அக்டோபர் 12 2006
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
கட்டுரை : தமிழக காவல் துறை
- திருமலை கோளுந்து [golundhu1979@yahoo.com]
Save as PDF | | Printable version | URL |

Tamil Nadu Policeதமிழக காவல் துறையின் உயர் அதிகாரிகள் ஒருதலைப்பட்சமாக நடக்கிறார்கள். அவர்கள் யார் என்று எனக்குத் தெரியும். ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் அவர்களை சும்மா விட மாட்டேன் என எதிர்கட்சித் தலைவர் ஜெயலலிதா பிரச்சார கூட்டத்தில் பேசி இருக்கிறார். இதற்கு இன்றைய முதல்வர் கருணாநிதி மறுப்புத் தெரித்தவுடன் காவல் துறையினரை ஜெயலலிதா மிரட்டுகிறார் என்று சொல்லி இருக்கிறார். தமிழக காவல் துறை நடுநிலையோடு தான் இயங்குகிறதா அல்லது அதனை ஆட்சியாளர்கள், அரசியல்வாதிகள் இயக்குகிறார்களா என்ற கேள்வி நடுநிலைவாதிகளிடையே நிலவுகிறது.

தமிழக காவல் துறை ஆளும்கட்சிக்காரர்களின் ஆதரவாளர்கள் என்பதை நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தல் நிருபித்துள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முதல்வராக இருந்த பொழுது நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் போலவே இந்த உள்ளாட்சித் தேர்தல்களும் வன்முறையில் தொடங்கி வன்முறையில் முடிந்துள்ளது. 2001ம் ஆண்டு முதல்வராக இருந்த ஜெயலலிதா சொல்லிக் கொண்டிருந்ததை இன்றைய முதல்வர் சொல்லிக் கொண்டிருக்கிறார். இன்றைய முதல்வர் 2001ம் உள்ளாட்சித் தேர்தல் நாளில் சொன்னதை இன்னாள் எதிர்கட்சித் தலைவர் ஜெயலலிதா சொல்லிக் கொண்டு இருக்கிறார். இது ஒன்று தான் வித்தியாசம். மற்றவைகள் மாறவே இல்லை. தமிழக காவல் துறை காமராஜர் முதல்வராக இருந்த பொழுது காவல் துறையை கக்கன் என்பவரிடம் கொடுத்தார். அவரும் அதனை நடுநிலையோடு நடத்தினார். பின் தி.மு.க. ஆட்சியைப் பிடித்த பொழுது அண்ணாதுரை முதல்வரானவுடன் தமிழக காவல் துறையை பற்றிச் சொல்லும் பொழுது கடமை, கன்னியம், கட்டுப்பாடு ஆகிய மூன்றும் நிறைந்த கன்னியமான துறை என்பார். முன்னாள் முதல்வர் அண்ணாதுரை சொன்ன கருத்து இன்றைய தமிழக காவல் துறைக்கு பொருத்தமாக இருக்கிறதா? என்ற கேள்வி தமிழகத்தில் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

TN Policeஒரு காலத்தில் ஸ்காட்லாந்து நாட்டு போலீஸை விட சிறந்தவர்கள் என்று சொல்லப்பட்ட தமிழக காவல் துறையினரின் புகழ் இன்று அபாய கட்டத்திற்கு போய் கொண்டு இருக்கிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் அவர் தான் காவல் துறையின் அமைச்சராக இருந்தார். அவரது ஆட்சிக் காலத்தில் தான் தமிழக காவல் துறையின் மானம் கப்பல் ஏறியது. ஜெயலட்சுமி வழக்கு, செரினா மீது கஞ்சா வழக்கு, சேலத்தில் பொன்.மாணிக்கவேல் என்ற எஸ்.பிக்கு பயந்து ராஜேந்திரன் என்ற டி.எஸ்.பி. காணாமலே போய் விட்டார். அவரது மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவின் பேரில் தான் காவல் துறையினர் அவரை படாத பாடுபட்டு கண்டு பிடித்து ஒப்படைத்தனர். இந்தக் கூத்து வேறு எங்காவது நடந்து இருக்கிறதா? அத்தனையும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் தான் நடந்தது. அவைகள் நடந்த பொழுது ஜெயலலிதா ஒரு வார்த்தை இதனைப் பற்றி எல்லாம் பேசவே இல்லை. ஆனால் இப்பொழுது காவல் துறையை பற்றி குற்றம் சுமத்தி வருகிறார். அதே போல் இன்றைய முதல்வர் கருணாநிதியும் செயல்படுகிறார். காவல் துறையின் நியாயமான குறைகளை சுட்டிக்காட்டும் பத்திரிக்கைகளைக் கூட முதல்வர் கருணாநிதி ஒருபிடி பிடிக்கிறார். இதற்கெல்லாம் என்ன காரணம் என்றால் காவல் துறையை இன்றைய ஆட்சியாளர்கள் செல்லப்பிள்ளையை வளர்ப்பது போல் வளர்க்கிறார்கள்.

