சூழ்நிலையால் விபசாரியானவர் சங்கீதா. ஐதராபாத்தில் விபசாரத் தொழிலில் கொடிகட்டி பறக்கிறாஎ. உடம்பை விற்று சம்பாதிக்கும் பணத்தைக்கொண்டு ஏழைகளுக்கு உதவி செய்யும் சங்கீதாவின் இரக்க குணமும் மனமும் மேற்படிப்புக்காக ஐதராபாத் செல்லும் அய்யர் குடும்பத்து இளைஞரான பிரேமை ஈர்க்கிறது. வாழ்க்கை முழுவதும் எனக்கு மட்டுமே நீ சொந்தமானவளாக இருக்கவேண்டும் என்று தனது காதலை சங்கீதாவிடம் பிரேம் சொல்ல - இதெல்லாம் நடைமுறைக்கு சாத்தியமில்லை என்று முதலில் மறுக்கும் சங்கீதா பிறகு ஒரு நிபந்தனை விதிக்கிறார். ஆச்சாரம் மிகுந்த உனது குடும்பத்தினர் தாசி என்று தெரிந்தும் என்னை ஏற்றுக்கொண்டால் நான் உன்னை திருமணம் செய்துகொள்கிறேன் இல்லையெனில் என் வழியில் என்னை விட்டுவிடு என்கிறார்.
அதன்படி தனது வீட்டுக்கு சங்கீதாவை அழைத்துச்செல்கிறார். முதலில் சங்கீதாவை பிரேம் குடும்பம் ஏற்றுக்கொள்ள மறுத்து அவமானப்படுத்தி வெளியே அனுப்புகிறார்கள். பிறகு அவர்களின் குடும்ப ஜோதிடர் கோட்டா சீனிவாச ராவ், சங்கீதா குடும்பத்தில் வந்தால் தனம் கொழிக்கும் என்று சொல்ல, பிரேமின் குடும்பம் சங்கீதாவை ஏற்றுக்கொள்ள சம்மதிக்கிறது.
ஒருகட்டத்தில் குடும்பம் - குழந்தை என திருந்தி வாழும் சங்கீதாவை தன் ஆசைக்கு இணங்குமாறு வேண்டுகிறார் கோட்டா சீனிவாசராவ். அவரது அடாத ஆசைக்கு இணங்க மறுக்கிறார் சங்கீதா. தன்னை அவமதித்த சங்கீதாவை பழிவாங்க, அவரது குழந்தையால் குடும்பத்தில் அழிவு வரும், அதனை கொலை செய்வதே ஒரே தீர்வு என்று குண்டைத் தூக்கிப் போடுகிறார் கோட்டா. ஜோசியரின் வாக்கை தெய்வ வாக்காக கருதும் பிரேமின் குடும்பம் குழந்தையைக் கொலை செய்கிறது. தன் குழந்தையை இழந்து தவிக்கும் சங்கீதாவின் வாழ்வு என்ன ஆயிற்று? தன் குழந்தையைக் கொன்றவர்களை அவர் கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்துகிறாரா என்பதே கிளைமாக்ஸ்.
பார்வையிலும், ஒவ்வொரு அசைவிலும் தன்னை விலை பேசுகிறார் சங்கீதா. அபாரமான நடிப்பால் கவர்கிறார். அதிலும் அந்த இறுதிக் காட்சிகள் அற்புதம். நடிக்கத் தெரிந்த நடிகைகளில் தானும் ஒருத்தி என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். எனினும் அவர் நடந்து வரும் ஸ்டைலும், அடிக்கடி உடம்பை குலுக்கிக் கொள்வதும் ரொம்பவே செயற்கைத் தனமாக அமைந்ததால் சலிப்பு ஏற்படுவதை தவிர்க்க இயலவில்லை.
மனைவி, குடும்பம் இரண்டுக்கும் நடுவில் மாட்டிக்கொண்டு விழிக்கிறார் பிரேம். சங்கீதா மற்றும் கோட்டாவின் முன்பு இவரது நடிப்பு கொஞ்சமும் எடுபடாமல் போவது சோகம்.
ஐநூறு ரூபாய் சேர்த்து எப்படியாவது சங்கீதாவை அடைந்துவிட வேண்டும் என்று தவிக்கிற கருணாஸ் ஓக்கே. தங்கள் வீட்டுக்கே அவர் மாட்டுப் பெண்ணாக வருவதை தாங்க முடியாமல் அவர் எடுக்கிற ஆக்ஷன் அதிரடிகள், புஸ்வாணமாகி அவர் பக்கமே திரும்புவது சூப்பர்.
சாமர்தியமான வில்லனாக கோட்டா சீனிவாசராவ். இவர் சொல்வதைக் கேட்டு அழியும் குடும்பத் தலைவராக கிரீஷ் கர்னாட்.
மறைந்த ஒளிப்பதிவாளர் ஜீவாவின் ஒளிப்பதிவும், இளையராஜாவின் இசையும் தோட்டாதரணியின் கலையும் கதைக்கு பலமூட்டும் அம்சங்கள்.
யதார்தத்தை மீறிய செயல்கள் அதிக அளவில் தனத்தில் வெளிப்படுவதை இயக்குனர் நிச்சயம் தவிர்த்திருக்கலாம். உதாரணத்திற்கு இறக்கி கட்டிய சேலை, வாயில் எப்போதும் வெற்றிலைச் சாறு, சதா கிறங்கும் கண்கள்... இப்படியா இருக்கிறார்கள் பாலியல் தொழிலாளிகள் நிஜத்தில்? மேலும் அவர் தனக்கு வரும் வருமானத்தில் ஒரு ஏரியா மக்களையே காப்பாற்றுவதெல்லாம் ரொம்ப ஓவர்.
சங்கீதாவின் கணவராக வரும் பிரேமின் பாத்திரப்படைப்பிலும் யதார்த்த மீறல்கள். கல்யாணம் முடிந்தபிறகு அவரது படிப்பு என்னாகிறது? வேலைக்கு ஏதும் முயல்கிறாரா? இதையெல்லாம் இயக்குனர் கவனிக்கவே இல்லையா? இந்தக் குறைகளையும் கதையில் உள்ள லாஜிக் ஓட்டைகளையும் இயக்குனர் சிவா கொஞ்சம் கவனித்திருந்தால் நிச்சயம் தனம் பருத்திவீரன் அளவிற்கு பேசப்பட்டிருக்கும். கிளைமாக்ஸை செதுக்கிய இயக்குனர் மற்ற காட்சிகளை கவனிக்காமல் விட்டுவிட்டாரே - கனமான கதை நாடகத்தனமான வெளிப்பாட்டால் வீணாகப்போய்விட்டதே என்று அங்கலாய்க்கத்தான் தோன்றுகிறது.
|