தீபாவளி மற்றும் ரம்ஜான் பண்டிகையைச் சீர்குலைக்கும் முயற்சியாக டெல்லியில் தீவிரவாதிகள் 3 முக்கிய இடங்களில் குண்டு வைத்துள்ளார்கள். இச்சம்பவத்தால் கிட்டத்தட்ட 70 பேர் பலியாகியுள்ளார்கள் மற்றும் 200 பேர் படுகாயம் அடைந்துள்ளார்கள். இதற்கு காரணமான தீவிரவாதிகள் குறித்து துப்பு தருபவர்களுக்கு 1 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்றும் தகவல் தெரிவிப்பவர்களது பெயர்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் தில்லி போலீஸ் கமிஷ்னர் அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் குண்டு வெடிப்பில் சம்மந்தப்பட்ட தீவிரவாதிகள் குறித்த விசாரணை சரியான திசையில் சென்று கொண்டிருப்பதாகவும் கூடிய விரைவில் அவர்களது பெயரை வெளியிடுவோம் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே ஒரு தொடர் குண்டு வெடிப்புச் சம்பவத்தால் மும்பை நகரம் அதிர்ந்த அதிர்விலிருந்தே பல ஆண்டுகளாகியும் நாம் இன்னும் மீளவில்லை. அதற்குக் காரணமானவர்கள் யார் என்று தெள்ளத்தெளிவாகத் தெரிந்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியாத சூழ்நிலை. அப்படியிருக்க தலைநகரில் இத்தகைய கொடூரச் சம்பவத்தில் ஈடுபட்டிருப்பவர்களை தப்பவிட்டுவிட்டால் மக்கள் காவல்துறை மற்றும் புலனாய்வுத்துறை மீது கொண்டிருக்கும் கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் சிதைந்துவிடும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.
மேலும் இத்தகைய தீவிரவாதச் செயல்களில் ஈடுபடும் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் தந்து ஆதரிக்கும் நாடுகளுக்கு - பின்லேடனை ஒரு காலத்தில் ஆதரித்து வளர்த்து விட்ட அமெரிக்கா இன்று அதே பின்லேடனால் சந்தித்து வரும் அழிவுகளைச் சற்று சிந்தித்துப் பாருங்கள். இன்று இந்தியாவிற்கு எதிராக நீங்கள் கொம்பு சீவிவிடும் தீவிரவாதிகள் பின்னொரு காலத்தில் உங்களுக்கு எதிராகவும் இதே தீவிரவாத நடவடிக்கைகளில் நிச்சயம் ஈடுபடுவார்கள். குறைந்தபட்சமாக்க உங்கள் நாடுகளையும் நாட்டு மக்களையும் இத்தகைய தீவிரவாதிகளிடமிருந்து காத்துக் கொள்ளவாவது உலக அளவில் தீவிரவாதத்திற்கு எதிராக நடந்துவரும் போராட்டத்தில் நீங்களும் கலந்துகொள்ளுங்கள். அண்டை நாடுகளில் பேரழிவை ஏற்படுத்திவிட்டு உங்கள் நாட்டுக்குள் ஒளிந்து கொள்ள நினைக்கும் தீவிரவாதிகளுக்கு துணை போகாமல் அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தகுந்த தண்டனை வாங்கிக் கொடுங்கள். அப்போதுதான் நிஜமான உலக சமாதானம் தோன்றும்.
|