இன்றைய தி.மு.க. ஆட்சியில் காவல் துறை சுதந்திரமாக செயல்பட அனுமதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டை முன்னனி பத்திரிக்கைகளின் செய்திகள் மூலம் நாம் அறியலாம். கடந்த ஆட்சியில் சென்னையை விட்டு விலகியே இருந்த ரவுடிகள் இன்று சென்னையில் உலாவுவதாக முன்னாள் முதல்வரே பெயர்களை வெளியிட்டுள்ளார். அதே போல மதுரை மத்திய தொகுதி இடைத் தேர்தலில் நேர்மையாக செயல்படாத கமிஷனர், உதவி கமிஷனர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் போன்றவர்களை தேர்தல் ஆணையம் மாற்றியதே இதற்கு சாட்சி. சென்னையில் தயாரிக்கப்பட்டு ஆந்திராவிற்கு கடத்தப்பட்ட ராக்கெட் லாஞ்சரை உற்பத்தி செய்தவர்களை கைது செய்த போலீஸார் அதற்கு மூல காரணமாக இருந்த ரவி என்கிற ஆந்திர மாநில நக்சலைட்டை இன்னும் பிடிக்காமல் இருக்கிறார்கள். அவர்களை வி;ட்டு விட்டு அ.தி.மு.க.காரர்களையும், தே.மு.தி.க.வினரையும் கைது செய்வதிலேயே காவல் துறையினர் குறியாக இருக்கிறார்கள் என்கிறார் கல்லூரி பேராசிரியரான சுதர்சனன்.

 தமிழகத்தில் உள்ள 6 கோடிக்கும் அதிகமாக உள்ள மக்கள், தாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம் என்ற உணர்வோடு இருக்கிறார்கள் என்றால் அதற்கு தமிழக காவல் துறையின் செயல்பாடுகள் தான் காரணம். ஆட்சியாளர்கள் காவல் துறையை கட்டுப்படுத்துகிறார்கள் என்பது எல்லாம் சில இடங்களில் நடக்கலாம். அது தவிர்க்க முடியாதது. ஒருசிலர் செய்யும் தவறுகளால் அனைவரையும் எப்படி குற்றம் சுமத்த முடியும்? பிற மாநிலங்களை விட தமிழக காவல் துறை செயல்பாடு சிறப்பாக உள்ளது என்று தேசிய பாதுகாப்பு ஆணையமே அறிக்கை கொடுத்துள்ளது. உதாரணமாக குளித்தலை மீனாட்சி என்ற பெண் ஆசிரியர் கொலையை தமிழக காவல் துறையினர் சிறப்பாக புலனாய்வு செய்து கண்டு பிடித்து குற்றவாளிகளை கைது செய்தனர். சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு கடத்தப்பட்ட ராக்கெட் லாஞ்சர்கள் எங்கு செய்யப்பட்டது என்பதை சில வாரங்களில் தமிழக காவல் துறை கண்டுபிடித்து அதனை செய்தவர்களை கைது செய்தது. காவல் துறை ஒரு சேவைமனப்பான்மை கொண்ட ஒரு துறை. கடந்த பல வருடங்களாக தமிழகத்தை கலக்கிய வீரப்பன், வட நாட்டுக் கொள்ளையர்களை கண்டுபிடித்து அழித்த பெருமை தமிழக காவல் துறைக்கு உண்டு.

