Tamiloviam
அக்டோபர் 11 2007
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
திரைவிமர்சனம் : மருதமலை
- மீனா [feedback@tamiloviam.com]
| | Printable version | URL |

ஓய்வு பெற்ற போலீஸ் கான்ஸ்டபிள் நாசருக்கு தன் மகன் அர்ஜுனை பெரிய போலீஸ் அதிகாரி ஆக்கிப் பார்க்க ரொம்பவும் ஆசை. அப்பா நினைத்தபடியே போலீசாகிவிடுகிறார் அர்ஜுன். தான் நினைத்த மாதிரி பெரிய அதிகாரி ஆகாமல் கான்ஸ்டபிளாகத் தான் இருக்கிறார் தன் மகன் என்பது அப்பாவிற்கு தெரியாமல் போகிறது. அர்ஜுன் வேலை பார்க்கும் அதே போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக இருப்பவர் வடிவேலு. பிச்சைகாரனிடம் கூட மாமுல் கேட்கும் அளவிற்கு யோக்கியமான அதிகாரி.

Arjunஅர்ஜுன் இருக்கும் ஊரில் தான் அந்தப் பகுதியையே கிடுகிடுக்க வைக்கும் தாதா லால் வசித்து வருகிறார். அவர் வசிக்கும் அந்த தொகுதி ரிசர்வ் தொகுதி என்பதால், பல வருடங்களாக தேர்தலே நடத்தவிடாமல் லால் அராஜகம் நடத்துகிறார். புதிதாக பதவிக்கு வரும் தலைமை தேர்தல் கமிஷனரான ரகுவரன் இந்தக் கொடுமைக்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்க - அப்பகுதியில் தேர்தலை நடத்த பாடுபடுகிறார்.

ஒரு கட்டத்தில் அந்தப் பகுதியில் என்ன நடக்கிறது என்பது புரியாமல் ஒரு சண்டையில் சிக்கிக்கொள்ளும் நாசரை லால் குத்திவிட, அப்பாவைக் குத்திய லாலைக் குதறியெடுக்கிறார் அர்ஜுன். பல வருடங்களாக அந்தப் பகுதியின் தாதாவாக விளங்கிய லாலை அர்ஜுன் கைது செய்து கோர்ட்டில் ஒப்படைக்க லாலை 15 நாள் காவலில் வைக்க கோர்ட் உத்திரவிடுகிறது. அர்ஜுனையும் அவரது குடும்பத்தையும் அடித்து நொறுக்கிவிடும் வெறியில் வெளியே வரும் லாலுக்கு அர்ஜுனின் திடீர் பதவி உயர்வு அதிர்ச்சியைக் கொடுக்கிறது.

எப்பாடுபட்டாவது அந்தப் பகுதியில் தேர்தலை நடத்திக் காட்ட வேண்டும் என்ற துடிப்புடன் இருக்கும் ரகுவரனும் அநியாயத்தை எதிர்க்கும் அர்ஜுனும் ஒன்று சேர்ந்து லாலின் கொட்டத்தை எப்படி அடக்குகிறார்கள் என்பதே மருதமலையின் மீதிக்கக்தை.

எப்போதும் ஒரு கம்பீரமான உயர் அதிகாரியாகவே பார்த்த அர்ஜுனை முதல் காட்சியிலேயே கான்ஸ்டபிளாகக் காட்டி அட போட வைக்கிறார் இயக்குனர். சண்டைக் காட்சிகளில் வழக்கம் போல கலக்கும் ஆக்ஷன் கிங் காமெடிக்காட்சிகளிலும் அதிர வைக்கிறார். வடிவேலுவை அவர் படுத்தும் பாடு அப்பப்பா.. நிலாவுக்கு கேன்சர் என்று நினைத்துக் கொண்டு அர்ஜுன் பரிதாபப்பட்டு அவர் கேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுப்பதும், பிறகு அப்படியில்லை என்று தெரியவர கோபப்படுவதும் கிட்டத்தட்ட தூள் படத்தை நினைவூட்டினாலும் சுவாரஸ்யமாகவே இருக்கிறது.

Tamanna,Arjun,Nilaஅர்ஜுன் தான் நாயகன் என்றாலும் படத்தின் முக்கால்வாசி பெருமையை அள்ளிக் கொண்டு போகிறார் வடிவேலு. காஸ்டபிள் அர்ஜுனிடம் தான் எப்படிப்பட்ட என்கவுன்ட்டர் ஏட்டு என்று உதார்விட்டு, அவருக்கு முன்பாகவே அசிங்கப்படும் பல காட்சிகளில் சிரித்து சிரித்து வயிறு புண்ணாகிறது. என்னாது... நான் சிரிப்பு போலீஸா? ரிஸ்க் எடுக்குறது எனக்கு ரஸ்க் சாப்புடுறது மாதிரி என்று அவர் பேசும் டயலாக்குகள் சூப்பர்.  நிலாவுக்குப் புற்றுநோய் இருப்பதாக அர்ஜுன் சொல்லும்போது கேன்சரை சரியாகச் சொல்லத் தெரியாமல், உனக்கு டிரான்ஸ்பராமே என்று நிலாவிடன் பயங்கர ·பீலிங் காட்டி வடிவேலு அழும்போது ஏன் சிரிக்கிறீங்க என்று அவரை பார்த்து நிலா கேட்பது சூப்பரோ சூப்பர். ஆனால் கதை கொஞ்சம் சூடு பிடித்ததும் வடிவேலுவை இயக்குனர் கழற்றிவிட்டிருப்பது அநியாயம்.

கவர்ச்சி பொம்மையாக வந்து இரண்டு பாட்டிற்கு ஆடிவிட்டு போவதோடு நிலாவின் வேலை முடிந்து விடுகிறது.

பொறுப்பான தேர்தல் அதிகாரியாக ரகுவரன், அன்பான தாய் தகப்பனாக கலைராணி, நாசர் - கொடுத்த வேலையை திறமையாகச் செய்துள்ளார்கள். வழக்கமான வில்லனாக லால் மற்றும் காதல் தண்டபாணி. புதுமையாக வில்லத்தனத்தில் குறிப்பிட்டுச் சொல்ல ஒன்றும் இல்லை.

டி.இமான் இசையில் பாடல்கள் சுமார். யூ.கே.செந்தில்குமா - வைத்தி இருவரது ஒளிப்பதிவும் படத்திற்கு பெரும் பலம். கருப்பையாவின் உபயத்தில் சண்டைக்காட்சிகள் கலக்குகின்றன. சாமி, கிரீடம் படங்களின் சாயல் வெகுவாகத் தெரிந்தாலும் தன் திறமையான இயக்கத்தால் மருதமலையைக் காப்பாற்றியுள்ளார் இயக்குனர் சுராஜ்.

| | |
oooOooo
                         
 
மீனா அவர்களின் இதர படைப்புகள்.   திரைவிமர்சனம் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2007 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |