இப்பொழுதுதான் ஜான் கெர்ரி தோற்ற மாதிரி இருக்கிறது. அதற்குள் அடுத்த வேட்பாளரை தயார் செய்வதற்கு அமெரிக்கா முஸ்தீபுகளில் இறங்கிவிட்டது.
ஜனநாயக கட்சிக்கு, செல்ல வேண்டிய பாதையும் கட்சியின் தளத்தகை (strategy) எவ்வாறு அமைய வேண்டும் என்பதிலும் ஏராளமான குழப்பங்கள் நீடிக்கிறது. தற்போதைக்கு ஜான் எட்வர்ட்ஸ் முன்னணியில் இருக்கிறார்.
குடியரசு கட்சியின் பாடுதான் திண்டாட்டமாக இருக்கிறது. வெல்ல முடியாத போர். பிடிக்க முடியாத ஒஸாமா. நிர்கதியான பேரிழப்புகளில் செயல்பாடற்ற அரசாங்கம். பல முனைகளிலும் மாற்றத்தை விரும்பும் மக்களை எதிர்நோக்குகிறது.
கடந்த முறை பில் க்ளிண்டன் தொடர்ச்சியாக எட்டாண்டுகள், இரண்டு தடவை தேர்ந்தெடுக்கப்பட்டார். அமெரிக்காவும் வேலை வாய்ப்பு அதிகரித்தல், பணவீக்கம் இல்லாத வளர்ச்சி, பங்குச்சந்தை வளம், வெளிநாடுகளுடன் நட்புறவு என்று சுபிட்சமாக இருந்தது. இருந்தாலும், அவருடைய துணை ஜனாதிபதி ஆல் கோர் தோற்றுப் போனார். கிளிண்டனுடனான உறவை போதுமான அளவு தூரபடுத்திக் காட்டிக் கொண்டும் தோல்வியை தவிர்க்கமுடியவில்லை. வாக்காளர்களுக்கு சீக்கிரமே அலுத்துவிடுகிறது.
தற்போதைய ஜனாதிபதி ஜார்ஜ் புஷ்ஷின் அப்பாதான், கடைசியாக ஜெயித்த துணை ஜனாதிபதி. ரொனால்ட் ரீகனின் கொள்கைகளை கடைபிடிப்பதாக உறுதி கூறினார். அவரைப் போலவே வருமான வரிகளை குறைக்கும் நிதித் திட்டத்தை முன்வைத்தார். அதே சமயம், தன்னை இன்னும் சூட்சுமமான, செயல்வீரனாக, காட்டிக் கொண்டார். ஈரான் ஊழல் பிரச்சினை போன்றவற்றை தவிர்க்கக் கூடியவராக, அன்றாட வேலைகளில் உள் நுழைந்து அலசி ஆராயக் கூடியவராக நிலை நிறுத்தி வெற்றியும் பெற்றார்.
குடியரசு கட்சிக்கு அடுத்த 'புஷ்' தேவை. ஜார்ஜ் ஆலன் மற்றும் புஷ்ஷின் தம்பி ஜெப் புஷ் இருவருமே கிட்டத்தட்ட இன்றைய நாயகன் புஷ் போலவே கொள்கை உடையவர்கள். எதிரி நாடுகளைப் போட்டு தாக்குவதில் ஆகட்டும்; மதத்துடன் பின்னிப் பிணைந்து சமூக அமைப்பை கொண்டு செல்வது ஆகட்டும்; பழைய மொந்தை... பழைய கள்.
கொடிவழி அறங்களை பின்பற்றுவதில் ஜார்ஜ் ஆலன் முன்னணியில் நிற்கிறார். புஷ்ஷைப் போலவே பொலிடிகலி இன்கரெக்டாக பேசுவது, அறிவு ஜீவிகளுக்கு தான் தலைவனல்ல என்று எதிர்பார்ப்பை குறைத்து மதிப்பிட சொல்வது என்று பலவகையிலும் தொடர்ச்சியை விரும்பும் வேட்பாளர்களின் நாயகனாக பார்க்க வைக்கிறார்.
இருந்தாலும் ஜனாதிபதியை விட்டு வித்தியாசப்படுத்திக் காட்டிக் கொள்ள 9 பேர் முயல்கிறார்கள்.
 |
ஃப்ளோரிடா கவர்னர் ஜெப் புஷ்
தற்போதைய ஜனாதிபதியின் தம்பி. களத்தில் இன்னும் குதிக்கவில்லை.
|
 |
வர்ஜினியா செனேட்டர் ஜார்ஜ் ஆலன்
தேர்தல் களத்தை ஆராய்ந்து வருகிறார். பிரச்சாரத்துக்கு ஆதரவு திரட்டுகிறார். |
 |
அரிஸோனா செனேட்டர் ஜான் மெக்கெயின்
தற்போதைய ஜனாதிபதி புஷ்ஷ¤க்கு எதிராக போட்டியிட்டு உள்கட்சி தேர்தலில் தோற்றவர். இராணுவ மற்றும் நீதிமன்ற விவகாரங்களில் கடுமையாக அபிப்பிராய பேதங்களை வெளிப்படுத்தியவர். |
 |
நெப்ராஸ்கா செனேட்டர் சக் ஹேகல்
ஈராக் போரை கடுமையாக விமர்சிப்பவர். |
 |
முன்னாள் சபாநாயகர் நியூட் கிங்ரிச்
உள்நாட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளில் இருக்கும் குறைகளை சுட்டிகாட்டி வருகிறார். தனி நபர் ஒழுக்க குறைபாடாக, இரண்டு விவகாரமான விவாக ரத்துகள், திருமணம் சாரா உறவுகள் ஆகியவை நடுநாயகமான எதிர்மறை விமர்சனமாக இவர் மேல் வைக்கப்படும். |
 |
மாஸசூஸெட்ஸ் கவர்னர் மிட் ராம்ணி
ஜனநாயக கட்சியின் ஆதிக்கத்தில் இருக்கும் மாநிலத்தில் கவர்னராக இருந்தாலும், குடியரசு கட்சியின் பாரம்பரிய எண்ணங்களையும் பின்பற்றுவதாகக் காட்டிக் கொள்கிறார். |
 |
ஆளுங்கட்சி தலைவர் பில் ஃப்ரிஸ்ட் டென்னிஸ்ஸீ ஜனாதிபதியை அடியொற்றி நடந்தாலும், உயிரணு பரிசோதனைக்கு ஆதரவு தெரிவித்து வேறுபாட்டை நிலை நிறுத்துகிறார். |
 |
நியு யார்க் கவர்னர் ஜார்ஜ் எஸ் படாகி
கருக்கலைப்பு சட்டத்தில் பழமைவாதிகளுக்கு எதிராக வெளிப்படையான குரல் எழுப்புகிறார். |
 |
முன்னாள் மேயர் ரூடால்ஃப் ஜியூலியானி
நியு யார்க் போன்ற ஜனநாயக கட்சியின் கோட்டைகளை எளிதாக வெல்லக் கூடியவர். தற்பால் விரும்பிகளின் நலன் போன்ற தாராளமயமான கொள்கைகளை நம்புவதால் கலி·போர்னியா போன்ற மாகாணங்களிலும் வரவேற்பைப் பெறுபவர். |
குடியரசு கட்சியின் சார்பில், யார் 2008-இன் ஜனாதிபதி தேர்தலுக்கு போட்டியிடப் போகிறார்களோ !?
|