நம்மில் பலர் ஜோதிடர். நம்மிடம் ஜாதகம் கணிக்கப் பலர் வருவதுண்டு. நாமும் நம்மால் முடிந்தவரை தவறு இல்லாமல் ஜாதகம் கணித்துக் கொடுக்க வேண்டுமென்று விருப்பப் படுகிறோம். இருப்பினும் நாமும் அறியாதவாறு சில தவறுகள் நேர்ந்து விடுகின்றன. அதில் ஒன்றுதான் இந்த "Day Light Saving" - என்பது.
இரண்டாவது உலக மஹா யுத்தத்தின்போது பிறந்தவர்கள் ஜாதகங்கள் கிடைத்தால் பாருங்கள். அப்போது ஒரு குழந்தை இரவு 10.00 மணிக்குப் பிறந்திருந்தால் புதுமணி இரவு10.00 க்கும் பழைய மணி இரவு 9.00 க்கும் ஜெனனம் எனக் குறிப்பிட்டு இருப்பார்கள். அது என்ன புது மணி ? பழைய மணி ? அப்போது நேரத்தை ஒருமணி நேரம் முன்னோக்கி நகர்த்தி இருந்தார்கள். அதாவது காலை 9.00 மணியைப் பத்து மணி என்று அழைத்தார்கள். அதற்கு ஏற்றார்போல் கடிகாரங்களும் அவ்வாறே முன்னோக்கி நகர்த்தப் பட்டன. தற்போது இந்த வழக்கம் இந்தியாவில் இல்லை.
ஆனால் அமெரிக்க நாடுகள், ஐரோப்பியாவில் பல நாடுகள், ஆஸ்த்ரேலியா போன்ற நாடுகளில் இந்த வழக்கம் இன்னும் கடைப் பிடிக்கப் பட்டுவருகிறது. சரி ! ஏன் இவ்வாறு நேரத்தை முன்னோக்கி நகர்த்த வேண்டும். இதனால் என்ன லாபம்? இந்த முறையைக் கண்டுபிடித்தவர் Benjamin Franklin - என்ற அமெரிக்கராவார். இவர் ஒரு விஞ்ஞானி, எழுத்தாளர், அரசியல்வாதி. இதனால் எறிபொருள் மிச்சமாகிறது என்ற உண்மையைக் கண்டுபிடித்தவர். அமெரிக்கவில் ஆண்டுதோரும் April மாதத்தில் Summer - என்று சொல்லப் படுகிற கோடைகாலம் ஆரம்பமாகிறது. அப்போது சூரியன் காலை சுமார் 5.30 -க்கெல்லாம் உதயமாகிறது. சூரிய அஸ்தமனம் சுமார் 8.15 - க்கு ஆகிறது. அதாவது பகல்பொழுது அதிகமாக இருக்கிறது. ஒருவர் காலை 6.30 மணிக்கு எழுந்து தன் காலைக் கடன்களை முடித்துக்கொண்டு 9.00 மணிக்கு அலுவலகம் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார் எனக் கொள்ளுங்கள். இந்த வேனில் காலத்தில் சூரிய உதயம் தொடங்கி ஒருமணி நேரம் கழித்து எழுந்து தன் வேலைகளை எல்லாம் முடித்துக் கொண்டு அலுவலகம் செல்வார். நேரத்தை ஒருமணி நேரம் முன்னோக்கி நகர்த்தினால் காலை சூரிய உதயத்தின் போதே அதாவது 5.30 - க்கே எழுந்திருந்து காலை 8.00 மணிக்கு, (அதாவது advanced time at 9.00) - பணிக்குச் செல்வார். அதேபோல் மாலை ஒருமணி நேரம் முன்னதாகவே வீடு திரும்புவார். சூரிய வெளிச்சம் இருக்கும் போதே மற்ற வேலைகளை யெல்லாம் செய்வார். அதாவது மின்சார வெளிச்சம் தேவையில்லாது சூரிய ஒளியிலேயே தன்வேலைகளைச் செய்து முடிப்பார். அதாவது ஒருமணி நேர மின்சாரம் மிச்சப்படுகிறது. சிறுதுளி பெறு வெள்ளம் என்பார்கள். ஒருநாட்டிலுள்ள அனைவரும் இவ்வாறு ஒரு மணி நேர மின்சாரத்தை மிச்சப் படித்தினால் எவ்வளவு மிச்சமாகும் பாருங்கள்.
இவ்வாறு நேரத்தை ஒருமணி நேரம் முன்னால் செயற்கையாக ஆக்குவதற்கு "Day Light Saving" என்று பெயர். இந்த Day Light Savings என்பது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், கனடா க்யூபா, மெக்சிகோ, பிரேசில், சிலி, ஆஸ்த்ரேலியா, நியூசிலாந்து, ரஷ்யா, ஜப்பான் போன்ற நாடுகளில் வழக்கத்தில் இருந்து வருகிறது. ஆகவே இந்த நாடுகளில் பிறந்தவர்களின் ஜாதகம் கணிக்க வேண்டியது இருந்தால் இந்த Day Light Savings - ஐ சரி செய்து விட்டு ஜாதகம் கணிக்க வேண்டும். இல்லாது அவர்கள் கொடுத்த நேரத்திற்கே ஜாதகம் கணித்தால் பலன்கள் எப்படியிருக்குமெனெ நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். ஆனால் வருடத்தில் எல்லா மாதத்திலும் இந்த Day Light Savings உபயோகத்தில் இல்லை. சுமார் 7 மாதங்க்கள் மட்டுமே உபயோகத்திலுள்ளன. மற்ற மாதங்களில் இல்லை. ஆக ஜாதகம் கணிக்கும் போது அந்த நாளில் இது வழக்கத்தில் இருந்ததா ? என ஊர்ஜிதம் செய்து கொள்வது அவசியம்.
நமது அனுபவத்தில் பல ஜோதிடர்கள் இதைக் கணக்கில் எடுத்துக் கொள்வதில்ல என்பதைப் பார்த்து இருக்கிறோம். நகரில் பல இடங்களில் Computer - ல் ஜாதகம் கணித்துக் கொடுக்கப்படும் என வியாபாரப் பலகை வைத்து இருக்கிறார்கள். அங்கு ஜோதிடமே தெரியாதவர்கள் ஜாதகம் கணித்துக் கொடுப்பார்கள். ஜாதகம் தேவைப் படுவோரும், கணித்துக் கொடுப்போரும் ஜாதகம் தெரியாதவர்கள். ஜாதகம் எப்படி இருக்குமென்பதை நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள்.
|