடங்களில் லாஜிக் ஓட்டை என சில குறைகள் இருந்தாலும் கவர்ச்சிக்கும், ஆபாசத்துக்கும் வாய்ப்புள்ள ஒரு கதையை மிகக் கண்ணியமாகச் சொல்லி நேர்த்தியான ஒரு திரைப்படத்தை கொடுத்துள்ளார் இயக்குநர் பத்மாமகன்.

oooOooo
                         
 
மீனா அவர்களின் இதர படைப்புகள்.   திரைவிமர்சனம் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2007 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |