டிவியிலோ, ரேடியோவிலோ பேசவரும் குடும்பத்தலைவிகள் சர்வ சாதாரணமாக சொல்லும் விஷயம், 'வூட்ல சும்மாத்தான் இருக்கேன்!' ஆனால், அறுபது வருஷத்துக்கு முன்னாலேயே காந்திஜி அவர்களையெல்லாம் இல்லத்து அரசி என்று குறிப்பிட சொல்லி வலியுறுத்தியிருக்கிறார் என்பதுதான் ஆச்சரியம்.
'மனைவி என்பவள் அடிமையோ, வேலைக்காரியோ இல்லை. அவள் ஒரு இல்லத்து அரசி' (ஹரிஜன், 12.10.1934)
பெண் இருக்கும் வீடுதான் குடும்பமாக முழுமை பெறுகிறது என்று செல்வார்கள். பணிபுரியும் இடம் கூட பெண்கள் இருப்பதால் மட்டுமே முழுமை பெறுகிறது என்று கூட சொல்லலாம். நமது கலாச்சாரத்தில் ஆண்களுக்கு பெரிய பங்கில்லை. பெண்தான் எல்லாவற்றிலும் பிரதானம். ஒரு குத்துவிளக்கை ஏற்றி வைப்பதற்கு கூட பெண்ணைத்தான் அழைத்தாகவேண்டும். காந்திஜியும் இதையேதான் சொல்கிறார்.
'பெண் உத்தமாமானவன். தியாகத்தின் வடிவம். இன்னல்களை பொறுமையுடன் சகித்துக்கொள்வது, பணிவடக்கம், திட நம்பிக்கை, விவேகம் ஆகிய சிறப்புகள் அவளுக்கே உரித்தானவை ' (யங் இந்தியா 15.1.1921)
நடு இரவில் உடம்பு முழுவதும் நகையுடன் எப்போது பெண்ணால் பயமின்றி சுதந்திரமாக செல்ல முடிகிறதோ அப்போதுதான் முழுமையான சுதந்திரம் கிடைத்துவிட்டதாக சொல்லமுடியும் என்று காந்திஜி சொன்னதை கேள்விப்படாதவர்களே இருக்க முடியாது. இது சுதந்திரத்தை பற்றி காந்திஜி சொன்னதாக எடுத்துக்கொண்டு ஒதுக்கியவர்களும் உண்டு. காந்திஜி, பெண்ணீயம் என்பது பெண்கள் மட்டுமே சம்பந்தப்பட்டதல்ல என்பதை எல்லோருமே புரிந்துகொள்ளவேண்டும் என்று விரும்பினார்.
ஆண்கள், பெண்களுக்கு இழைக்கும் கொடுமைகளை கண்டு கொதித்தெழுவதற்கு ஒரு பெண்ணாக பிறந்திருக்க வேண்டுமென்கிற அவசியமில்லை. அதே சமயம் பெண்கள் மட்டுமே பெண்ணீயம் பேசிக்கொண்டிருப்பதில் பயனில்லை என்றும் சொல்கிறார். ஆண், பெண் பேதமின்றி கொடுமை கண்டு போராடவேண்டும் என்பதை அவர் வலியுறுத்தியதை விட முக்கியமான விஷயம், ஆண்களால் மட்டுமே பெண்ணுரிமை மீட்டுதரமுடியும் என்கிற நிலைப்பாடுதான்.
அப்போதெல்லாம் ஆண், பெண் ஏற்றத்தாழ்வு சட்டபூர்வ அனுமதியை பெற்றிருந்தது. காந்திஜி, சொத்துரிமை இரு பாலருக்கும் சமமாக இருக்கவேண்டும் என்பதை வலியுறுத்தியதோடு சுதந்திர இந்தியாவில் அது நிச்சயம் சாத்தியமாகும் என்கிற உறுதியையும் கொடுத்திருந்தார். பெண் ஏன் ஆணிடம் அடிமைப்பட்டு போனாள் என்பதற்கு காந்திஜி சொல்லும் காரணம், ஆண்களின் மனோபாவம் மட்டுமல்ல பெண்களின் மனோபாவமும்தான்.
'பெண்ணை தனது கருவியாக ஆண் கருதுகிறான். பெண்ணும் ஆணின் கருவியாக இருக்க கற்றுக்கொண்டு அவ்வாறு செயல்படுவது சுலபமானது, மகிழ்ச்சிகரமானது என்ற முடிவுக்கு வந்தாள்' (அரிஜன் 25.1.1938)
பெண்கள், தங்கள் சார்ந்திருப்பவர்களை அதிகமாக நம்பியிருப்பதுதான் பல பிரச்சினைகளக்கு காரணம். இத்தகைய மனோபாவம் மாறாத வரை ஆணாதிக்க உலகத்திலிருந்து பெண்களுக்கு விடுதலை கிடையாது. பெண்கள் ஆணின் கைப்பாவையாகவே இருந்துவருவது பற்றி பெண்கள் அமைப்புகள்தான் முதலில் அதிகமாக கவலைப்பட்டாகவேண்டும் என்கிற காந்திஜியின் கருத்தை இங்கே அடிக்கோடிட வேண்டியது அவசியம்.
'அரசியலில் ஈடுபடும் பெண்களில் பெரும்பாலோர் சுயமாக சிந்திப்பதில்லை. தங்கள் பெற்றோர் அல்லது கணவரின் சொல்படி நடப்பதில் திருப்தி கொள்கின்றனர். பெண்ணுரிமைக்காக போராடும் அமைப்புகள் முதலில் ஏராளமான மகளிரை வாக்காளர்களாக பதிவு செய்து அவர்களுக்கு நடைமுறை கல்வியை புகட்ட வேண்டும். அவர்களை பிணைத்து வைத்திருக்கும் ஜாதி சங்கிலியிலிருந்து விடுவிக்க வேண்டும்.' (ஹரிஜன், 21.4.1946)
பெண்ணுரிமைக்காக வீதியிலிறங்கி போராடும் மகளிர் அமைப்புகள் காந்திஜி சொல்லும் விஷயத்தையும் கொஞ்சம் காதில் போட்டுக்கொண்டால் பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் உபயோகமாகத்தான் இருக்கும்.
சரி, பெண் விடுதலை எப்போது கிடைக்கும்? ஆண்களை பெண்கள் அடிமைப்படுத்தும்போதா? அதுதான் பெண்களின் லட்சியமா? ஆண்களை பெண்கள் அடிமைப்படுத்தும் பட்சத்தில் பெண்விடுதலை கிடைத்துவிட்டதாக சொல்லிவிடலாமா? ஆயிரம் கேள்விகள் மனதில். ஆனால் காந்திஜியின் பதிலோ பல கேள்விகளை தெளிவாக்கிவிடுகிறது.
'பெண்கள், ஆண்களைப் போலவே நடையுடை தோற்றத்தில் போலியாக நடிப்பதால் ஆண்களுடன் போட்டியிட முடியும்தான். ஆனால், ஆண்களைப் போல பாவனை காட்டுவதன் மூலம் அவள் தனக்குரிய உயரிய நிலையை எட்ட முடியாது. பெண்கள், ஆண்களோடு இணைந்து நிறைவு செய்பவர்களாகத்தான் இருக்கவேண்டுமேயொழிய ஆண்களாகவே மாறிவிடக்கூடாது' (ஹரிஜன், 27.2.1937)
நோ காமெண்ட்ஸ்!
|