" பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம் மற்றும் கொட்டக்காச்சியேந்தல் ஆகிய நான்கு பஞ்சாயத்துக்களின் தலைவர்கள் மற்றும் அந்த பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஊர் மக்கள் ஆகியோருக்கு வருகிற 13ஆம் தேதி சென்னையில் அரசு சார்பில் பாராட்டு விழா நடைபெறவுள்ளது." இதுதான் தற்போது செய்தித்தாள்களில் இடம்பிடித்து வரும் முக்கிய விஷயம்..
மேற்கண்ட நான்கு பஞ்சாயத்துக்களிலும் குறிப்பிட்ட ஜாதியினரின் கடும் எதிர்ப்பு காரணமாக பல ஆண்டுகளாக தலைவர் தேர்தலை நடத்த முடியாமல் இருந்து வந்த நிலை மாறி சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலின்போது நான்கு தலித் பஞ்சாயத்துக்களின் தலைவர் பதவிக்கும் தேர்தல் நடந்தது. இதில் நான்கு பஞ்சாயத்துக்களுக்கும் புதிய தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டு பதவியேற்பும் முடிந்துள்ளது.
பல ஆண்டுகளாக செயல்படாமல் கிடந்த இந்த பஞ்சாயத்துக்களுக்கு உயிர் கொடுத்துள்ள நான்கு பஞ்சாயத்துக்களின் தலைவர்களுக்கும், இதற்குக் காரணமாக அமைந்த ஊர் மக்களுக்கும் பாராட்டு விழா நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாம். மேலும் 13ஆம் தேதி நடக்க இருக்கும் இந்த விழாவில் கருணாநிதி, ஸ்டாலின், கிருஷ்ணசாமி, ஜி.கே.மணி உள்ளிட்ட திமுக கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்கிறார்களாம்.
இந்தச் செய்தியைப் படித்த பிறகு அழுவதா, சிரிப்பதா என்று நிச்சயம் சிந்திக்கும் திறன் உள்ளவர்கள் குழம்பியிருப்பார்கள். ஒரு ஜனநாயக நாட்டில் ஓட்டுப் போடுவது குடிமக்கள் அனைவரது கடமையாகும். ஒட்டுப் போடாமல் புறக்கணிப்பதோ அலட்சியப்படுத்துவதோ குற்றம். நம் கடமையை நாம் சரியாக செய்யவில்லை என்பதற்கான ஆதாரம். ஓட்டுப்போடாததன் மூலம் தவறானவர்கள் நாட்டை ஆள நாமே மறைமுகமாக உதவுகிறோம். அரசாங்கம் நமக்கு அதைச் செய்யவேண்டும், இதைச் செய்யவேண்டும் என்று தீவிரமாக எதிர்பார்க்கும் நாம் ஒரு பொறுப்பான அரசாங்கத்தையும் அமைப்பதும் நம் கடமை என்பதை நாம் எத்தனை தீவிரமாக சிந்திக்கிறோம்?
இந்த நான்கு பஞ்சாயத்தைச் சேர்ந்த மக்களிடமும் இவ்வளவு நாட்களாக ஏன் தேர்தலைப் புறக்கணித்தீர்கள் என்று கேட்டு விசாரணைக்கு ஏற்பாடு செய்திருந்தாலோ அல்லது இவ்வளவு நாட்களாக அங்கே தேர்தல் நடக்க விடாமல் தடுத்த முக்கிய புள்ளிகளுக்கு தகுந்த தண்டனை வழங்கியிருந்தாலோ சரி.. அதை விட்டுவிட்டு இன்றைக்காவது ஒட்டுப்போட்டீர்களே என்று ஊர்கூடி அவர்களுக்கு விழா எடுப்பது எப்படி முறையாகும்? அதுவும் அடுத்த தேர்தலில் இத்தொகுதிகள் பொதுத்தொகுதிகள் ஆக்கப்படும் என்ற வாக்குறுதியை ஆள்வோர்கள் இந்தப் பஞ்சாயத்தைச் சேர்ந்த பெரியமனிதர்களிடம் அளித்ததைத் தொடர்ந்துதான் இப்போது தேர்தல் நடத்தவே சம்மதித்துள்ளார்கள் இப்பகுதி மக்கள்.
இந்நிலையில் என்னவோ பெரிய சாதனை செய்ததைப் போல முதல்வர் முதற்கொண்டு அரசே இவர்களை இப்படிப் பாராட்டினால் நாளை இன்னும் நான்கு பஞ்சாயத்துகளில் தேர்தலை வேண்டுமென்றே நடைபெறவிடாமல் செய்வார்கள்.. கண்டித்து தண்டனை வழங்க வேண்டிய விஷயத்தில் பாராட்டு விழா எடுப்பது என்பது நகைப்பிற்கு மட்டுமல்ல தீவிர சிந்தனைக்கும் ஆளாகவேண்டிய விஷயம்.
அன்பால் எல்லாவற்றையும் சாதிக்கலாம் என்ற காந்தியம் தேவைதான். ஆனால் அரசாங்கம் தேவையான நேரத்தில் தேவையான கண்டிப்புடன் இருந்தால் தான் நாடு நாடாக இருக்கும். படையெடுத்து வரும் பக்கத்து நாட்டை காந்தியத்தால் அல்ல நம் படைபலத்தால் தான் அடக்க முடிந்தது. எல்லையில் செய்யும் அதே வேலையை தேவையான விஷயத்திற்காக நாட்டிற்குள்ளேயும் செய்தால்தான் நாடு நாடாக இருக்கும். அதை விடுத்து இப்படி பாராட்டுவிழா நடத்திக் கொண்டிருந்தால் ஒரு பாப்பாபட்டி இல்லை.. ஓராயிரம் பாப்பாபட்டி பஞ்சாயத்துகளும் அது தொடர்பான பிரச்சனைகளும் முளைக்கும்... சிந்திக்க வேண்டியவர்கள் சிந்திப்பார்களா ?
|