தற்போதைய சென்னை உதவி ஆணையாளர் ஜான்கிட் தலைமையிலான தனிப்படை பீகாருக்கே சென்று, பீகார் காவல் துறையினரால் நுழைய முடியாத இடத்திற்கு சென்று குற்றவாளிகளை கைது செய்தார்கள். இது மாபெரும் சாதனை என்று ஓர் ஆங்கில பத்திரிக்கை செய்தி வெளியிட்டது. அதே போல ஒரு கொலை வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடித்து 20 நாட்களில் நிரூபித்து, அவர்களுக்கு தண்டனையும் வாங்கிக் கொடுத்தது தமிழக காவல் துறை. இதனை அந்த வழக்கை விசாரித்து தீர்ப்புக் கொடுத்த நீதிபதியே பாராட்டி இருக்கிறார். லத்திகா சரண் ஜ.பி.எஸ்., விஜயகுமார் ஜ.பி.எஸ், சைலேந்திரபாபு ஜ.பி.எஸ்., நடராஜ் ஜ.பி.எஸ், திரிபாநிதி ஜ.பி.எஸ். போன்ற நேர்மையான காவல்  துறை அதிகாரிகள் இருப்பதை பார்த்து பிற மாநில காவல் துறை பொறாமை பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். அதிலும் திரிபாநிதி ஜ.பி.எஸ். உலக அளவில் 3 முறை சிறந்த காவல் துறை அதிகாரி என்று பரிசு வாங்கியிருக்கிறார்.  இன்று அரசு ஊழியர்களுக்கு என்று பல சலுகைகள் இருக்கிறது. அது காவல் துறையினருக்கு கிடையாது. வாரத்தில் ஆறு நாட்களிலும் வேலைக்கு வந்தாக வேண்டும். அதிலும் பணி நேரம் என்று எல்லாம் கிடையாது. காலையில் காக்கி சட்டையை போட்டால் இரவில் கழட்ட 1 மணி கூட ஆகிவிடும். காய்ந்த மரத்தில் தான் கல்லடிப்பார்கள். அது இப்பொழுது காவல் துறையில் நடக்கிறது. இந்த மாதிரியான விமர்சனங்களால் காவல் துறையினர் கலங்கி உட்கார்ந்து விடுவதில்லை. அடுத்து என்ன என்று தான் போய் கொண்டு இருப்பார்கள். போய்க் கொண்டு இருக்கிறார்கள் என்கிறார் தனது பெயரை வெளியிட விரும்பாத ஒரு காவல் துறை கண்காணிப்பாளர்.

பெண் இன்ஸ்பெக்டரான வள்ளி இது பற்றி கூறும் பொழுது காவல் துறையில் மது விலக்குப் பிரிவு, கிரைம் பிரிவு, போதை தடுப்பு பிரிவு, திருட்டு வீடியோ தடுப்பு பிரிவு, உணவு கடத்தல் பிரிவு, அத்தியாவசிய பொருட்கள் தடுப்பு பிரிவு என்று பல பிரிவுகள் இருக்கிறது. மேற் சொன்ன பிரிவுகளில் 45 வயதிற்கு உட்பட்டவர்கள் தான் இருக்க வேண்டும் என்ற எழுதப்படாத விதி இருக்கிறது. இந்த பிரிவினருக்கு தான் லஞ்சம் வாங்கும் வாய்ப்பும் அதிகம் உண்டு. அதே போல மேற் சொன்ன பிரிவுகளில் இருப்பவர்களுக்கு கிரிமினல்களை பற்றிய புள்ளி விவரங்கள் பக்கவாக தெரிந்து இருக்கும். ஒரு கொள்ளை நடந்து இருக்கிறது என்றால் இதனை இந்த குற்றவாளிகள் தான் செய்து இருக்க வேண்டும் என்று கண்டு பிடிக்கும் கில்லாடி போலீஸ்காரர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள். இப்படி கிரிமினல்களை பிடித்து அவர்களிடம் மாமூலை வாங்குவதை விட நாமே ஏன் கொள்ளை அடிக்கக் கூடாது என்ற எண்ணத்தில் கொள்ளை, வழிப்பறியில் காவல் துறையினரே ஈடுபடத் துவங்கி விடுகின்றனர். இதற்கு உதாரணமாக 2005ம் ஆண்டு காவல் துறையினரே கொள்ளை, வழிப்பறி செய்த சம்பவங்களை சொல்லலாம். இது தவறான ஒன்று தான். அதே சமயத்தில் காவல் நிலையங்களில் நடத்தப்படும் ஒரு சில குடும்ப பிரச்சினை, காதலர்கள் திருமணப் பிரச்சினை, மனைவியை சந்தேகப்படும் கேஸ் போன்ற கவுன்சிலிங்கில் பலரை காவல் துறை ஒன்று படுத்தி இருக்கிறது. பல குடும்பங்களை சேர்த்து வைத்த பெருமை காவல் நிலையங்களுக்கு தான் உண்டு. அதே போல பல நல்ல காரியங்கள் வெளியே தெரியாமல் நடக்கிறது. அதே சமயத்தில் காவல் துறைக்கு வேலைக்கு வருபவர்களின் கல்வித் தகுதியை அதிகரிக்க வேண்டும். சாதாரண காவலர்களுக்கு தகுதி பத்தாம் வகுப்பில் இருந்து பிளஸ் டூ வாக உயர்த்தலாம். அதிகம் படித்தவர்கள் வரும் பொழுது மரியாதை தானாகவே வரும். மொத்தத்தில் காவல் துறையை பற்றிய விமர்சனம் இருப்பது நல்லது தான். அவர்களின் செயல்பாடுகளை திருத்திக் கொள்ள, விரைவான செயல்பாட்டிற்கு வழி வகுக்கும் வகையில் விமர்சனங்கள் இருக்க வேண்டும் என்கிறார்.

| | | | |
oooOooo
                         
 
திருமலை கோளுந்து அவர்களின் இதர படைப்புகள்.   கட்டுரை பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |