தமிழகத்தை மட்டுமல்லாமல் கேரளா, டெல்லி போன்ற மாநிலங்களிலும் சிக்குன் குனியா மற்றும் டெங்கு காய்ச்சல் நோய் வேகமாகப் பரவி வருகிறது. என்னதான் மாநிலத்தை ஆள்பவர்கள் முதலில் தங்கள் மாநிலத்தில் இது போன்ற ஒரு வியாதியே இல்லை என்று கூறிவந்தாலும் கூட, இக்காய்ச்சலால் பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பது நிதர்சனம். சரியாக கவனித்து சிகிச்சை அளிக்காத நிலையில் ஆட்கொல்லி நோயாகக் கூட உருமாறும் இத்தகைய சிக்குன் குனியா மற்றும் டெங்கு காய்ச்சல் போன்ற நோய்களில் இருந்து பொது மக்களைக் காப்பது மாநில அரசுகளின் கடமையாகும். அந்தக் கடமையை மாநில அரசுகள் செவ்வனே செய்ய மத்திய அரசு தேவையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.
இந்த விஷயத்தில் ஆளும் கட்சி உண்மை நிலவரத்தை மூடி மறைத்து நாடகமாடுவதும் எதிர்கட்சிகள் விஷயத்தை வேண்டுமெறே பூதாகாரமாக மாற்றும் நிலையும் இல்லாமல் ஆளும் கட்சி - எதிர் கட்சி என அனைத்துக் கட்சிகளும் ஒன்றினைந்து மக்களிடையே இத்தகைய நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும். ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ளும் கலாச்சாரதை விட்டொழித்து மக்கள் நல்வாழ்வில் கொஞ்சமாவது அக்கரை காட்டவேண்டும்.
ஏற்கனவே உலக நாடுகள் மத்தியில் இந்தியாவின் சுகாதார நிலை கேள்விக்குறியாக உள்ள நிலையில் நாடு முழுவதும் பரவி வரும் இந்த டெங்கு மற்றும் சிக்குன் குனியா வைரஸ்களை நாம் சரிவர அடக்காவிட்டால் ஒட்டுமொத்த இந்திய சுகாதாரத் துறையும் உலக அரங்கில் அவமானத்திற்குள்ளாவது நிச்சயம். நிலைமையின் விபரீதத்தை உணர்ந்த இந்நிலையிலாவது இதை சரி செய்ய நம் அரசியல்வாதிகள் முன்வருவார்களா? இல்லை இந்த சோகம் தொடரப்போகிறதா?
|