|
ஏகப்பட்ட பிரச்சனைகள், போராட்டங்களைக் கடந்து வெளிவந்திருக்கிறது கேப்டனின் கஜேந்திரா. ஆனால் படத்தைப் பார்க்கும் போது இதற்கா இத்தனை பிரச்சனைகள் செய்தார்கள்? என்று எண்ணத் தோன்றுகிறது.
சிறு வயது முதற்கொன்டு தன்னை வளர்த்துவரும் சரத்பாபுவிற்கு விசுவாசமான வேலைக்காரனாக இருந்துவருகிறார் விஜயகாந்த். அவரில்லாமல் சரத்பாபு வீட்டில் ஒன்றுமே நடக்காது என்ற அளவிற்கு குடும்பத்தில் ஒரு முக்கிய அங்கமாகவே அவரை நடத்துகிறார் சரத்பாபு. இதில் விஜயகாந்தின் நம்பிக்கையான கைத்தடி ரமேஷ் கண்ணா. இருவரும் அடிக்கடி வெளியூர் சென்று புத்தி சுவாதினமில்லாத லயாவைப் பார்த்து வருகிறார்கள். லயா தன் உயிர் என்று விஜயகாந்த் உருகி உருகி ஊர் மக்களிடம் கூறுகிறார்.
இதற்கிடையே தன் பேத்தி ப்ளோரா விஜயகாந்தை காதலிப்பது தெரிந்து இவர்கள் இருவருக்கும் திருமணம் செய்ய சரத்பாபு முடிவு செய்கிறார். இது பிடிக்காத ப்ளோராவின் தந்தையும் சரத்பாபுவின் மருமகனுமாகிய நிழல்கள் ரவி, லயாவை தன் வீட்டிற்கே அழைத்துவந்து இவளுக்கும் உனக்கும் என்ன உறவு என்று விஜயகாந்தைக் கேட்கிறார். பதில் சொல்ல முடியாமல் விஜயகாந்த் தடுமாற, இருவருக்கும் இடையே தவறான உறவு இருக்கிறது என்று கதை கட்டி விஜயகாந்தை வீட்டை விட்டு வெளியேற்றுகிறார். நடக்க இருந்த திருமணம் தடைபடுகிறது. இந்நிலையில் திடீரென்று வரும் ஒரு கும்பல் விஜயகாந்தை தாக்க ஆரம்பிக்கிறது. அப்போது அங்கே விஜயகாந்தை தேடிக்கொண்டு வரும் ராதாரவி மற்றும் அவரது ஆட்கள் விஜயகாந்திற்கு உதவுகிறார்கள். இம்மோதலில் தலையில் அடிபடும் லயாவிற்கு பைத்தியம் தெளிகிறது. அதைக்கண்டு ஆனந்தப்படும் விஜயகாந்தையே எதிர்பாராத வகையில் கடப்பாரையால் குத்திவிடுகிறார் லயா. மருத்துவமனையில் சரத்பாபு குடும்பத்தினருக்கு லயா-விஜயகாந்த் உறவு பற்றிய உண்மையைக் கூறுகிறார் ரமேஷ்கண்ணா.
சரத்பாபுவின் மூத்த மகளான சீதா, அப்பாவின் விருப்பத்திற்கு எதிராக ராஜீவைத் திருமணம் செய்துகொள்கிறார். இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ராஜீவ் சீதாவுடன் ஹைதராபாத் சென்று விடுகிறார். இரு குடும்பங்களுக்கிடையே தொடர்பு அறுந்துவிடுகிறது. 20 வருடங்களுக்குப் பிறகு விடுபட்ட உறவை புதுப்பிக்க ஹைதராபாத் வரும் விஜயகாந்த் கண் முன்னாலேயே சீதாவைக் கொலை செய்துவிடுகிறான் அவ்வூர் தாதாவின் தம்பி. இதைக் கண்டு பொங்கி எழும் விஜயகாந்த் அந்தக் கும்பலை அழிக்கிறார். இதில் தாதா மற்றும் அவனுடைய சில கூட்டாளிகள் மட்டும் தப்பிவிடுகிறார்கள். ராஜீவ் மற்றும் அவருடைய மகள் லயா தாதாவின் பிடியிலிருந்து தப்பி ரயிலில் செல்ல முயற்சிக்கும்போது ராஜீவின் கையிலிருக்கும் வெடிகுண்டு வெடித்துவிடக்கூடாதே என்ற எண்ணத்தில் விஜயகாந்த் ராஜீவைச் சுட்டுவிடுகிறார். இதனால் ஏற்படும் கலவரத்தில் ஒரு கம்பத்தில் மோதி லயா பைத்தியமாகிறார். சாகும் நிலையில் ராஜீவ் உண்மையை உணர்ந்து விஜயகாந்திடம் லயாவைக் காப்பாற்றும்படி கூறிவிட்டு இறக்கிறார். இதுவே லயாவிற்கும் விஜயகாந்திற்குமான உறவு என்று விளக்குகிறார் ரமேஷ்கண்ணா. அடிவாங்கினாலும் விஜயகாந்தை துரத்திக்கொண்டு வரும் வில்லன் கோஷ்டியை கேப்டன் எப்படி பழிவாங்குகிறார் என்பதே மீதிக்கதை.
