செப்டெம்பர் 28 2006
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
திரைவிமர்சனம் : சில்லுனு ஒரு காதல்
- மீனா [feedback@tamiloviam.com]
Save as PDF | Bookmark in Del.icio.us | | Printable version | URL |

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் காதல் இருக்கும். காதலியே மனைவியாகக் கிடைப்பது ஒரு சுகம் என்றால் மனைவி காதலியாக அமைவது வேறு வகை சுகம். இதைத்தான் சொல்ல முயலுகிறது சில்லுனு ஒரு காதல்.

Surya Jyothikaகாதலித்துத்தான் திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்ற எண்ணத்தில் உறுதியாக இருப்பவர் ஜோதிகா. ஆனால் பெற்றோரின் வற்புறுத்துதால் சூர்யாவை மணக்க சம்மதிக்கிறார். இவர் தான் இப்படி என்றால் தாலி கட்டும் நேரத்தில் கூட முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு உட்கார்ந்திருக்கிறார் சூர்யா. சரி இவர்களது திருமண வாழ்க்கை அவ்வளவுதான் என்று நினைக்கும் முன்பாகவே "ஆறு வருடத்திற்குப் பின்" என்று திரையில் காட்டுகிறார்கள். அமைதியான - ஆனந்தமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ஜோவும் சூரியாவும். இவர்களது சந்தோஷத்திற்கு அடையாளமாக ஒரு சுட்டிப் பெண் குழந்தை வேறு. மனைவி முன்னாலேயே உட்கார்ந்துகொண்டு தண்ணியடிக்கும் அளவிற்கு இருவருக்கும் அந்நியோன்னியம்.

வேலை விஷயமாக சூர்யா அமெரிக்கா சென்று விட, பெண் கேட்கும் ஒரு புத்தகத்தை எடுப்பதற்காக வீட்டின் பரண் மீது ஏறும் ஜோ அங்கே சூர்யாவின் கல்லூரிக் கால டைரியைக் காண்கிறார். சுவாரசியமாக டைரியைப் படிக்க ஆரம்பிக்கும் ஜோ கல்லூரியில் படிக்கும் நாட்களில் சூர்யா தனக்கும் கோவை நகர எம்.பி.யின் மகளான பூமிகாவிற்கும் இடையே மலர்ந்த காதலையும் தாங்கள் இருவரும் பதிவுத் திருமணம் செய்து கொண்ட சில நிமிடங்களிலேயே பூமிகாவின் தந்தையால் தாங்கள் பிரிக்கப்பட்டதையும், ஒரே ஒரு நாள் பூமிகாவுடன் வாழ்ந்தால் போதும் என்றும் சூர்யா அதில் எழுதியிருப்பதைப் படித்து அதிர்கிறார் ஜோ.

சூர்யா அமெரிக்காவிலிருந்து திரும்பும் போது தன் மனைவியிடம் வழக்கமான துள்ளல் இல்லாதைதைக் கவனிக்கிறார். ஜோ பூமிகாவைத் தேடி அலைந்து ஒரு வழியாக அவரையும் சூர்யாவையும் சந்திக்க வைக்கிறார். மனைவியின் இந்தச் செயலால் தடுமாறிப் போகும் சூர்யா என்ன செய்வது என்று தெரியாமல் திகைக்கிறார். தன்னை உயிருக்கு உயிராகக் காதலித்து தன் நினைப்பிலேயே ஆறு வருடம் தனியாகக் கழித்த காதலி - மனைவி பூமிகாவா? அல்லது மனைவி என்ற அந்தஸ்தில் தன்னுடன் எப்போதும் இருக்கும் ஜோவா? யார் முக்கியம் என்று சூர்யா எடுக்கும் முடிவே படத்தின் கிளைமாக்ஸ்.

முதல் பாதியில் குறும்பு + அமைதியான குடும்பத்தலைவராக வலம் வரும் சூர்யா கல்லூரி நாட்களில் முரட்டு ஆசாமியாக வலம் வருகிறார். கல்லில் பூக்கும் பூ போல அவர் மனதிலும் காதல் தோன்றும் காட்சி அருமை. முடிந்த கதை என்று நினைத்திருக்கும் போது திடீரென்று பூமிகா வந்தவுடன் தடுமாறும் காட்சிகளில் தனக்கு நன்றாக நடிக்க வரும் என்பதை மீண்டும் நிரூபிக்கிறார்.

ஜோவை இனி திரையில் பார்க்க முடியாது என்ற வருத்தம் இன்னும் அதிகமாகும் படி அபாரமாக நடித்துள்ளார். ஆரம்ப காட்சிகளில் மகள் மற்றும் கணவருடன் சேர்ந்து லூட்டி அடிப்பதாகட்டும், கணவனின் காதல் தெரிந்து உள்ளுக்குள் நொறுங்குவதாகட்டும், கணவனையும் அவனது முன்னாள் காதலியையும் சந்திக்க வைத்து விட்டு தனியே தவிப்பதாகட்டும்.. அற்புதமான நடிப்பை ஒவ்வொரு காட்சியிலும் வெளிப்படுத்துகிறார்.

Bhumika, Suryaசூர்யாவின் காதலியாக பூமிகா. முதல் பாதியில் அமைதியாக வருபவர் பிற்பாதியில் அமர்க்களப்படுத்துகிறார். முற்பாதியை விட பிற்பாதி சூப்பர். வடிவேலு மற்றும் சந்தானத்திற்கு என்ன ஆச்சு? நாலே சீனில் தான் இருவரும் தலை காட்டுகிறார்கள். என்னவென்று சுதாதரித்துக் கொண்டு பார்ப்பதற்குள் காட்சி முடிந்துவிடுகிறது. காமெடி டிராக்கை தனியே எடுத்து ஒட்ட வைத்திருப்பார்களோ என்ற சந்தேகம் எழுவதை தவிர்க்க இயலவில்லை. வடிவேலு பஞ்சாயத்தில் கலந்து கொள்ளும் காட்சிகளில் மட்டும் கொஞ்சம் சிரிக்க முடிகிறது. ரொம்ப நாட்களுக்குப் பிறகு பெரியத் திரையில் தலையைக் காட்டியுள்ளார் சுகன்யா.

ரஹ்மான் இசையில் பாடல்கள் அவளுக்கென்ன மட்டும் ஓகே.. மற்ற பாடல்கள் எல்லாம் சுமார். ஆறு வருடமாக பிரிந்து போன சூர்யாவைத் தேட பூமிகா முயற்சியே செய்யவில்லை - எதிர்பார்த்த கிளைமாக்ஸ் என்பதைப் போன்று கதையில் ஆங்காங்கே சில நெருடல்கள். ஆனாலும் அடிதடி கதைகளுக்கு நடுவே ஒரு குடும்பக் கதையைச் சொல்லி நிஜமாகவே மனதை சில்லென்று ஆக்குகிறது சில்லென்று ஒரு காதல். இதற்காகவே அறிமுக இயக்குனர் கிருஷ்ணாவைப் பாராட்டலாம்.

| | | |
oooOooo
மீனா அவர்களின் இதர படைப்புகள்.   திரைவிமர்சனம் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |