|
சமைக்காமலேயே சாப்பிட முடியுமா? ஒரு நாள் முழுதும் சமையலறைக்குள் போக வேண்டாமென்றால் நமக்கு எவ்வளவு குஷி! அடுப்பை மூட்டாமல் சமையலா என்று ஆச்சரியமாக இருக்கிறதா? எங்கள் வீட்டில் அப்படித்தான். வாரம் ஒருமுறை இயற்கை உணவுதான். பயன்படுத்தும் பாத்திரங்கள் மிகக்குறைவு. அடுப்பு சூடு படாது. எனவே சமையல் சிரமம் இல்லை. உடலுக்கும் ஆரோக்கியம். மருத்துவர்களும் இயற்கை உணவை உடல் ஆரோக்கியத்திற்கு சிபாரிசு செய்கிறார்கள்.
நாம் வாரம் ஒருமுறையாவது முழுநேர இயற்கை உணவை உண்பது உடலுக்கு வலுவூட்டும் என்பதை மருத்துவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். நாம் தினமும் காலை முதல் இரவு வரை உண்பதற்கேற்ப பிரித்து எழுதியுள்ளேன்.
(சென்ற வார தொடர்ச்சி...)
வெண்டைக்காய் பொரியல்
தேவையான பொருட்கள்
பிஞ்சான வெண்டைக்காய்- 50கிராம் மிளகு - 1டீஸ்பூன் ஜீரகம் -1டீஸ்பூன் கொத்துமல்லி-1கப் பொடியாக நறுக்கியது கறிவேப்பிலை-1 கொத்து இஞ்சி -1' துண்டு
வெண்டைக்காயை நன்றாக அலம்பி துடைத்து வைத்துக்கொள்ளவும். மற்ற பொருட்களை மிக்ஸ்யில் இட்டு சட்னி போல் அரைத்துக்கொள்ளவும்.பிறகு வெண்டை பிஞ்சுகளை கத்தியால் நீட்டு வாக்கில் (2அல்லது3)கீறி அதனுள் இந்த மசாலாவை சிறிய ஸ்பூன் உதவியால் தடவி மூடி வைத்துவிடவும். இதை மதியவுணவு நேரத்தில் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். நமக்கு அதிலுள்ள வைட்டமின்கள் முழுமையாகவும் கிடைக்கும்.(வெண்டைக்காய் காம்பை நீக்கி விடவும்). அடுத்து மற்றும் ஒரு வகை மதிய உணவில் சேர்க்க தக்காளியில் தயாரிக்கலாம்.
தக்காளி கப்ஸ்
தேவையான பொருட்கள்
தக்காளிப் பழம்- 3 கெட்டியாக இருக்கவேண்டும் கோஸ் -1/2கப் பொடியாக துருவியது மாங்காய் -.1/4கப் துருவியது காலி·ளவர் அல்லது கேரட்-1/2கப் துருவியது மிளகு -1டீஸ்பூன் ஜீரகம்-1டீஸ்பூன் இஞ்சி-1"துண்டு பூண்டு-4 பல்
செய்முறை
மிளகு,ஜீரகம்,இஞ்சி,பூண்டு இவைகளை மிக்ஸியில் கரகரப்பாக பொடித்து வைத்துக்கொள்ளவும். தக்காளியைக் கழுவி சுத்தம் செய்து எடுத்து அதன் மேல் பாகத்தை வட்டமாக வெட்டி எடுத்து பிறகு அதனுள் உள்ள விதைகளை ஸ்பூனாலோ அல்லது விதைகள் எடுப்பதற்கென்றே கடையில் கிடைக்கும் சிறிய கருவி கொண்டோ எடுத்துவிடவும். இப்பொழுது தக்காளி கப்புகள் தயார். இப்பொழுது இதில் முதலில் சிறிது கோஸ் துருவலைப் போடவும் அதன் மேல் சிறிது தயாரித்து வைத்துள்ள மசாலாப் பொடியைத் தூவவும். பிறகு மாங்காய்த் துருவல் போடவும் அதன் மேல் மசாலாவை தூவி விடவும்.பிறகு காலி·ளவர் அல்லது கேரட் துருவலை தூவி அதன் மேல் வட்டமான வெள்ளரித் துண்டை வைத்து மூடி வைத்துவிடவும். சாப்பிடும்போது வெள்ளரிக்காய் வில்லையை முதலில் சாப்பிட்டு விட்டு பிறகு தக்காளி கப்பைச் சாப்பிடவும். இந்த சுவையான மதிய உணவு யாவருக்கும் பிடிக்கும்.
அடுத்ததாக மதிய உணவில் கூட்டு தயாரித்துச் சேர்க்கலாம்.
(தொடரும்...)
|