அரசியலை நோக்கி கேப்டன் பலமாக முன்னேறுகிறார் என்பதற்கு கட்டியம் கூறும் விதமாக அமைந்துள்ளன அவரது ரசிகர் மன்றக் கொடியுடன் ஆரம்பிக்கும் முதல் சீன், மற்றும் அரசியல் நெடியடிக்கும் வசனங்கள். படத்தில் மிக அதிக அளவில் வன்முறை, வெட்டு, குத்து கொலை.. எந்தக் கோணத்திலிருந்து பார்த்தாலும் பாட்ஷா, முத்துவின் சாயல் படம் முழுவதிலும் தெரிவதை கவனிக்காமல் இருக்க முடியவில்லை. விஜயகாந்தின் ஆரம்ப காட்சிகள் தாங்க முடியவில்லை. இவருடைய ரத்தத்தைக் கொண்டே சிகரெட் பற்றவைப்பது, ஊர் மக்கள் ஒன்று கூடி செய்யும் பால், சந்தனாபிஷேகம் முதலியவை டூமச். விஜயகாந்திற்கு காமெடி சூப்பராக வரவில்லை என்றாலும் சுமாராக வருகிறது. சண்டைக் காட்சிகளில் அருமையாக செய்திருக்கிறார் கேப்டன். மயிர்கூச்செறியும் விதமாக புதுமையாக அமைந்துள்ளன சில சண்டைக் காட்சிகள். மரத்தைச் சுற்றி டூயட் பாடும் வழக்கத்தை கேப்டன் விட்டொழித்தால் புண்ணியமாய் போகும். அவருடைய பெண் போல இருக்கிறார்கள் கதாநாயகிகள் இருவரும். லயா மற்றும் ப்ளோராவைப் பற்றிச் சொல்ல ஒன்றுமே இல்லை...
அன்பான முதலாளியாக சரத்பாபு. மற்றபடி பெரிதாகச் சொல்ல ஒன்றும் இல்லை. ராதாரவி முதலில் வரும் தோரணை என்னவோ அவர் தான் பெரிய வில்லன் என்பதைப் போல இருந்தாலும், உப்பு சப்பில்லாத போலீஸ் அதிகாரியான் அவர். போலீஸ் வேலை வெறுத்துப் போய் கேப்டனுக்கு உதவியாக (கிட்டத்தட்ட எடுபிடி) வளைய வருகிறார். சீதா - ராஜீவ் படத்தில் வந்து போகிறார்கள். அவ்வளவே. காட்டுக் கூச்சல் போடும் வில்லன் தாதா மற்றும் அவரது தம்பி இருவரும் நடிப்பில் ஒன்றும் சாதிக்கவில்லை. வழக்கமான வில்லத்தனங்கள் தான். அதிலும் வில்லனின் தம்பி, பலர் முன்னிலையில் ஒரு பெண்ணை கற்பழிப்பது எல்லாம் ரொம்ப ஓவர். அதை விடக் கொடுமை, அரசாங்கத்தாலேயே ஒன்றும் செய்ய முடியாத இத்தகைய வில்லன்களை கேப்டன் ஒன்மேன்ஆர்மியாக எதிர்த்து - வெற்றி பெறுவதுதான்..
தேவாவின் இசையில் பாடல்கள் ஓக்கே.. தூரி.. தூரி பாடல் ரசிக்கும்படி உள்ளது. அதேபோல விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணனின் பின்னணிப் பாடல் கேப்டனின் சண்டைக்கு இன்னும் மெருகேற்றுகிறது. சண்டைப் பயிற்சியாளரும், ஒளிப்பதிவாளரும் நிச்சயம் பாராட்டுதல்களுக்குரியவர்கள். மொத்தத்தில் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா விஜயகாந்தை வைத்து மறுபடியும் பாட்ஷா படத்தை எடுத்துள்ளார்.
|