நீ பிறக்கும் பொழுது ஏழையாக பிறந்தால் அது உன் தவறு அல்ல. நீ இறக்கும் பொழுது ஏழையாக இறந்தால் அது உன் தவறு
பெரும்பாலும் மனிதர்கள் ஒன்று போல் தான் இருக்கிறார்கள். சிலர் மட்டும் தான் எதையாவது புதுமையாக செய்து, தன்னை சமூகம் அங்கீகரிக்கும் படி செயல்படுகிறார்கள். அப்படி செயல்பட்டு வரும் மணிகண்டன் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்தவர். 27 வயதான இவர் ஆறாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர். தங்க நகைகள் செய்யும் சிறிய பட்டறை ஒன்றை நடத்தி வரும் இவர் சத்தம் இல்லாமல் பல சாதனைகளை செய்து வருகிறார். இவரது பெயர் இரண்டு முறை லிம்கா சாதனையாளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. கின்னஸ் சாதனையில் இடம் பெற முயன்று அதிலும் வெற்றி பெரும் நிலையில் இருக்கிறார். மென்மையாகவே பேசினார். நான் இன்னும் எதையும் பெரிதாக செய்ய வில்லை. இனிமேல் தான் செய்ய வேண்டும் என்று அடக்கத்துடன் சிரிக்கிறார்.
பொதுவாக எனக்கு சின்னப்பிள்ளையில் பள்ளியில் படிக்கும் சூழல் ஒரு காலக்கட்டத்தில் சாத்தியம் இல்லாமல் போனது. அதனால் தங்கக் நகைகளை செய்யும் பட்டறையில் வேலையில் சேர்ந்தேன். அப்படி வேலை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது பிற சாதனையாளர்களைப் போல் நாமும் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் அது குறித்து யோசித்து வந்தேன். அப்படி ஒரு நாள் போசிக்கும் பொழுது வெள்ளியால் ஒரு மின் விசிறி செய்ய முயற்சி செய்தேன். அந்த முயற்சிப் படி 100 கிராம் வெள்ளியில் மின் விசிறியை ஒரு வாரத்திற்குள் செய்தேன். இதனை அறிந்த நண்பர்கள் மற்றும் பலர் எனக்கு ஊக்கம் அளித்தனர். இதனை நான் 2004ம் ஆண்டு செய்தேன்.
பின் 110 கிராம் வெள்ளியை பயன்படுத்தி டி.வி.எஸ். விக்டர் வண்டியை மாடலாகக் கொண்டு அதனை வடிவமைத்தேன். இதனை செய்ய ஒரு வருடம் ஆனது. இதனை செய்யும் பொழுது இது சாத்தியம் இல்லை என்று சொன்னார்கள். ஆனால் நான் இதனை செய்து காட்டினேன். இதனை 2005ல் செய்தேன். எனது இந்த சாதனையை முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன், ரோட்டரி சங்கம், லயன்ஸ் சங்கம் மற்றும் பல சங்கத்தினர் வாழ்த்தி ஊக்கப்படுத்தினர். எனது இந்த சாதனைகளை பெரியவர்கள் உதவியோடு லிம்கா புத்தகத்திற்கு அனுப்பி வைத்தேன். அதனை பார்த்து எனது பெயரை 2004, 2005ம் ஆண்டு புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார்கள். இது பெரிய அங்கீகாரமாக நான் நினைக்கிறேன். எனது இந்தச் சாதனையை கின்னஸ் புத்தகத்திற்கு அனுப்பினேன். அதனை கண்ட அவர்கள் பாராட்டுக் கடிதம் அனுப்பினார். நான் செய்த 110 கிராம் எடையுள்ள மோட்டார் சைக்கிள் இயங்குவது போல் செய்து காட்டினால் அதனை சாதனையாக ஏற்றுக் கொள்வதாக சொன்னார்கள். அதனை எப்பொழுது செய்து காட்டினாலும் உங்களது பெயரை கின்னஸ் புத்தகத்தில் பதிவு செய்கிறோம் எனச் சொல்லி அதற்குரிய மெட்டல் நம்பர், கிளைன்ட் ஜ.டி. யை கொடுத்துள்ளனர். இதனை நான் கண்டிப்பாக செய்து எனது பெயரை கின்னஸில் பதிவு செய்வேன் என பெருமையாக சொல்கிறார்.
சமீபத்தில் இவர் ஒன்றை புதுமையாக செய்திருக்கிறார். 8 மில்லி மீட்டர் நீளம், 6 மில்லி மீட்டர் அகலம் கொண்ட ஒரு சிறிய தாளில் ஒரு திருக்குறளையும், நீ பிறக்கும் பொழுது ஏழையாக பிறந்தால் அது உன் தவறு அல்ல. நீ இறக்கும் பொழுது ஏழையாக இறந்தால் அது உன் தவறு என்று பில்கேட்ஸ் ஒரு முறை சொன்ன தத்துவத்தையும் மைக்ரோக்டிவ் பென்சில் உதவியால் மெல்லிய எழுத்தில் எழுதியிருக்கிறார். இதனை லென்ஸ் வைத்துத் தான் பார்க்க முடியும். இதனை போல் பல சாதனைகளை செய்ய வேண்டும் என்கிறார்.
பொதுவாகவே ஒரு முறை தான் வாழ்கிறோம். அப்படி வாழ்ந்து விட்டு போகும் பொழுது எதையாவது உருப்படியாக செய்து விட்டுப் போக வேண்டும் என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன். ஒரு சிலருக்காவது நாம் முன் மாதிரியாக இருக்க வேண்டும். அதற்கான முயற்சியை நான் செய்து வருகிறேன். எனது முயற்சிகளுக்கு எனது பெற்றோர் மற்றும் நண்பர்கள் பெரிதும் உதவுகின்றனர். இந்த உதவி என்னை உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்லும் என்கிறார்.
|